Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்கற்ப நிராகரணம் பகுதி-2
முதல் பக்கம் » சங்கற்ப நிராகரணம்
சங்கற்ப நிராகரணம் பகுதி-1
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2013
03:11

மெய்கண்ட நூல்கள் பதினான்கினுள் இறுதியில் வைத்து எண்ணப்படுவது சங்கற்ப நிராகரணம். ஆசிரியர் உமாபதி சிவம் அருளிச் செய்த எட்டு நூல்களுள் இதுவும் ஒன்று என்பர். சங்கற்பம் என்பது கொள்கை விளக்கம். நிராகரணம் என்பது கொள்கை மறுப்பு. இந்நூலுள் ஒன்பது மதங்களின் கொள்கைகள் அவ்வச் சமயத்தாரால் கூறப்பட்டு அதற்கு அடுத்த படியில் உள்ள சமயத்தாரால் முறையே மறுக்கப்படுகின்றன. இறுதியில் சைவ வாதி நிராகரணத்துடன் நூல் நிறைவு பெறுகிறது.

சிவஞான சித்தியாரின் பரபக்கம் பதினான்கு புறச் சமயங்களை மறுத்து எழுதப் பெற்று அதனைத் தொடர்ந்து வரும் சுபக்கம் சைவ சித்தாந்தக் கொள்கையின் உண்மையைத் தெளிவுற விளக்கிக் காட்டுகிறது. சங்கற்ப நிராகரணத்துள் முதலில் கூறப்பட்டுள்ள மாயாவாதியின் கருத்து ஒன்றே புறச் சமயத்தைச் சார்ந்ததாகும். மற்றைய எட்டு மதங்களும் அகச் சமயங்களும் அவற்றின் உட் பிரிவுகளும் ஆகும். பாயிரத்துள் வருகின்ற ஏழஞ்சு இரு நூறு எடுத்த ஆயிரம் வாழும் நற் சகனம் மருவா நிற்ப என்ற பகுதி இந்நூல் எழுதப் பெற்ற காலம் சக ஆண்டு 1235 என்று தெளிவு படுத்துகிறது. அதிலிருந்து இந்நூலின் அரங்கேற்றம் கி.பி 1313 என்பது புலனாகிறது. இந்தச் செய்தியின் அடிப்படையிலேயே மெய்கண்ட சாத்திரங்களின் காலமும் கணிக்கப்படுகிறது.

இந்நூல் அமைப்பு முறை மிகவும் பாராட்டுதற்குரியது. முதலில் கூறப்பட்ட மதக் கொள்கையில் ஏற்புடையவற்றை ஏற்றுக் கொண்டு ஏற்கத் தகாதனவற்றை மறுத்து அதனை அடுத்த மேற்படியில் உள்ள மதத்தினர் தம் கருத்தை எடுத்துரைப்பதாக அமைந்து இறுதியில் சைவ சித்தாந்தத்தின் செம்பொருளை சிவப்பிரகாசச் செழுந்தமிழ் உண்மையை, அருளுடன் ஆய்ந்து கொள்ளத், திருவருள் வினவல் திருந்திடும் அன்றே என்று நிறைவு செய்கிறார் ஆசிரியர்.

காப்பு

திருந்திய அருந்தவம் பொருந்து பல் முனிவர்
கமையாக் காதல் அமையாது பழிச்சும்
நிகரில் செக்கர்ப் புகர் முகத்து எழுந்த
புனிற்று வெண்பிறைத் தனிப்பெருங் கோட்டுத்
தழைசெவி மழைமதப் புழைநெடுந் தடக்கை
வாள்தரும் மும்மை நாட்டம் நால்வாய்ப்
பாசம் அங்குசம் தேசுறும் எயிறுஒண்
கனியிவை தாங்கும் புனித நாற்கரத்து
அங்கதம் கடகம் பொங்கிழை யாரம்
நிறைமணிச் சுடிகைக் கறையணல் கண்செவி
கொண்டதிண் பெரும் பண்டிக் குறுந்தாள்
களிறுதன இருகழல் கருதா
வெளிறுஉறு துயரம் வீட்டினம் பெரிதே.

செப்பமாகிய அருந்தவம் புரிந்த பல முனிவர்கள், நிரம்பாத அன்புடன் ஒழியாது வழிபடும் ஒப்பற்ற செவ்வானம் போன்ற புள்ளியையுடைய திருமுகத்தில் பிள்ளை வெண்பிறை போல ஒற்றைக் கொம்பும் தழைந்த காதுகளிரண்டும் பொழிகின்ற மும்மதமும், உள்துளை உடைய நீண்ட துதிக்கையும், ஒளி பொருந்திய முக்கண்ணும், தொங்குகிற திருவாயும், ஒரு கையில் பாசமும், ஒரு கையில் அங்குசமும், மற்றொரு கையில் ஒடித்தெடுத்த கொம்பும், இன்னொரு கையில் கனியும் தாங்கிய திருக்கரங்களையும் அணி தரித்த தோளும் கடகமும் முத்து மாலையும் அணிந்த திருத்தோள்களும் மணியுடைய பாம்பினைத் திருஅரையில் கச்சாகக் கட்டிய திருவயிற்றையும் குறிய திருவடிகளையும் உடைய ஓங்கார வடிவமாகிய யானைமுகத்து வினாயகப் பெருமானது இரு திருவடி மலர்களையும் நினைந்து வணங்கி அறியாமையினால் உண்டாகிய துன்பத்தை அறவே ஒழித்தனம்.

கமையாநிரம்பாத, புகர்முகம்யானையின் முகத்தில் தோன்றும் வெண்புள்ளிகள் புகர் எனப்படும். மும்மை நாட்டம்மூன்று கண்கள். அவை கதிரவன், திங்கள், நெருப்பு, நால்வாய் தொங்குகின்ற வாய், சுடிகைநாகப் பாம்பின் தலையிலே விளங்குகின்ற மணி. பண்டிவயிறு. கருதாகருதி.

பாயிரம்

பெரும்கடல் உதவும் கரும்கடு வாங்கிக்
கந்தரத்து அமைத்த அந்தம்இல் கடவுள்
பாலரை உணர்த்தும் மேலவர் போலக்
கேட்போர் அளவைக் கோட்படு பொருளால்
அருளிய கலைகள் அலகிலவால் அவை
பலபல சமயப் பான்மைத்து அன்றே
அஃதால் அந்நூல் தன்மை உன்னிய
மாந்தர் இதுவே பொருள்என்று அதன்நிலை

அறைதலின் வேற்றுஓர் பனுவல் ஏற்றோர்க்கு
இசையா மாறுபாடு கூறுவர் அதனால்

புறச்சம யங்கள் சிறப்பு இலஆகி
அருளில் மாந்தரை வெருள்உற மயக்கி
அலகைத் தேரின் நிலையில் தீரும்
ஈங்கு இவை நிற்க நீங்காச் சமயம்
மூவிரு தகுதி மேவிய தாமும்

ஒன்றோடுஒன்று சென்றுஉறும் நிலையில்
ஆறுமாறா வீறுடைத்து இவற்றுள்
எவ்வம் இல்லாச் சைவநற் சமயத்து
அலகில் ஆகமம் நிலவுதல் உள அவை
கனகம் இரணியம் காஞ்சனம் ஈழம்

தனம்நிதி ஆடகம் தமனியம் என்றுஇப்
பலபெயர் பயப்பதோர் பொருளே போலப்
பதிபசு பாச விதிமுறை கிளக்கும்
வாய்ந்த நூல்கள் ஆய்ந்தனர் ஆகி
ஆசான் ஆகி வீசிய சமத்துடன்

ஏழ்அஞ்சு இருநூறு எடுத்த ஆயிரம்
வாழும்நல் சகனம் மருவா நிற்பப்
பொற்பொது மலிந்த அற்புதன் ஆனி
ஆறாம் விழலில் பொன்தேர் ஆலயத்து
ஏறா எண்மர் நிரையில் இருப்ப

மயங்கு வாத மாயா வாதி
முயங்கிட ஒருதலை முதுவெதிர் மணிசேர்
பெண்ணை சூழ்ந்த வெண்ணெய்அம் பதிதிகழ்
மெய்கண்டவன் அருள் கைகண் டவர்களில்
ஒருவர் ஒருதலை மருவி இருப்ப

வஞ்சப் பிறவிக்கு அஞ்சி வந்து ஒருவன்
எது இறை அருள்என இதுஎனும் மாயா
வாதியை அயலினர் மறுதலைத்து அருள்தர
மற்றவர் அயலினர் அவர்உரை மறுத்துச்
சொற்றர அயலரின் அவரும் தொலைவுற்று

இன்னே எழுவரும் முன்னே கழியுழி
ஆங்குஅயல் இருந்த அருளினர் அழகுஇது
நீங்கள் சங்கற்பம் நிராகரித் தமைஎன
மற்றவர் உரைத்த சொற்றரு பொருள்கொடு
வாதம் செற்பை விதண்டையும் ஏதுவும்

ஓது நால்வகை உவமையும் திகழ்தர
அருள்சேர் மாந்தர் வெருள் சேராமல்
தர்க்கமும் விடையமும் கற்க
நற்கவி மாந்தர் நகரநவிற் றுவனே.

பெருங்கடலிலே தோன்றிய கொடிய நஞ்சினை வாங்கித் தம் கழுத்திலே தரித்துக் கொண்ட அழிவற்ற தன்மையுடைய சிவபெருமான். தம் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டும் பெற்றோர்களைப் போல அவரவர் அறிவுக்குத் தகுந்தபடி அளித்தருளிய நூற்கள் கணக்கிலடங்காதன அவை கேட்பவர்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப அமைந்தன,. ஆதலால் தம்முள் வேறு பட்டுப் பலப்பல சமயங்களை உணர்த்துகின்ற நூற்களாக அமைந்தன. அந்தந்த நூல்களைக் கற்றறிந்த மாந்தர் அதுவே பொருள் என்று கொண்டு மற்றைய நூல்களை ஏற்பதற்கு இசையா து அவற்றைப் பொருந்தாதன என்று மறுப்பார்கள்.

ஒருவருக்கொருவர் மாறுபடச் சொல்வதனால் சிறப்பு அற்றனவாகிய புறச் சமயங்கள் திருவருளுக்கு ஆட்படாத மாந்தர்களை அச்சுறுத்தியும் மயக்கியும் கானல் நீர்போல் அவர்களை அலைக்கழிக்கும். இவை தவிர அகச்சமங்கள் எனப்படும் சைவம் பாசுபதம் மாவிரதம் காளாமுகம் வாமம் வைரவம் ஆகிய ஆறும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டும் தம்மில் தனித்தனி உயர்ந்தும் வழங்குகின்றன.

இவற்றுள் குற்றமற்ற சைவசமயத்தில் எண்ணிறந்த ஆகமங்கள் வழங்குகின்றன. அவை பலவாயினும் அவற்றுள் கூறப்படும் பொருள் முடிவு ஒன்றே. பொன் என்ற ஒரு பொருளைக் குறிப்பதற்கு கனகம், இரணியம், காஞ்சனம், ஈழம், தனம், நிதி, ஆடகம், தமனியம் என்று பல சொற்களைப் பயன்படுத்துவது போன்றது இது. எந்தப் பெயரில் ஆகமம் வழங்கினாலும் ஆகமங்கள் அனைத்தும் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் இயல்பையே உணர்த்தும், ஆகமங்களைக் கற்றுணர்ந்த பெரியோர்கள் பலர் ஆசிரியத் தன்மை பெற்று வீற்றிருந்தனர்.

தில்லைப் பதியில் பொன்னம்பலத்தில் திருக்கூத்து இயற்றும் அம்பலவாணப் பெருமானின் ஆனித் திருவிழாவில் ஆறாம் திருநாளில் சக ஆண்டு ஆயிரத்து இருநூற்று முப்பத்து ஐந்தில் திருத்தேர் மண்டபத்தில் ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்த ஆசிரியன்மார் எண்மார் வீற்றிருந்தனர்.

ஒரு புறம் முன்னோடு பின் முரணாகத் தன் தத்துவங்களைக் கூறும் மாயாவாதி ஒருவன் இருந்தனன் மற்றொரு புறம், முதிர்ந்த மூங்கில்கள் முத்துக்கள் சிதறப்பாய்கின்ற பெண்ணை ஆறு சூழ்ந்த திருவெண்ணெய் நல்லூரிலே அவதரித்தருளிய மெய்கண்ட தேவ நாயனாரின் திருவருள் கைவரப் பெற்ற பெரியார் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது ஒருவர் கொடிய பிறவிப் பிணிக்கு அஞ்சி நல்லாறு எது இறைவன் திருவருள் எத்தகையது என வினவ, முதலில் அங்கிருந்த மாயாவாதி தன் நூலின் வழி நின்று அதுவே பொருள் என்று எடுத்துரைத்தனன். அவன் அருகே இருந்த மற்றொரு சமயவாதி அவன் கொள்கையை மறுத்துத் தம் சமயக் கொள்கையை எடுத்துக் கூறி அதுவே பொருள் என்றார். மற்றொரு வராலே அவரும் மறுக்கப்பட்டார். இவ்வாறு ஒருவரை ஒருவர் மறுத்து எண்மரும் ஒதுக்கப்பட்டார்கள்.

மெய்கண்ட தேவரின் அருள் பெற்ற ஆசிரியர். நீங்கள் ஒருவரை ஒருவர் மறுத்த தன்மை நன்று. இனி நான் நீங்கள் கூறிய பொருள்களை வாதம் செற்பை விதண்டை ஏது நால்வகை உவமைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தித் திருவருளுக்கு வழிகாட்டுவதாகவும் மலைவு என்னும் அச்சத்தைத் தீர்ப்பதாகவும், மாறுபட்ட பொருள்களையும் உண்மைப் பொருள்களையும் ஒருங்கே உணர்த்துவதாகவும் கவி வல்ல புலவர்கள் இவனும் ஓர் நூல் செய்தனனே என்று நகைக்கத் தக்கதாகவும் ஓர் நூல் இயற்ற முற்பட்டேன் என்று அருளினார்.

இப்பாயிரம் ஆசிரியர் உமாபதி சிவத்தினால் இயற்றப் பெற்று நூல் முகத்து அமைக்கப்பட்டது இதில் காலம், களம், கேட்போர் ஆகிய பாயிரத்துக்கு விதிக்கப்பட்ட இலக்கணங்கள் பொருந்தி உள்ளமையைக் காணலாம் எல்லா அருள் நூல்களும் சமயங்களும் சிவபெருமானால் அருளப் பெற்றவை என்பது சைவ சித்தாந்தத்தின் கொள்கை, அருளியவன் இறைவனே யானால் அவற்றுக்குள்ளே கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் தோன்றுவதேன் என்ற வினா எழுவது இயல்பு. அதற்கு ஆசிரியர் விடை கூறுகிறார். தந்தையும் தாயும் தங்கள் குழந்தைகளுக்கு அறிவு புகட்ட முற்படும்போது அக் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி நிலைக்கு ஏற்பவே கற்பிப்பார்கள். எனவே கல்வி என்பது கற்றுக் கொடுப்பவரின் தகுதிக்கு ஏற்றதாக இல்லாமல் கற்றுக் கொள்பவர்களின் தகுதிக்கு ஏற்றதாகவே அமைய வேண்டும். அவ்வாறே இறைவனும் உயிர்களின் பக்குவ நிலைக்கு ஏற்பப்படிமுறையிலே அமைந்த சமயங்களையும், சமய நூல்களையும் அருளிச் செய்தான் என விளக்குகிறார். தர்க்கமிடும் தொன்னூல் பரசமயம் தோறும் அது அதுவே நன்னூல் எனத் தெரிந்து நாட்டுவித்து எனக் கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபர முனிவரும், ஆறு சமயத்து அவரவரைத் தேற்றும் தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே ஏற்றும் தகையன எனத் திரு இன்னம்பர்த் திருப்பதிகத்தில் திருநாவுக்கரசு நாயனாரும் அருளியுள்ளமை இங்கு நினையத் தக்கன.

இவற்றுள் புறச் சமயங்கள் கானல் நீர் போன்றவை என்று கூறி ஒதுக்கினார். அகச் சமயங்கள் ஆறனுள் சைவ சமயமே உயர்ந்தது. குற்றமற்றது எனக் கூறிய ஆசிரியர். அதிலும் பல ஆகமங்கள் உள்ளதற்கு விளக்கம் கூறுகிறார், பொன் ஒன்றே கனகம் இரணியம் முதலிய பெயர்களிட்டு வழங்கப்படுவது போல, ஆகமங்கள் பல ஆனாலும் அவை யாவும் பதி, பசு, பாசம், என்னும் முப்பொருள் உண்மையை உரைப்பதனால் ஒரே தன்மை வாய்ந்தனவே என்று அமைதி கூறினார்.

காலமும் களமும் கூறுவாராகி, தில்லையில் சகஆண்டு 1235 ல் ஆனித் திருவிழாவில் ஆறாம் திருநாளில் தேர் மண்டபத்தில் இந்நூல் தோன்றும் களம் அமைந்தது என்றார். மாயாவதி உட்பட எண்மரும் மெய்கண்ட சந்தானத்துள் வந்த அருளாசிரியர் ஒருவருமாக இந்த அவை அமைந்தது என்றார்.

வாழ்க்கையில் உண்மை உணர்ந்து உய்வு தேட விழைந்தான் ஒருவன் வினாவ ஒவ்வொருவராகத் தத்தம் சமயக் கருத்துக்களை எடுத்துரைத்தமையும் இறுதியில் மெய்கண்ட சந்தானத்து ஆசிரியர் சைவ சித்தாந்தத் தேனமுது புகட்டியமையையும் கூறினார். அடையடக்கமாகத் தாம் எழுதலுற்ற இந்நூல் நற்கவிப் புலவர்களுக்கு நகைப்பினை விளைவிக்கும் என்று குறிப்பிட்டார்.

கடுநஞ்சு அலகைத்தேர்பேய்த்தேர், கானல் நீர், கனகம் முதலிய எட்டுப் பெயர்களும் பொன்னின் வகைகளைக் குறித்தன. முதுவெதிர்மணி முதிர்ந்த மூங்கிலில் விளைந்த முத்து, சங்கற்பம்கொள்கையை எடுத்துரைப்பது. நராகரித்தமை மறுத்தமை வாதம் தருக்க முறையில் வினாவி விளங்குவது. செற்பம் பிறர் கொள்கையை மறுத்துத் தன் கொள்கையை நிலை நாட்டுவது. விதண்டை கன் கொள்கையைக் சொல்லாமல் பிறர் கொள்கையை மறுப்பது, ஏதுஇயல்பு, காரியம் அனுபலப்தி என மூன்று (சிவஞான சித்தியார் சுபக்கம் 16) உவமை நான்கு வகைப்படும் வினை, பயன், மெய், உரு என்பன அவை(தொல் உவமை இயல்)

நூல்
மாயாவதி சங்கற்பம்


நவிற்றிய நிரையில் அவித்தையினோன் உரை
நித்தன் அறிவன் சுத்தன் அகண்டிதன்
நிருவிகற்பன் நிர்த்தத்துவன் நிரஞ்சனன்
சொல்வகை எவையும் தொடராத் தூய்மணி
வரம்பு இல் வேதச் சிரம்தரு பரம் பொருள்

சத்தாய் எவையும் தானாய் அவித்தை
தொத்தாது உயர்ந்த தொல்சுடர் மூவர்
இன்ன தன்மையன் ஏகன் அநேகன்
கன்னல் பெரும் சுவை தன்னில் பிறவாப்
பெற்றயின் இருந்து பொற்பணி இயல்பினில்
வான்வளி அனல்நீர் மண்மருந்து அன்ன
மானதாது ஆறுஐங் கோசத்
தொகுதி யாக்கைப் பகுதியது ஒருபுடை
சுத்தி வெள்ளி ஒத்தென மித்தையில்
தான்எனல் ஆகும் தன்மைத்து உலூதையில்

சில்நூல் தகையின் வேற்றுமை மரீஇயது
என்னப் பன்மையது எனில்இலை பழம்பூத்
தோல்நார் வயிரம் தருத்தரும் தொன்மையில்
வான்நாரம் திரை நுரைதரு வாய்மையில்
கூடும் அசித்தைச் சித்து உதவாது எனில்


நெல்பதர் பலாலத்தில் பரம் தரும் இது
தன்இயல்பு என்றும் விளையாட்டு என்றும்
முன்உள மறைகள் யொழிதலின ஒருநூல்
பன்மணி நிலையும் பசுப்பால் எனவும்
பலஅகல் நீரில் அலர்கதிர் எனவும்

கூவல்ஆழி குளம்சிறு குழிகால்
வாவி யாவையும் வருபுனல் எனவும்
அவ்அவற்று அடங்கி ஆடியுள் நிழல்எனத்
தோன்றி யாக்கைநல் காந்தத்து இரும்பும்
கனவில் தீங்கும் கங்குலில் கயிறும்

புனலில் தோன்றும் பேய்த்தேர்ச் செய்தியும்
அன்னதும் பின்னர் நன்னிறப் பளிங்கு எனப்
பதினாற் கரணத்து ஒரு மூன்று அவத்தை
நாளும் நாளும் நயந்து உறும் இருபயன்
தன்னில் சாராத் தொன்மைத் தன்மை

தற்பண நிழல்கண் குற்றிபாய்ந்து அற்றே
இவ்வியல் பந்தப் பவ்வம் அது அகல
விண் முதல் தந்த கொண்மூப் படலத்து
இருள் அற உதித்த கால்தக விவேகம்
தன்னில் தோன்றிச் சாதகம் அனைத்தையும்

மன் அகப் பிரிப்பும் மடிஇழை வாங்கலும்
போல ஞாலம் பொய் அறக் கழீஇத்
தானே தானாய்த் தன்னில் தன்னைத்
தானே கண்டு தன்நலம் உற்று
வசையில் தத்துவ மசிபதத் தெளிவால்

அகமே பிரமம் ஆயினன் என அறிந்து
அசலன் ஆகி நற்சலசல மதியெனத்
கண்டிடும் உடலம் விண்டுஅகல் கடத்து
மங்குல் அதுஉடைதர எங்குமாம் தகைத்தே
இவ்வகை உணர்ந்து செய்தொழில் அறாத

மடவோர் தாமும் கடனா இயற்றும்
கன்ம காண்டத் தொன்மைப் புரிவால்
தோற்றிய வித்தை மேற்கடை அரணியில்
எழுந்துஎரி அவற்றை விழுங்கியது என்னத்
தன் ஒழிந்து உள்ள தானாய் ஒழியும்

அந்நிலை அன்றி அழிவறு முத்தி
ஏயாது என்றுதன் இயல்பை
மாயா வாதி வகுத்து உரைத்தனனே

முன் கூறப்பட்ட கொள்கையும் மறுப்பும் என்ற வரிசையில் முதலாவதாக மாயா வாதி தன் கருத்தை எடுத்துரைத்தான். அவித்தை என்று ஒன்றை ஏற்றுக் கொண்ட எமது கொள்கை இது. பிரமப் பொருள் நித்தமானது. அறிவே வடிவானது. தூய்மையானது பகுக்கப்படாதது. மாறுபாடற்றது. தத்துவங்களைக் கடந்தது. ஒளி வடிவானது. சொல்லால் உரைக்க முடியாத தூய மணி போன்றது. வரம்பற்ற வேதங்களின் முடிவிலே விளங்குகின்ற பரம்பொருள் என்றும் உள்ள பொருள். உலகத்தில் உள்ள எப்பொருளும் தானாக விளங்குவது. அவித்தை என்னும் அறியாமையால் பற்றப்படாது உயர்ந்த தொன்மையான ஒளி. என்றும் இளமையோடிருப்பது. இத்தகைய தன்மை உடைய ஒரே பரம் பொருளே பல்வேறு உயிர்களாகக் காட்சி அளிக்கிறது. அப்படிக் காட்சி யளிக்கும் காலத்துக் கரும்பின் இனிப்புச் சுவையைக் கரும்பே அறியாதது போலத் தனது இயல்பைத் தானே அறியாதிருக்கும். பொன் ஒன்றே பல்வேறு வகைப்பட்ட அணிகலன்களாகி, வெவ்வேறு பெயரால் அழைக்கப்படுவது போல அப்பரம்பொருளே வானம், காற்றும், தீ, நீர், மண், மருந்து உணவு இவற்றாலான தாதுக்கள் ஆறு ஆகவும், ஐந்து கோசங்கள் கொண்ட உடம்பாகவும், காட்சியளிக்கும், சிப்பி மயக்க அறிவினால் வெள்ளி போன்று தோன்றுவதைப் போல பரம்பொருள் உலகப் பொருள்களாய்த் தோன்றும், அப்படியாயின் இரண்டும் வேறு வேறாகப் புலப்படுவது எதனால் எனக் கேட்பின் சிலந்திப் பூச்சியின் உடலின் தோன்றும் மெல்லிய இழை. அப்பூச்சியிலிருந்து வேறு பட்டுத் தோன்றுவதைப் போன்றது இது. சிலந்திப் பூச்சிலிருந்து தோன்றும் நூல் ஒரே தன்மையாக இருக்க உலகத்துப் பொருட்கள் பல வேறு வடிவாகக் காட்சி தருவானேன் என வினவில் ஒருமரத்தில் இலை, பழம், பூ, மரத்தின் தோடு, நார், மரத் தண்டின் நடுவிலிருக்கும் வைரம் இவற்றைப் போலவும், நீர் நிலையில் அலை, திரை. நீர்த் துளி, நீர்க் குமிழி ஆகியவை தோன்றி ஒடுங்குவதைப் போலவும் உலகத்துப் பொருள்களும் பல வகைப் பட்டுத் தோன்றி அழியும் என்று கூறப்படும்.

மேற் கூறப்பட்டவை எல்லாம் அறிவற்ற பொருள்களிலிருந்து தோன்றிய அறிவற்ற பொருள்கள், அறிவுடைப் பொருளான பரம் பொருளிலிருந்து அறிவற்ற பொருட்கள் எவ்வாறு தோன்றும் என்ற வினாவிற்கு உண்ணத் தகுந்த நெல் பயனற்ற பதரையும், வைக்கோலையும் தருவது போல அறிவுடைய பிரமப் பொருள் அறிவற்ற உலகாய் வேறு பட்டு நிற்கும் என்று விடை தருவர்.

மாறுதலற்ற பிரமம் இவ்வாறு மாறுபாடுகளைக் கொள்வானேன்? எனின் அது பிரமத்தின் இயல்பு என்றும் அது பிரமத்தின் விளையாட்டு என்றும் கூறுவர். இவ்வாறு கூறுவதற்கு ஆதாரம் என்ன என்று கேட்டால் தொன்மையான வேதங்கள் அவ்வாறு சொல்கின்றன என்பர். உலகத்துப் பொருள்கள் பல்வேறுவகையாக வரையறைக்கு உட்பட்டு இருப்பது போலப் பிரமப் பொருளும் வரையறைக்கு உட்படுமோ என்ற கேள்விக்கு, பல நிறம் கொண்ட மணிகள் ஒரே நூலில் கோக்கப்பட்டிருந்தால் அம்மணிகளின் வழியாகக் காணப்படும் நூலின் நிறம் வேறு படினும் உண்மையில் நூலின் நிறம் வேறுபாடு அடைவதில்லை. பலவேறு நிறங்களுடைய பசுக்களில் சுரந்த பால் ஒரு தன்மையாகவே இருக்கிறது நீர் நிரம்பிய பல கலங்களிலும் எதிரொளிக்கும் ஞாயிற்றின் நிழல், பாத்திரத்திற்கு ஏற்ப வேறுபடுவதில்லை. ஒன்றாகவே இருக்கும். கடல், குளம், கிணறு, பள்ளங்கள், வாய்க்கால் இவை எல்லாம் வெவ்வேறு வகைப்பட்டு இருந்தாலும் அவற்றில் உள்ள தண்ணீர் ஒரே தன்மையாக இருக்கும் என்பர்.பிரமப் பொருளே இவ்வாறு பல வகை உயிர்களிடத்தும் தோன்றுமாயின் அது கட்டுக்குட்பட்டதாகாதோ என்ற கேள்விக்கு கண்ணாடியில் தோன்றும் நிழல் அதில் தோய்வு அறத் தோன்றி நின்று விலகுவது போல, பிரமமும் உடலில் தோன்றுமேனும் அதிலே தோய்வு அற்று இருக்கும் என்பர் உடலிலே தோயாத நிலையில் உடல் எவ்வாறு செயல்படுகிறது எனக் கேட்பின் காந்தம் தோய்வு அற்று நிற்கின்ற நிலையில் இரும்பு செயல்படுவது போல என விடை தருவர்.

உடலில் நிற்கும் அறிவு இன்பத் துன்பவங்களுக்கு ஆட்படுவானேன் என்றால், கனவிலே கண்ட நிகழ்ச்சியினால் விளைந்த அச்சம் விழிப்பு வந்தவுடனே நீங்குவதைப் போலவும், இரவில் வளைந்து கிடக்கும் கயிற்றினைக் கண்டு பாம்பு என அஞ்சி விடிந்த பிறகு அது கயிறே எனத் தெளிவது போலவும், நீர் வேட்கை கொண்ட ஒருவன் தூரத்தே தெரிகின்ற கானல் நீரைத் தண்ணீர் என நினைந்து அருகில் வந்து காணும் போது உண்மை தெளிவது போலவும், பிரமப் பொருள் உடம்போடு கூடி நின்று இன்பத் துன்பங்களை நுகர்ந்து வந்தாலும் நல்லாசிரியனிடத்து வேதாந்தப் பயிற்சி பெற்று உண்மையை உணரும்போது இத் தோற்றரவுகள் எல்லாம் மாறி உண்மையை அறிவான் என்பர்.

உடலோடு கூடிய உயிர் பதினான்கு கரணங்களைக் கொண்டும், மூன்று அவத்தைகளுக்குட்பட்டும், நாள்தோறும் இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் அனுபவித்தும் வருவது எவ்வாறு எனின், உண்மையில் இந்த மாற்றங்கள் எல்லாம் சீவான்மாவைத் தாக்குவதில்லை. ஒருவனது நிழல் கண்ணாடியில் தோன்றும் போது நிழலைக் கோல் கொண்டு தாக்கினால் அவனுக்கு எந்தத் துன்பமும் விளையாது. அது போலவே பரமான்மாவுக்கும் மாற்றம் இல்லை என்பர்.

இத்தகைய இயல்புடைய மாயா வாதைகள் எவ்வாறு நீங்கள் எனில், வான் ஆகிய முதற் காரணத்தில் தோன்றிய மேகக் கூட்டம் அதிலேயே தோன்றிய காற்று வீசும் போது விலகி ஞாயிற்றின் ஒளி விளங்குவது போல அதிலிருந்தே விவேகம் வெளிப்பட்டுத் தன் இயல்பான ஞானம் விளக்கத் தோன்றும். புல் வேய்ந்த குடிசை பிரிக்கப்பட்டுக் கழிகளும் அகற்றப் பட்டால் குடிசை என்று ஒரு பொருள் இல்லாது போவது போலவும் ஊடும் பாவுமாய்ச் சேர்ந்திருக்கிற நூல் இழைகள் ஒன்றொன்றாக நீக்கப்பட்டால் துணி என்ற பொருள் இல்லாது போவது போலவும் ஒவ்வொரு தத்துவமாக இது நானன்று இது நானன்று என்று கழிக்குமிடத்துச் சீவான்மா என ஒரு பொருளே இல்லாது போகும்.

தாமே பிரமம் என்பதை மீண்டும் உணர்ந்து, தானாகித் தன்னிலே தன்னைக் கண்டு தன் இன்பத்தைத் தானே நுகர்ந்து வரும். இந்த நிலை எய்தும்போது வேதத்துள் கூறப்பட்ட மகா வாக்கியம் எனப்படும் தத்துவம் அசி என்ற சொற்றொடரின் பொருள் தெளிவாகும். அந்தத் தெளிவால் அகம் பிரமம் என்ற அறிவு உண்டாகும். அப்போது நிலவு அசைவற்று இருந்தும் நீரில் தோன்றும் நிலவின் நிழல் அசைவது போலவே அதுவரை தான் நுகர்ந்த துன்பங்கள் உடலைப் பற்றினவே தவிர, சீவான்மாவைப் பற்றியன அல்ல என்று உணரும். இதுவே சீவன் முத்தி எனப்படும். குடம் உடைந்த போது அக்குடத்தினுள் இருந்த ஆகாயம் வெளில் உள்ள பேராகாயத்தோடு மாறுபாடில்லாமல் கலந்தது போல, உடலை விட்டு நீங்கிய சீவான்மா பரமான்மாவோடு இரண்டறக் கலக்கும்.

இவ் உண்மைகளை உணர்ந்து வேதத்தின் முற்பகுதியில் கூறப்பட்ட கரும காண்டத்தில் விதிக்கப்பட்ட கடமைகள் அனைத்தையும் அறிவற்றவர்களும் விடாது செய்துவரின் அவர்களுக்கு அறிவு உதிக்கும். அந்த அறிவு வினைப் பயன்கள் முழுவதையும் அழித்து விடும். எவ்வாறு எனில் அரணிக் கட்டையில் தீக்கடை கோலைச் செருகி முறுக வாங்கிக் கடையும் போது தீப் பொறிகள் பிறக்கும். அப் பொறிகள் உடனே அழிக்கப்படாவிடில் அரணிக் கட்டையும் கடைகோலும் ஒருங்கே எரிந்து சாம்பலாகிப் போவது போலக் கருமங்களும் அழிந்து போகும். இதுவே பர முத்தி என்பதல்லது. உயிர் நிலை பேறு உடையதாக இருக்கும் வீடு பேறு என்பது பொருந்தாது என்று இவ்வாறு தன்னுடைய மதத்தின் கொள்கைகளை மாயாவாதி விரித்துக் கூறினான். எனவே இது மாயாவாதி சங்கற்பம் ஆயிற்று.

அகண்டிதம்கண்டிக்கப்படாதது, வரையறைக்கு உட்படாதது, தொத்தாதுபற்றாது. தாதுதாதுக்கள் ஆறு, அவை தோல், எலும்பு, நரம்பு, மச்சை, குருதி, சுக்கிலம், கோசம் உறை. கோசங்கள் ஐந்து அன்ன மயம், பிராண மயம், மனோ பயம், விஞ்ஞான மயம் ஆனந்த மயம் என்பன. சுத்திசிப்பி, உலூதைசிலந்திப் பூச்சி, நாரம் தண்ணீர். பலாலம் வைக்கோல், கூவல் கிணறு. ஆடிகண்ணாடி, பதினாற் கரணம் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் அறிவுக் கருவிகள் ஐந்தும், வாக்கு, கால், கை, எருவாய், கருவாய் என்னும் தொழிற் கருவிகள் ஐந்தும், மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்னும் அகக்கருவிகள் நான்கும் ஆகிய பதினான்கு மூன்று அவத்தைஇங்கு நனவு கனவு உறக்கம் என்ற மூன்று நிலைகளைக் குறித்தது தற்பணம்கண்ணாடி. குற்றிகட்டை, சாதகம் மறைக்கும் தத்துவங்கள். தத்துவம் அசிபதம்மகா வாக்கியங்களுள் ஒன்று. தத்+துவம்+அசி அது நீ ஆகிறாய் என்று பொருள்படும். அகம் பிரமாஸ்மி என்ற மகாவாக்கியத்தை உணர்த்துவது அகம்+ பிரமம்+அஸ்மி. நான் பிரமம் ஆகின்றேன் என்று பொருள் தரும். அசலன்அசைவற்றவன். நற்சலம் நல்ல நீர். சலமதிநீருள் தோன்றும் நிலவின் நிழல். அகல் கடத்துஅகன்ற குடத்தில், மங்குல்வான், வெளி, அரணிதீக்கடை கோல், ஞெலி கோல்.

மாயாவாதி சங்கற்ப நிராகரணம்

உரைதரு பிரமம் ஒன்று எனும் உரைக்கண்
வருபிரமாணம் மறை எனில் அருமறை
ஒன்று என்றது அன்றி இருபொருள் உரைத்தல்
நன்றுஅன்று அபேதம் நாடிய பொருளேல்
பேதமும் அபேதமும் ஓத வேண்டா

பேதம் எனினும் அபேதம் எனினும்
பேதா பேதம் எனினும் அமையும் நின்
ஐயம்இல் உரையில் பையவந்து உளதாம்
திகழ்பிரமாண இகழ்வும் உண்டு அன்றிப்
பெத்தம் பேதம் முத்தி அபேதமேல்

அனவத் திதமாம் அவைஇரு திறனும்
இனிஅப் பழமொழி இரண்டு அல ஒன்றேல்
அன்றியும் பெத்தம் பேதத்து அறைகலம்
ஒன்றிய முத்தி அபேதந்து உரைத்தலும்
பழுதாம் இத்திறன் பதையாது ஆய்கமற்று

எழுதா மறைஎனும் இப்பிர மாணம்
ஆர்உரை தானே ஆயினதேல் உனது
ஏகம் அநேகம் உறும் இயம்பாமல்
சத்தரூபம் தகாது எனில் வானத்து
ஒத்துஒலி உழறும் எனில் உறிது உதியாது

அன்றியும் பதமும் பாழியும் அனைத்தும்
இன்றிஓர் ஒலியாய் எழுந்திடும் அதனுக்கு
அறிவுஇலது உருவுஇலது அறியாது அறையாது
அன்றியும் அவ்வகை அகண்டிதம் அதுஇது
என்றுஅது குறிப்பது எவ்வகை யாவும்

ஒன்றுஎனும் உரையும் ஒழிந்தனை அன்றே
அருமறை பிரம உரைஎனில் அதற்குத்
தந்தம் தாலுமுதல் நவில் பொறி இலது
என்னில் ஓர் உடற்கண் மன்னிய அலகை
அறைந்தற்று என்பது ஆர்மொல் அதுஅமலத்

திறம்பெற் றின்றே செய்தோர் பெயரால்
சுயம்பு என்றுஉலகு இயம்பும் என்று அறிஇனித்
தன்கீழ்த் தலைவரைத் தான்தொழுது உரைக்கும்
சொற்கேள் புரவலன் ஏவல் அமைச்சரை
அடியேம் மற்றுஎம் குடிமுழுது ஆள்மின் என்று

ஏத்தி இறைஞ்சிக் காப்பர்கள் என்று ஆங்கு
ஈசன் நாம்செயப் பேசினன் அன்றி
இனையவை பிறரில் கனவிலும் இலனே
தன்னைத் துதிக்கும் சொல்நலம் தானும்அத்
துறை அறி வாணர்க்கு அறைவது ஒன்று அன்றியும்
தனக்குத் தானே தன்நலம் பகராது
அசத்துக்கு உரையாது ஆர்க்குஉரை உயிர்க்கு எனில்
உரைபிர மாணம் இறைபிர மேயம்
நீ பிரமாதா நின் பிரமிதி என
நால்வகை உளதுஉனது ஏகம் நன்று அன்றே

நற்பிர மாணம் நிற்பது ஒன்று அன்றால்
அப்பிர மேயமும் அதன் இயல்பு அன்றே
கன்னற் சுவையில் அன்னியம் இலதால்
இனிமை தோன்றாத் தன்மைத்து என்றனை
அறிவிற்கு உவமை அசத்தாம் கட்டி

பிறிவித்து ஒட்டினும் பேறுஅது உறாதே
தற்பர விரிவு பொற்பணி தகும் எனில்
செய்வோர் இன்றிச் செய்வினை இன்மையில்
பொன்பணி ஆகை தன்பணி அன்றே
செய்வோர் போலாச் செயப்படு பொருள்முதல்

செய்வோர் ஏயாச் செய்யவும் படுமே
சுத்தி வெள்ளியில் தோன்றிற்று ஆயினும்
சத்துஉலகு ஏதும் தாரா தரும்எனில்
உலகம் மித்தை என்று ஓராது உரைத்தனை
நிலவும் நின்மரபு நினைந்திலை யாம்கொல்

விவகா ரத்தில் வேண்டுதும் உலகம்
பரமார்த் தத்தில் பகராம் என்னில்
பரத்து உளதேல் இவையும் பரமார்த்தம்
பரத்துஇலதேல் ஒழி முன்பகர் மாற்றம்
அதன்முதல் இதுஎன உதவுக அன்றியும்

விவரிக்கும் கால் திகழ் பரமார்த்த
நிலைஅது தெரியில் இதுநீ நீயேல்
தெரியாது ஆயின் அஃதும் தெரியாது
உரையார் அளவையும் ஒழிந்தனை அன்றே
அளவை காண்டல் கருதல் உரைஎன

உளது அவை மூன்றின் மொழிவழி நுழையின்
நின்பிரமேயம் என்பது என்ஆம்கொல்
பொற்பிதிர் பிதிர்ந்தும் பொன்னே யாம்நின்
தற்பரம் அசித்தைத் தருமாறு என்எனச்
சிலம்பி நூல்தரு நலம்போல் தோன்றும்

என்றனை அதுவும் தன்தொழில் அன்றியும்
ஒன்று அதன் இயல்பு உலகு ஓர்இயல் அன்றுஎனப்
பலம்இலை பழம்பூப் பாதவம் தரும்நீர்
திரைநுரை திவலை சிலதரும் இவைபோல்
தானே பலவாம் எனநீ சாற்றினை

சத்துஅசத் தாகவும் சத்தினில் அசத்தின்
கொத்துஉள தாகவும் கூறினர் இலரால்
வித்துஇலை கனிநனி விழுதுஆல் தருநெறி
சத்துஅலது ஒன்று தான்தர வேண்டும்
நெல்பதர் பலாலத்திற்கு உபாதானம் என்

காரணம் இன்றிக் காரியம் பிறவா
பாரிடை ஒருபடம் பண்ணவும் படுமே
அந்தம்இல் பிரமம் அவித்தை காரணம்எனத்
தந்தனை அவித்தை தான் எய்துறுதல்
தன்இயல்பு என்னில் வன்னிதன் வெம்மையில்

சத்தினது இயல்பும் சத்தே அசத்துஎனில்
வைத்ததன் இயல்பு எனும் வழக்குஒழி அன்றியும்
இருள்பொதி விளக்குஎன வரும் இருவினக்கில்
கருமை பயந்த பெருகுஒளி தகும்எனில்
தன்இயல்பு அன்று அதன் உபாதி வசத்தால்

மன்னியாது அன்றி மைதான்தனில் மாயாது
ஒன்று ஆன சுத்தன் அன்றாம் அன்றே
ஆங்குஒரு காலத்து ஓங்கியது ஆயின்
அந்தம்இல் அவித்தை வந்து அணைவதற்கு ஓர்
ஏது வேண்டும் புயல்இயல்பு எனில்வீடு

ஓத வேண்டா ஒழிந்தோரினும் உறும்
களங்கம் அது அறஉறும் அவித்தைதற் கவித்தல்
விளங்கிய பிரம விளையாட்டு ஆயின்
அவித்தை என்பது ஒன்று அன்னியம் தன்னில்
உதிக்கும் என்றமுன் உரையும் மறந்தனை

நுண்நூற் குடம்பை நுந்துழி போல்உட்
படுநெறி அதனால் விடுநெறி இலதால்
தலைமையும் அறிவும் இலது என் அவித்தையை
விடுத்து எடுத்து ஆணரும் வேற்றோர் அன்றே
ஒளிகொள் தாமிரம் குளிகைபெற்று ஆங்குஅதன்
அவித்தையை வித்தை தவிர்க்கும் என்று உரைக்கில்
நித்தன் அறிவன் சுத்தன் என்று உரைத்த
வித்தகம்என் நீ வித்தையும் வேறு ஒன்று
எம்மனோரில் ஒருவன் நின்இறை
அம்ம சைவந்தவன் நீ அன்றே

பன்மணி பசுநற் பாத்திரம் எனவும்
நன்னூல் பால்நீர் நற்கதிர் எனவும்
உடலையும் உணர்வையும் உவமித் தனையேல்
தடமணி சரடொடு தாம் கூடலவே
உணர்வு உணர்வு ஒழியின உலகு உணர்வுறின் நின்

பாலும் பசுவுஞ் சாலும் சாலக்
கலம்பல அன்றிச் சலம்பல இலதுஎனக்
காணுநர் இன்றி வீண்நீ விளம்பினை
ஆடியுள் நிழல்போல் கூடுதல் கூறில்
தன்நிழல் கொண்டு தற்பணம் சலிக்கில்

மன்நிழல் கொண்டு உடல் வந்து அகன்றிடுமே
மன்அயக் காந்தம் என உடல் பிரம
சந்நிதி அளவில் சலித்திடும் ஆயின்
அகண்டிதம் சன்னிதி அலதுஇலது எவையும்
நடந்திட வேண்டும் கிடந்திட பெறாவே

காந்தத்து இரும்பு காட்டுநர்ப் பெறில்அயம்
சேர்ந்திடும் நீக்கும்செயல் அதற்கு இலதே
கனாத்துயர் கயிற்று அரவு எனாச்சில தொடுத்தனை
கனவின் பயனும் நனவின் பயனும்
வினையின் பயன் அவை பொய்என வேண்டா

உடல் மாறாட்டக் கடன் அது கருதுக
உற்ற புற்றும் மற்று அதில் கயிறும்
உடலும் கூடமுச் சடம்என அறிதி
அறிவு கயிறு என்று அறியாது அன்றே
அச்சம் அது அடைதல் கொச்சமை உடைத்தே

இன்னும் அக்கனவில் இருள் உறு கயிற்றில்
பின்னும் நின் பிரமம் பிரமித் திடுமே
துன்னிய வினையில் செம்மலர்ப் பளிங்கு எனத்
தானாம் தகைமை ஆனால் மலர்என
ஒருபயன் அன்றிப் பலபயன் மரீஇயது

இருவினை தருபயன் என நனி வேண்டில்
ஆண்ட வித்தையும் அவித்தை கொடு ஆக்கையும்
ஈண்டு இருவினையும் இயம்பினை பரத்தைக்
கள்வரைப் பிணிக்கும் காவலர் என முயல்
தொல்வினைத் தொடக்கில் தோன்றுஉடற் சிறையிட்டு

இருவினை ஊட்டும் அருள்உறும் எம்மான்
அருவினை உடல் கண் அவத்தைகள் உரைத்தனை
ஆர்உறுபவர் பரம் அகண்டிதம் அடங்காது
ஓர்விலது உடல்சடம் உறுநெறி யாது எனில்
மன்னிய கரண மாறாட்டத்தின்

பன்னினம் என்னில் இவையோ பரமோ
முதலியது ஆயின் இவை பிறழ்வு எய்தாது
இவை எனில் உனது மொழி பழுது உளதே
உடல்படு பிரமம் உறமேல் சாளரத்து
இடத்தகும் உறுவிரல் நுதி அளி எறி துயர்

அங்குலிதானே அருந்திடில் உடல்கண்
தங்கிய அறிவு தனித்துஉறும் அன்றே
தற்பண நிழல்கண் குற்றிபாய்ந்து அற்றால்
நற்கணில் துயரம் நணுகாத் தகைத்து எனில்
நின்மொழி விரோதமும் காட்சி விரோதத்

தன்மையும் உறும்அவை தவறுஇல ஆகா
யாம்உடைப் பதிவகை யாவரும் பலகலை
சொல்லுதல் எளிது அரிதுஅத் தொழில் புரிவுஎனப்
புல்லிய பழமொழி புதுக்கினை அன்றே
அகண்டிதம் எனநீ பகர்ந்தமை தனக்குப்

பந்தம் இது எனத் தந்தமை கருதில்
வானில் நடக்கும் காலினைப் பிடித்துப்
பருவிலங்கு இட்ட ஒருவன் நீ அன்றே
பந்தம் அதுஅகல முந்து விவேகம்
வான்வளி எனத் தனில் தானே தோன்றின்

முன்புஉளதாயின் மயங்காது இலது எனில்
பின்புஉளது ஆகாது இலது உளது எனில்வெளி
மலரது தரும்அனல் மரக்கண் இன்று ஆகித்
தருவது தகும்எனில் தானே தோன்றா
விறகின் உதித்த கனல்தகும் ஆயின்
அவித்தையின் உதித்த வித்தை அம்மரத்து
உதித்த விவேகம் வித்தை என்று உரைத்த
வெந்தழல் அனைய விவேகம் அது உதித்த
இந்தனம் அனைய இறையில் அன்றுஅற்றே
இற்படப் பிரிப்பின் மெய்யப்படும் எவற்றையும்

இதுஅன்று இதுஅன்று எனக்கழி காலை
அதுவே தானே ஆயினது என்றனை
வித்தை முன்னர் அவித்தையும் அவித்தைமுன்
வித்தையும் நில்லா வியன்ஒளி இருள்என
இருள்அல ஒளிக்கும் ஒளியல இருட்கும்

ஒருகாலத்தும் ஒருபயன் இலதால்
இரண்டையும் நுகரும் முரண்தரு விழிஎன
வித்தையும் அவித்தையும் உய்த்தது ஒன்று உளதே
தானே தானாம் ஆனால் பயன்என்
தன்னில் தன்னைத் தானே காணில்

கண்ணில் கண்ணைக் காணவும் படுமே
தன்நலம் அதனைத் தானே நுகரும்
என்னில் முன்நலம் எய்தாதது இருந்ததுஎன்
கட்டிபோல் எனக் கதறினை இன்பம்வந்து
ஒட்டிடும் வித்தை உடையை ஆயிடினே

தத்துவ மசிஎன வைத்த முப்பதத்திற்கு
ஒன்றே பொருள் என்று அன்றே பகர்வது
நீபுலி யாயினை என்றுஆங்கு உணரில்
ஆயினை என்றதும் ஆகு உவமைத்தால்
நோயா யினம்எனல் ஆயாய் என்றால்

அகமே பிரமம் ஆயினது என்றால்
சகமே அறியத் தான்வேறு அன்றே
உண்மையில் சலம்இலம் உடற்சலம் சலம் உறும்
வெண்மதி போல விளங்கினம் என்றனை
அசலன் ஆகிச் சஞ்சல சலத்துச்

சலனம் மேவினம் எனமதி காண
வேண்டும் அது அன்றிக் காண்பவர் பிறரேல்
ஈண்டுஉனது ஏகம் என் செய்தது இயம்புக
உடல்விடக் கடத்துள் படுவெளிபோல் எனில்
விட்டுஎன் பெறஉடல் பட்டுஎன் படமற்று

இகல் அற ஒருவன் இவ்வகை தெளிய
அகிலமும் முத்தி அடைந்திட வேண்டும்
அறிந்தோர் முத்தி அடைந்தோர் ஆயின்
பிறிந்தோர் உயிர்பல பேதத்து அன்றே
கன்ம காண்டம் காரணம் ஆக

மன்னும் விவேகம் என்னில் அவித்தைக்கு
ஏது காரணம் ஓதினை இல்லை
இதற்குக் காரணம் விதித்தல் வேண்டின்றே
அரணியில் உதித்த கனல்அவை கவர்வுஎன
விரதத்து உதித்த விவேகம் அது அழித்தல்

வருந்தி யாயினும் திருந்திய வேத
நீதி எல்லாம் நீத்துப் போதம் ஒன்று
அறியார் தாமும் இகழ் அவ்வழி நடத்தல்
பொறியோ போத நெறியோ இதுபவம்
நீங்கிடும் நெறிதரு பாங்கினைப் பழித்தல்

நன்றி கொன்றல் அன்றே அன்றியும்
ஞால நீதியும் நான்மறை நீதியும்
பாலர் உன்மத்தர் பசாசரில் எனவும்
உறங்கி னோன்கை வெறும் பாக்கு எனவும்
தானே தவிராது ஆனால் புரியாது

ஒழிந்திடில் நிரயத்து அழுந்துதல் திடமே
உய்த்தோன் அன்றி முத்தி உரைத்தல்
பித்தோ பிரமம் செத்தோ பெறுவது
உடலையும் நீயே சடம் எனச் சாற்றினை
வையினும் வாழ்த்தினும் கொய்யினும் கொளுத்தினும்

வணங்கினும் உதைப்பினும் பிணங்குதல் செய்யாய்
பிரமத் தன்மை பெறுவது எக் காலம்
இருக்கும் நாள்சில எண்ணில்நூல் கதறித்
தருக்கம் பேசித் தலைபறி உற்றுக்
கண்டோர் ஈந்த பிண்டம் உண்டு அலறிப்

பல்நோய் யாக்கை தன்நோய் உற்றுஉடல்
விடவரும் என்று நடுநடு நடுங்கி
விட்டோர் தெய்வத் தொட்டின்று அன்றியும்
யானே எவரும் ஆனேன் என்றலின்
அவ்வவர் சீறி அவ்வவர் வாழ்நாள்
செவ்விதில் நிரயம் சேர்த்துவர் அதனால்
மாயா வாதப் பேயா உனக்குத்
தேவரில் ஒருவர் உண்டாக
மேவரும் நரகம் விடுதலோ அரிதே

பிரம்மம் ஒன்றே உள்ள பொருள் என்று நீ கூறினாய். அவ்வாறு கூறுவதற்கு ஆதாரதும் ஏது? நான்மறைகள் தாம் அதற்குப் பிரமாணம் என்றால், அவை பொருள் ஒன்றே என்று சொல்லாமல் பரமான்மா, சீவான்மா என்று சொல்லுவதால் நீ கொண்ட கொள்கைக்கு மாறுபடும். அவ்வாறு அன்று, வேதங்கள் இரண்டு பொருள்கள் உண்டு எனக் கூறினாலும் அவை இரண்டற்ற தன்மை உடையன என்பதனால் பேதம் அபேதம் பேதாபேதம் என்பதெல்லாம் சொல் அளவிலே அன்றி பிரமப் பொருள் ஒன்றே உளது என்பது தான் வேதக் கருத்து என்று உரைத்தால் நீ அடிப்படை நூலாகக் கொண்ட வேதம் உன்னாலேயே இகழப்பட்டதாகும்.

அப்படிக் கொள்ளக் கூடாது. உலகியல் நிலையில் இரண்டாக இருக்கும் என்று தான் வேதங்கள் கூறுகின்றன என்று நீ மறுத்துரைத்தால் உலகியலில் இரண்டுமுத்தியில் ஒன்று. மீண்டும் உலகியலில் இரண்டு முத்தி நிலையில் ஒன்று என்று வரம்பின்றி ஓடும். எனவே இதுவும் பொருந்தாத கொள்கையே. அதனால் வேத நூல் முரண்பாடு உடையது என்பதும் பெறப்படும்.

இனி அப் பழைய வேதம் இரண்டைச் சுட்டவில்லை ஒன்றையே சுட்டிற்று என்று முத்தி நிலையில் அபேதம் என்று நீ உரைப்பினும் அதுவும் பழுதாகும். இவ்வாறு நான் கூறியவற்றைப் பதைப்பின்றி ஆராய்ந்து பார்ப்பாயாக.

வேதம் எழுதா மறை என்று கூறினாய். இந்தக் கொள்கைக்கு எது அடிப்படை? வேதம் தானே தோன்றிற்று என்றால் நீ கொண்ட பிரமப் பொருள் ஒன்றே உள் பொருள் என்பது மறுக்கப்பட்டு, பிரமப் பொருள் ஒன்று வேதம் ஒன்று என்று ஆகி உன் கொள்கையே மறுக்கப்படும் ஒருவரால் சொல்லப்படாமல் சொல் தோன்றுவதில்லை என்பவர்களை நீ விண்ணிலே ஒருவரால் ஒலிக்கப்படாமல் தானே ஒலி தோன்றுவதில்லையோ என்று கூறி மறுக்கிறாய். வானத்தில் கூட காற்றின்றி ஒலி எழாது. அதுவும் அல்லாமல் அந்த ஒலி சொல்லாகவும் சொற்றொடராகவும் எவ்வாறு அமையும்? ஏனெனில் ஒலிக்கு அறிவுமில்லை. எனவே அறிவிப்பதுமில்லை. மேலும் வரையறைக்கு உட்படாத பிரமப் பொருளை வேதங்கள் அது இது என்று சுட்டிக் கூறுவது எவ்வாறு பொருந்தும்? அப்படிக் கூறுகின்ற மறை உன் ஒரு பொருட் கொள்கையை மறுப்பதாயிற்று.

அரிய வேதங்கள் பிரமத்தாலே அருளிச் செய்யப்பட்டன என்று கூற நீ முற்பட்டால். நீ கொள்ளும் பிரமம் எங்கும் நிறைந்தது. வடிவ மற்றது, எனவே அதற்கு நாக்கு பல் முதலிய உறுப்புக்கள் இல்லை. அது எவ்வாறு சொற்களை உச்சரிக்க முடியும்? வடிவமற்ற பேய் ஒரு மனித உடலைப் பற்றிக் கொண்டு வருங்காலத்தில் நடக்க இருப்பன பற்றிக் கூறிவதைக் கண்டதில்லையா? அது போலத்தான் இதுவும் என்று நீ கூறினால் அப்படிப் பற்றப்பட்டவர்கள் யார் என்று நீ இனம் காட்ட வேண்டாவா? அப்படி இனம் காட்டும் போதும் அது ஓர் உயிரின் வாயிற் பிறந்த சொல், எனவே பசு வாக்கியம் ஆவதன்றி இறைவன் சொல்லாகாது.

வேதங்கள் சுயம்பு என்று கூறப்படுவதற்கான காரணத்தை நான் கூறுகிறேன். அருவாய் நின்ற இறைவன் தன் அளவிறந்த கருணையினால் உருவாகி வந்து வேதங்களை அருளினான் என்பது தான் அதற்குப் பொருள். ஆசிரியரின் பெயரால் நூலும் வழங்கப்படுவது போல சுயம்புவால் அருளிச் செய்யப்பட்ட வேதத்தையும் உலகம் சுயம்பு என்று அழைத்தது.

இக் கூற்றை மறுத்து, வேதங்களில் பல் வேறு தெய்வங்களின் வணக்கம் கூறப்பட்டுள்ளதே அப்படியானால் பரம்பொருள் தனக்குக் கீழ்ப்பட்ட தெய்வங்களை வணங்குமா என்று நீ கேட்டால், குடிகள் தமக்குற்ற சிறு சிறு குறைகளை அரசனைக் கண்டே முறையிடுவதில்லை. அமைச்சரையும் பிற அதிகாரிகளையும் கண்டு முறையிடுவர். அவ்வாறே சிறுமை உடைய உயிர்கள் தம்மினும் சற்றே மேம்பட்ட தெய்வங்களை வழிபடுவதே வேதத்தில் கூறப்பட்டது இதுவன்றி ஒப்பற்ற பரம்பொருள் சிறு தெய்வங்களை வணங்குவது ஒரு பொழுதும் இல்லை.

பரம் பொருளைத் துதிக்கும் வேதப் பகுதிகள் பக்குவம் உடைய உயிர்களுக்காக அருளப்பட்டன. இறைவன் தனது நலத்தைத் தானே பாராட்ட மாட்டான். சடப்பொருளுக்குத் தன் பெருமையை உணர்த்த மாட்டான். எனவே அவன் உரைத்த வேதம் உயிர்களின் நன்மைக்கே என அறிக. அவன் உரைத்த நூல் பிரமாணம், இறைவன் பிரமேயம், உயிராகிய நீ பிரமாதா உன் அறிவு பிரமிதி. இவ்வாறு நான்கு பொருள் கூறப்பட்டதால் உன்னுடைய ஒரு பொருட் கொள்கை மறுக்கப்பட்டது. வேதம் ஒன்று தான் உள்ளது என்பதும் பொருத்த மற்றது. வேதத்தால் உணர்த்தப்படும் பிரமப் பொருள் ஒன்று தான் உள் பொருள் என்பதும் பொருத்தமற்றது.

கரும்பின் சுவையைக் கரும்பே உணராதது போல பிரமப் பொருளும் தன்னுடைய இன்பத்தைத் தான் அறிவதில்லை என்று கூறினாய். அக் கரும்பினில் விளைந்த வெல்லக் கட்டியை கரும்போடு கூட்டி வைத்தாலும் கரும்பிலிருந்து பிரித்து வைத்தாலும் கரும்புக்குப் பேறும் இல்லை. இழப்பும் இல்லை. அறிவற்த பொருள்களை அறிவே வடிவமான பரம் பொருளுக்கு உவமையாகச் சொல்லுவது பொருத்த மற்றது.  உயர்ந்த பிரமப் பொருள் பல்வேறுபட்ட உலகப் பொருள்களாக ஆனதற்கு உவமையாகப் பொன்னே பல அணிகலன்களாக வடிவெடுத்தமையைக் கூறினாய். அப்பொன்னைப் பல வகை அணிகலன்களாகச் செய்வதற்கு வல்லவன் ஒருவன் வேண்டும். ஏனெனில் உலகில் செய்பவன் ஒருவன் இல்லாமல் செய் தொழில் ஏதுமில்லை. எனவே உன் கூற்றுப்படிப் பிரமப் பொருள் பல் வேறு வகைப்பட்ட உலகத்துப் பொருட்களாக வடிவெடுத்ததற்கும் இன்னொருவன் செயலாண்மை வேண்டும் என்று ஆகும். அவ்வாறு இல்லை. எல்லாவற்றையும்  செய்தது பிரமமே என்றால் செய்யப்பட்ட பொருள் செய்தவனைப் போல இருப்பதில்லை. ஆதலால் பிரமம் அல்லாத ஒரு பொருள் உலகத்தின் தோற்றத்திற்குக் காரணமாதல் வேண்டும்.

சிப்பி வெள்ளி போலத் தோன்றுவது போல உலகமும் தோன்றுகிறது என்று கொண்டால், அறிவுடைய பிரமம் அறிவற்ற உலகத்திற்குக் காரணம் ஆகாது. அவ்வாறு கொண்டால் உலகு பொய்த் தோற்றம் என்பதும் பிரமமே உலகாயிற்று என்பதும் மாறுகோளாய் முடியும்.

பிரமமே உலகாயிற்று என்றால் பிரமத்தைப் போலவே உலகும் உள்பொருள் ஆதல் வேண்டும். பிரமத்தைப் போலவே உலகும் அறிவுடைப் பொருளும் வேண்டும். இல்லையெனில் நீ கொண்ட கொள்கை தவறானது ஆகும். விவகார நிலையில் உலகம் உள்ளது என்று கொள்ளுவோம். பரமார்த்திக நிலையில் உலகம் இல்லை என்று கொள்ளுவோம் எனில் பிரமத்திலிருந்து தோன்றிய உலகும் பரமார்த்திகத்திலும் உள்ளதே என்று கொள்ள வேண்டும். பரமார்த்திகத்தில் இல்லை என்றால் நீ முன் கூறிய கொள்கையை மாற்றிக் கொள்க. அல்லாமலும் உலகிற்கு முதற்காரணம் எது என்ற கேள்விக்கும் விடை தருக. விவகார நிலையில் .னக்கு அறியாமை உளது. அந்த அறியாமை எதிலிருந்து வந்தது என்பதையும் நீ கூறவேண்டும். அறியாமையும் பிரமத்திலிருந்தே வந்தது என்று கூறின் அறிவுடைய பொருள் அறியாமையை எவ்வாறு தரும்? இவ்வாறு கூறினால் பிரமப் பொருள் அறிவே வடிவானது என்னும் கருத்துக்கு முரண்பாடு நேரிடும். உன்னுடைய அறிவு. காட்சி கருதல் உரை என்னும் மூன்று அளவைகளால் உண்டாகிறது. பிரமப் பொருளுக்கும் இம் மூன்று அளவைகளும் தேவை எனில் பிரமம் வாக்குத்தும் மனத்துக்கும் எட்டாத பொருள் என்ற கொள்கை முறியடிக்கப்படும்.

பொன் பல அணிகலன்களாகச் செய்யப்படுவது போலப் பிரமமும் உலகத்துப் பொருள்களாக மாறுகிறது என்றாய். பொன்னை அணிகலன் ஆக்கும் போது அதன் மாற்றுக் குறைவதில்லை. ஆனால் பிரமம் அறிவுடைப் பொருளாய் இருக்க, உலகத்துப் பொருள்கள் அறிவற்றதாக இருப்பானேன்? இந்த கேள்விக்கு விடையளிக்கும் போது அறிவுள்ள சிலந்திப் பூச்சியில் இருந்து அறிவற்ற நூல் தோன்றுவது போல என்று விடையளித்தாய். சிலந்தி நூல் ஒரே தன்மையாய் இருக்கும். உலகத்துப் பொருட்கள் பலவகைப் பட்டனவாய் உள்ளன. அன்றியும் சிலந்தி நூலைத் தோற்றுவிக்குமேயன்றி, அதனை ஒடுக்காது.

இக்கேள்விகளுக்கு விடையளிக்க நீ ஒரு மரத்தில் தோன்றிய கனி இலை பூ முதலியன போலவும் நீரில் தோன்றிய அலை, நுரை, திவலை போலவும் தானே பல வாயிற்று என்றாய். அறிவற்ற மரத்திலிருந்து இலை, பூ, முதலிய அறிவற்ற பொருள்களும் அறிவற்ற நீரிலிருந்து அலை, நுரை முதலிய அறிவற்ற பொருள்களும் தோன்றுதல் பொருந்தும். ஆனால் அறிவுடைய பிரமத்திலிருந்து அறிவற்ற சடப் பொருள்கள் தோன்றுவதற்கு இவை எப்படி எடுத்துக்காட்டாகும்? அறிவு அறியாமை ஆகும் என்றும் அறிவிலிருந்து அறியாமை கொத்தாகத் தோன்றும் என்றும் முரண்பட்ட கருத்துக்களை உன்னைத் தவிர வேறு எவரும் கூறார்.

நுட்பமாகிய விதையிலிருந்து மரம், கிளை, இலை முதலியன தோன்றுகின்றன. காரணம் நுட்பமாயிருக்க அதிலிருந்து விரிந்த காரியங்கள் பருமையாய் இருக்கும் என்பதே பொருத்தமானது அதுவுமல்லாமல் காரணத்திற்கும் காரியத்திற்கும் ஒப்புமை வேண்டும். ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடும் என்பது பொருந்தாது. அறிவற்ற வித்து அறிவற்ற மரம், கிளை, இலை ஆகியனவாக விரிந்தது. நீ கூறிய நெல், பதர், வைக்கோல் ஆகியவற்றிற்கு முதற் காரணம் வித்து அல்லவா? காரணம் இன்றிக் காரியம் பிறவாது, காரணத்தை ஒத்தே காரியமும் இருக்கும். அவ்வாறு இல்லை யெனில் பஞ்சிலிருந்து தோன்றும் துணி மண்ணிலிருந்தும் நெய்யப்படலாம் என்ற பொருத்தமற்ற கொள்கை தோன்றும்.

எல்லையற்ற பிரமம், அவித்தையோடு கூடிய போது இந்த உலகம் தோன்றிற்று என்று நீ கூறுகிறாய். அறிவே வடிவாகிய பிரமம் அறிவற்ற அவித்தையோடு கூடுவதற்கு என்ன காரணம்? அவ்வாறு கூடுவது அதன் இயல்பு என்று நீ பதிலிறுத்தால், இயல்பு பொருளை விட்டு ஒரு போதும் நீங்குவதில்லை. நெருப்புக்கு வெம்மை இயல்பு. நெருப்பை விட்டு வெம்மை ஒரு போதும் நீங்குவதில்லை அல்லவா? சத்துப் பொருளாகிய பிரமம் சத்தையே தரும். அசத்தைத் தராது. அறிவுடைய பிரமத்திலிருந்து அறிவற்ற உலகம் தோன்றும் என்பது ஒளியிலிருந்து இருள் தோன்றும் என்பது போன்ற முரண்பட்ட வாதமாகும்.

அவித்தை என்பது இருள் பொதிந்த விளக்கு என்ற உவமை பொருந்தாது என நீ மறுத்து விளக்கு எரிந்த பிறகு அதன் தீய கரிய நிறம் கொண்ட மை ஒன்றினைத் தோற்றுவிக்கிறதே அது போலக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறாய். மை ஒளியில் தோன்றுவதுமன்று ஒளியில் ஒடுங்குவதும் அன்று. எனவே அந்த உவமை பொருந்தாது.

அறிவே வடிவான பிரமப் பொருள் தூய்மையானது. அதனோடு அறிவற்ற தூய்மையற்ற அவித்தை வந்து கூடுமாயின் அதற்கு ஒரு காரணம் வேண்டும், ஒரு காலத்து வந்து உரிய காலம் முடிந்த பின் வான வெளியை விட்டு நீங்கிப் போகும் கரிய மேகம் போன்றது அவித்தை, அது போல இதுவும் இயற்கை என்றாய். அவ்வாறாயின், வீட்டு நிலை என்ற ஒன்றைப் பேச இயலாது. மாயையால் பற்றப்பட்ட சீவான்மாக்கள் சென்று முத்தி நிலையில் கலப்பதற்குரிய பிரமப் பொருளே அவித்தையால் மறைக்கப்படும் எனில் சீவான்மாக்களுக்கு வீடுபேறு என்பது எவ்வாறு கைகூடும்? வீடுபேறு பெற்றவர்களையும் அவித்தை பற்றுமன்றோ?

மயக்கத்தைத் தரும் அவித்தையோடு கூடுவது பிரமத்திற்கு விளையாட்டு என்றாய். அவ்வாறாயின் பிரமம் ஒரு பொருள். அது விளையாடுதற்குத் துணையாகிய அவித்தை மற்றொரு பொருள் எனப்பட்டு உனது ஒரு பொருட் கொள்கை மறுக்கப்படும்.

சில வகைச் சிலந்திப் பூச்சிகள் தம் உடம்பிலிருந்து தோன்றும் நூலினால் தம்மைச் சுற்றி ஒரு கூட்டினைச் செய்து அதற்குள் புகுந்து பின்னர் அதிலிருந்து வெளியேற இயலாது இறந்த தன்மை போல. பிரமம் மாயையோடு சேர்ந்ததன் விளைவாக உடலுக்குள் வந்து புகுந்து பின் வெளியேற இயலாது தன்னுடைய முற்றறிவையும், வரம்பில்லா ஆற்றலையும் இழந்தது என்று ஆகும். கூட்டுக்குள் புகுந்த பூச்சியை விடுவிப்பதற்கு வேறு ஒரு பரம்பொருள் வேண்டும் என்று ஆகும். அப்படியானால் தனக்கு உவமை இல்லாதது என்று நீ கூறிய பிரமப் பொருள் தன் இலக்கணத்தை இழந்துவிடும்.

பிரமத்தினிடத்தில் உண்டான உடல் தொடர்பு செம்பில் தோன்றியே செம்பை மறைப்பது போலவே பிரமத்தில் தோன்றி பிரமத்தை மறைத்தது. களிம்போடு கூடிய செம்பு இரச குளிகையால் தீண்டப்படும் போது அதன் களிம்போடு கூடிய செம்பு இரச குளிகையால் தீண்டப்படும் போது அதன் களிம்பு நீங்கிச் செம்பொன் ஆவது போல, உண்மை அறிவு பிறக்குமிடத்து மாயையின் கட்டுக்கள் ஒழிந்து பிரமம் விளங்கித் தோன்றும் என்று நீ கூறுகிறாய். அப்படியாயின் முன்பு நீ கூறிய பிரமம்யானது என்பதும், என்ன ஆயிற்று? செம்பில் படிந்த களிம்பை நீக்கிய இரச குளிகை அதனின்றும் வேறுபட்டது போல, மாயையால் மூடப்பட்ட பிரமத்தை உடல் தொடர்பினின்றும் நீக்கிய அறிவும் அதனின் வேறாயது என்பது பெறப்படும். நீ கூறிய பிரமப் பொருள் பாசத்தால் கட்டப்பட்ட எம்மைப் போன்ற ஒருவன் ஆதல் வேண்டும். தளையால் கட்டப்பட்ட உயிரைத் தளையால் ஒருபோதும் கட்டப்படாத இறைவனே விடுவிப்பான் என்பதும் எம் கொள்கை. ஆதலின் நீயும் சைவத்தோடு தொடர்புடையவன் ஆகின்றாய்.

பல நிறமுடைய மணிகள் ஒரே நூலில் கோக்கப்பட்டது போல உடல்கள் பலவாயினும் அவற்றுள் நிறைந்த பிரமம் ஒன்றே. பசுக்களின் நிறங்கள் பலவாயினும் அவை சுரந்த பால் ஒரே தன்மையாய் இருக்கும். நீருடைய பாத்திரங்கள் பல திறப்பட்டன. ஆயினும் அவற்றுள் தோன்றும் கதிரவனின் நிழல் ஓர் இயல்பினதே. நீர் நிலைகள் கிணறு கேணி குளம் என்று பல பெயரைப் பெற்றிருந்தாலும் அவற்றுள் நிரம்பி இருக்கும் நீர் ஒரே தன்மை உடையது என்று உடல்களுக்கும் பிரமத்திற்கும் பல உவமைகளைக் காட்டினாய். மணிகள் தாம் உடல்கள் அவற்றைக் கோத்த சரடுதான் பிரமம் என்றால் இவற்றைக் கோத்தவன் யார்.? உடலோடு பிரமத்தைக் கூட்டியது யார்? பசுக்கள் உடல்கள். அவற்றின் பால் பிரமம் என்றாய். பசுக்களுக்கு அறிவுண்டு. பால் அறிவற்ற பொருள். அப்படியானால் நீ கூறும் பிரமம் அறிவற்ற பொருளாகவும் இருக்குமா? கலங்கள் பலவாகவும் அதில் தோன்றும் கதிரவனின் நிழல்கள் ஒன்றாகவும் இருப்பது போல என்றாய். இரண்டையும் ஒரு சேரக் கண்டவன் வேறு ஒருவனாக இருத்தல் வேண்டுமல்லவா? அவன் யார்? நீர் நிலைகள் பலவாகவும் நீர் ஒரு தன்மையாகவும் இருக்கும் என்று சொன்ன பலவாகவும் நீர் ஒரு தன்மையாகவும் இருக்கும் என்று சொன்ன உவமையில் அதனைக் கண்டுணர்த்த மூன்றாமவர் யார்? எனவே உனது உவமைகள் பொருத்தமற்றவை.

கண்ணாடியில் நிழல் தோன்றுவது போல உடலில் பிரமத்தின் நிழல் தோன்றும் என்றாய். கண்ணாடி தன்னுள் தோன்றும் நிழலால் இயங்குமாயின் உடம்புகளும் பிறத்து இறந்து வரும் என்று கூறக்கூடும்.

காந்தம் இரும்பை அசைப்பது போல் பிரமம் உலகத்துப் பொருள்களை ஆட்டுவிக்கும் என்றாய். காந்தம் அதன் அருகில் சென்ற இரும்பினையே அசைக்கும் இயல்புடையது. நீ கூறும் பிரமப் பொருளோ எல்லாவிடத்தும் நிறைந்திருப்பதால் அதன் சந்நிதியில் அறிவுடைப் பொருள் அறிவு இல் பொருள் ஆகிய அனைத்தும் ஒரு தன்மையவாய்ச் செயல் படுதல் வேண்டும். அவ்வாறு செயல் படுவதை யாரும் கண்டதில்லை. இரும்பின் முன் காந்தத்தைக் கொண்டு வருவான் ஒருவன் வேண்டும். அப்படி ஒருவன் உளன் எனக் கொண்டால் நீ கூறும் பிரமப் பொருளினும் ஆற்றல் உடையவன் ஒருவன் உளன் என்று ஆகும். காந்தம் இரும்பைத் தன்னை நோக்கி இழுக்குமே தவிரத் தன்னை விட்டு நீக்காது. ஆனால் உலகமோ தோற்றமும் ஒடுக்கமும் மற்றும் பல செயல்களையும் கொண்டிருத்தலால் நீ கூறிய உவமை பொருந்தாது.

கனாக் கண்டு அஞ்சி விழித்தலும், மங்கிய வெளிச்சத்திலே கயிற்றைப் பாம்பாகக் காணுதலும் என்று மேலும் இரண்டு உவமைகள் கூறினாய். கனவிலே விளைவதும் நனவிலே விளைவதும் இரண்டும் வினையிலே விளைவதே ஆகும் கனவில் சூக்கும உடலும் நனவில் தூல உடலும் மாறி மாறிச் செயல்படுகின்ற இயல்பினால் இவை நேருகின்றன. இவற்றைப் பொய் எனத் தள்ளுதல் தகாது. இரவில் கண்ட கயிற்றைப் பாம்பு எனக் கண்டு மயங்கியது உடலா அன்றி அவ்வுடலை இயக்கும் பிரம்மா? பிரமம் தான் அஞ்சிற்று என்பாயாயின் அது முதன்மை உடையது முற்றறிவுடையது என்பது கொச்சை வாதம் அல்லவா? ஒரு முறை கனவில் அஞ்சியும் ஒரு முறை கயிற்றைப் பாம்பு என மருண்டும் தெளிந்த பின்னர் மீண்டும் அப்பிரமம் அதே நிலை உறும் போது அஞ்சியும் மருண்டும் வரும் எனக் கூறினால், நீ கூறும் பிரமத்தின் பெருமைக்கு இழுக்கன்றோ?

சிவந்த நிறமுடைய பூவோடு சேர்ந்த போது வெண்ணிறப் பளிங்கு செம்மை நிறத்தைக் காட்டினாலும் தன் உண்மைத் தன்மையை இழக்காது. அது போல உடலோடு கூடியிருக்கும் பிரமமும் வினைப்பயனால் இன்பத் துன்பங்கள் அடையினும் மாறுதல் அடைவதில்லை என்று உரைத்தாய். ஆனால் உலகத்து உயிர்கள் பயிவேறு வகைப்பட்ட வினைப் பயன்களை நுகருகின்றனவே அது எதனால்? அறத்தின் விளையும் மறத்தின் விளையும் பல வகைப்படும் ஆதலால் அவற்றை நுகரும் உடல்களோடு கூடிய பிரமமும் பல வகையினவாய் இருக்கும் எனில் அதனையும் விஞ்சிய அறிவு வேறு உண்டு எனில், அறியாமையோடு கூடிய உடல்கள் பல உளவென்றும் பல்வகைப்பட்ட அறம் பாவம் என்பன உளவென்றும் ஆகி உன் ஒரு பொருட் கொள்கை மறுக்கப்படும் அது மட்டும் அல்லாமல், பிறர் பொருளைக் கவர்ந்த கள்வரைக் கட்டி வந்து ஒறுக்கும் அரசனைப் போல நீ கூறுகிற பிரமத்தையும் அது மறம் இழைக்குமாயின் பிணித்து உடலாகிய சிறையில் அடைத்து முறை செய்யும் ஒருவன் எங்களால் வணங்கப்படும் சிவபெருமானே என்று உணர்வாயாக.

வினையோடு பொருந்திய உடலில் நனவு கனவு உறக்கம் என்ற மூன்று நிலைகள் உண்டு எனக் கூறினாய். அந்த அவத்தை நிலைகளை அநுபவிப்பது யார்? பரம்பொருள் எங்கும் நிறைந்தது ஆதலால் அது உடலின் அளவுக்குள் அடங்கிற்று என்றல் பொருந்தாது உடம்பு தான் துன்புறும் என்றால், அது சடப் பொருள் எனவே அறிவற்றது உட்கருவிகள் கூடுவதாலும் பிரிவதாலும் ஏற்படுகிற மயக்கமே இன்பத் துன்பங்களுக்குக் காரணம் என்று நீ விடையிறுத்தால் முதன்மை உடையது எனில் அகக் கருவிகளினால் உயிர் பிறழ்வு எய்த மாட்டாது. அகக் கருவிகளாகிய இவையே முதன்மை பெறும் எனில் நீ முற்கூறிய மொழி பழுதுபட்டது ஆகும்.

இத்துனபத்தை அனுபவிப்பது பிரமமே என்றால் அதன் ஒரு பகுதி துன்புறும் மற்றைப் பகுதி துன்புறாது என்பது பொருந்தாது. ஒருவன் சாளரத்தின் வழியாகத் தனது ஒரு விரலின் நுனியை வெளியே நீட்ட அதில் ஒரு தேனீ கொட்டுமானால் அந்தத் துன்பத்தை விரல் நுனி மட்டும் அனுபவிக்குமானால், உடலில் தங்கிய பிரமப் பகுதி மட்டிலுமே உடலின் துன்பத்தை அனுபவிக்கும் என்று கூறுவது பொருத்தமாகலாம்.

கண்ணாடியின் நிழலில் தோன்றும் கண்ணில் தடியால் குத்தும் போது கண்ணுக்குத் துயரம் விளைவதில்லை. அது போலவே உடலுக்குத் துயரம் ஏற்படும்போது உடலை இடமாகக் கொண்ட பிரமத்திற்குத் துன்பம் உண்டாகாது என்று கூறினாய். அவ்வாறு கூறியது உன் முந்திய மொழிக்கு மாறுபாடாகும் இன்பத் துன்பங்கள் அறிவினால் துய்க்கப்படுவன ஆதலால் காட்சி அளவைக்கும் மாறுபட்டதாகும். எனவே உன் கூற்று தவறுடையது ஆகும். சொல்லுதல் எளிது. சொல்லிய வண்ணம் செய்தல் அரிது என்னும் பிறமொழிக்கு நீ இலக்காகிறாய். வரம்புக்கு உட்பட்டது அன்று என்று நீயே கூறிய பிரமப் பொருள் ஓர் உடலில் அடங்கி நின்று இன்பத் துன்பங்களை நுகரும் என நீ சொல்லுவது, வானத்தில் இயங்குகின்ற காற்றைக் கயிற்றால் கட்டி விட்டேன் என்று கூறுவதற்கு ஒப்பாகும்.

பிரமப் பொருள் உடலில் கட்டுண்டு கிடக்கும் நிலையில் வானத்தில் தோன்றிய மேகத்தை வானத்திலேயே தோன்றிய காற்று விலக்குவது போல அப்பிரமத்திலிருந்தே வெவிப்படுகிற விவேகம் அந்தக் கட்டினை விலக்கும் என்றாய். தன்னில் தானே தோன்றிய அந்த அறிவு முன்பே உள்ளதா? முன்பே உள்ளதாயின் மயங்க வேண்டாம். முன்பு இல்லை எனில் பின்பு அத்தகைய ஞானம் உண்டாகாது. முன்பு இல்லாத ஒன்று பின்பு தோன்றும் எனல் ஆகாயத்திலே தாமரை மலர் பூக்கும் என்பது போன்ற பொருந்தாக் கொள்கையாகும், அவ்வாறு இல்லை மரத்துக்குள்ளே அடங்கியிருக்கிற நெருப்பு பின்னர் வெளிப்பட்ட தன்மை போலக் கொள்ள வேண்டும் என்று நீ கூறினால், மரத்திலிருந்து தீ தோன்ற வேண்டுமாயின் அதனைக் கடைபவன் ஒருவன் வேண்டும் அத் தீ தானே தோன்றிற்று என்றல் பொருந்தாது. கட்டு நிலையில் தோன்றிய ஞானம் விறகில் தோன்றிய தீக்குச் சமம் என்றால் அது தோன்றிது சடத்திலிருந்து என்று ஆகி பிரமத்திலிருந்து ஞானம் தோன்றவில்லை என்று முரண்பாடாய் முடியும்.

வைக்கோல் வேய்ந்த வீட்டைப் பிரித்தெறிந்த பின் அது இல்லாமல் போகும் என்றும், துணியை இழை இழையாகப் பிரித்தால் துணி என்ற பொருள் இல்லாமல் போகும் என்றும் உவமைகள் கூறி உயிர் எனப்பட்ட சீவான்மா ஒவ்வொரு பொருளாக இது நான் அன்று இது தான் அன்று என்று கழித்தபின் எஞ்சுவது, பிரமப் பொருளே என்றாய். அறியாமையின் முன் அறிவும் அறிவின் முன் அறியாமையும் நிற்க மாட்டா. எனவே ஒளியால் இருளுக்கும் இருளால் ஒளிக்கும் ஒரு காலத்திலும் எவ்விதப் பயனும் இல்லை. அவ்விரண்டையும் நுகரும் ஆற்றலும் அவ்விரண்டிற்கும் வேறான இயல்பும் உடைய கண்ணே இருளையும் ஒளியையும் அறிந்து அனுபவிக்கும். எனவே உயிர் என்ற தனிப் பொருள் இருளைச் சார்ந்து இருளாகவும் ஒளியைச் சார்ந்து ஒளியாகவும் இருக்கும் என்பதனை அறிவாயாக.

பிரமப் பொருளே மயக்கத்துக்கு உட்பட்டுச் சீவான்மா ஆயிற்று. மயக்கத்திலிருந்து விடுபட்டு மீண்டும் பிரமமே ஆயிற்று என்று கூறினாய். அவ்வாறு எனில் இம்மாற்றங்களினால் பிரமத்திற்கு என்ன பயன்? பிரமமாகிய தான் தன் வடிவத்தையே காணும் என்றாய் கண்ணும் வேறு எந்தப் பொருளின் துணையும் இல்லாது கண்ணையே காணும் என்பது போல உன் கூற்று அமைந்துள்ளது. தன் இன்பத்øப் பிரமம் தானே துய்க்கும் என்றும் கூறினாய். அப்படியானால் பிரமம் தன் இன்பத்தைத் தானே துய்ப்பதை இது வரை தடுத்து நின்றது எது?

நீ முன்பே கரும்புக்கு அதன் சுவை தெரியாது என்று ஏதோ கூறினாய். இப்போது கூறுவது அதற்கு முரண் அல்லவா? நீ என்ற உயிர்ப் பொருள் இதுவரை கட்டுண்டு இருந்து இப்போது அறியாமை நீங்கியதால் பரம்பொருளோடு கூடி அதன் பேரின்பத்தை நுகர்கிறாய் என்பது தானே அதன் பொருள்.

தத்துவமசி என்பது வேதத்தில் உள்ள ஒரு மகா வாக்கியம் அதன் உண்மையான பொருள் பிரமப் பொருள் ஒன்றே உள்பொருள். உயிர் என்ற தனித்த பொருள் இல்லை என்று கூறினாய். அது மூன்று சொற்களைக் கொண்ட ஒரு சொற்றொடர் தத்அது; த்வம்நீ அசி ஆகின்றாய் அது நீ ஆகின்றாய் என்பது அது ஒரு பொருள், நீ மற்றொரு பொருள் என்பதை உணர்த்தவில்லையா? போரின்போது நீ புலி ஆயினை என்றால் நீயும் புலியும் ஒரே பொருள் என்றா பொருள் தரும்? இந்த இடத்தில் ஆதல் என்பது உவம உருபு ஆகி, நீ புலியினைப் போன்று போரிட்டாய் என்றே பொருள் தரும் அதிலிருந்து நீ வேறு புலி வேறு என்பது தெளிவாகப் புலப்படுகிறது அல்லவா? ஒருவன் தான் நோயாகக் கிடந்தேன் என்று சொன்னால் அவன் நோயிலிருந்து வேறுபட்டவன் அல்லன் என்று கூறலாகுமா? நோய் வேறு என்பது தான் உண்மை. அகம் பிரம்மாஸ்மி என்ற சொற்றொடர் நான் பிரமம் ஆகிறேன் என்று பொருள் தந்து நான் வேறு பிரமம் வேறு என்பதைத்தானே உணர்த்தும்?

நீரில் அசைந்து கொண்டிருக்கும் நிலவின் நிழலைப் பார்த்த ஒருவன். உண்மையை உணரும்போது அசைவது நிலவு அன்று; நீரே என்று உணர்வான். அவ்வாறே சீவான்மாவும் தன் கட்டுக்களை ஒவ்வொன்றாக நீக்கிய பின் ஞானம் உண்டாவதனால் மாறுபாடுகளுக்கு உட்படுவது பிரமம் அன்று என்று உணர்வான் என்றாய். நிலவு பிரமப் பொருளாயும் நீர் மாயையும் ஆனால் இரண்டையும் அவற்றின் வேறாக நின்று காண்பவன் ஒருவன் வேண்டும். அப்படியாயின் உன் ஒரு பொருட் கொள்கை என்னவாயிற்று?

குடத்துக்குள்ளிருந்த ஆகாயம் குடம் உடைந்த போது வெளியில் உள்ள பேராகாயத்தோடு சேர்ந்து ஒன்றாய் ஆவது பரமுத்தி என்று கூறினாய். அப்படியானால் ஒரு சீவான்மா முத்தியடைந்த போதே எல்லா சீவான்மாக்களும் முத்தியடைய வேண்டும் என்பதே உன் கொள்கைக்குப் பொருத்தமாய் இருக்க வேண்டும். ஏனெனில் உன் கொள்கைப்படி பரமான்மாவே சீவான்மா ஆகிறது. இவ்வாறு கூறுவதை மறுத்து ஒவ்வொரு சீவான்மாவும் அது அது ஞானம் பெற்றே முத்தியடைய வேண்டும் என்று நீ கூறுவாயானால் உயிர்கள் பல என்பதை நீ உடன்பட்டு, உன் ஏகான்ம வாதக் கொள்கை மறுக்கப்படும்.

பிரம ஞானம் கைவரப் பெறாதவர்கள் வேதத்தில் விதிக்கப்பட்ட கரும காண்டக் கிரியைகளைத் தவறாது செய்து வந்தால் ஞானம் உதிக்கும் என்றாய். அப்படியானால் உயிர்களுக்கு அறியாமை இருக்கிறது என்பதை நீ ஒத்துக் கொண்டாய் அந்த அறியாமை எங்கிருந்தது வந்தது? என் உயிரைப் பற்றிற்று என்பதற்கு நீ காரணம் சொல்ல வேண்டும். அதனை நீ கூறவில்லை.

அரணிக் கட்டையில் தோன்றிய தீ அந்தக் கட்டையையே அழிப்பது போல் கரும காண்டத்தின் வாயிலாக வந்த ஞானம் அக் கரும காண்டத்தையே அழிக்கும் என்றாய். அதனால் தான் போலும் அற ஒழுக்கத்தை யெல்லாம் கைவிட்டுப் பிரம்ம ஞானம் பெறாத போது பெற்றோம் என்று தருக்கி ஒழுக்கத்தைக் கைவிட்டு அறியாமையினாலோ ஊழ் வலியினாலோ நீ தருக்கித் திரிகிறாய்?

ஒப்பற்ற மனிதப் பிறப்பு வாய்ந்த போது அற நூல்கள் சொன்ன வண்ணம் விதித்தன செய்தும், விலக்கியன ஒழித்தும் வாழ்தல் வேண்டும் அவ்வாறு செய்யாது இருத்தல் செய்ந் நன்றி கொன்ற குற்றம் ஆகும்.

உலகத்து நீதியும், வேதங்களில் சொல்லப்பட்ட நீதியும் ஞானம் முற்றியவர்களுக்கு ஒரு பொருட்டாய்த் தோன்றா. ஆதலால் அவர்கள் குழந்தைகளைப் போலவும், பித்தர்கள் போலவும், பேய் பிடியுண்டவர்கள் போலவும், உறங்கியவன் கைப்பொருள் தானாக நழுவியது போலவும் ஒழுகுவார்கள் என்றால் அந்த நிலை வாய்ப்பது எப்போது? தானாக அத்தகைய நிலைகள் கை கூட வேண்டுமே யன்றி முயன்று செய்வது பயன் தராது. ஆனால் நான் அந்நிலையை எய்திவிட்டேன் என்று கருதிக் கொண்டு அற வழி ஒழுகுதலைக் கை விடுவது நரகத்திலேயே செலுத்தும். வழிகாட்டுவான் ஒருவன் இன்றி முத்தி நிலை கிடைக்கும் என்பது பித்தர் சொல். செத்த பிறகே பிரமப் பொருள் கிட்டும் என்பதும் அத்தகையதே.

உடம்பைச் சடம் என்று கூறினாய் வைதாலும், வாழ்த்தினாலும், வெட்டினாலும், கொளுத்தினாலும், வணங்கினாலும், உதைத்தாலும், அதற்கு ஒன்றும் இல்லை ஆயினும் யாவற்றையும் ஒரு தன்மையாகக் கருதும் மெய்யறிவு எக்காலம் உதிக்கும்?

வாழும் நாட்களோ மிகச் சில அதற்குள் பல நூல்களைக் கற்று பிறரோடு வாது செய்து தலையை மொட்டை அடித்துக் கொண்டு பிறரிடம் இரந்து உண்டு திரிதல் என்ன பயனைத் தரும்? நீயோ, நானே எல்லாத் தெய்வங்களும் ஆனேன் என்று கூறி வருகிறவன். நீ நோய்க்கு இரையாகி முத்து உயிர் பிரியும் காலத்து அஞ்சி நடுநடுங்கி அலறினாலும் உன்னால் பழிக்கப்பட்ட தெய்வங்கள் உன்னை நரகத்தில் ஆழ்த்தும். எனவே மாயா வாதம் பேசும் பேயனே, உனக்கு எந்நாளும் சுவர்க்க இன்பமே கிட்டாது.

அநவத்திதம்வரம்பற்றது. சப்தரூபம்ஒலி வடிவம். அகண்டிதம்பகுக்கப்படாதது. தந்தம்பல். தாலுநாக்கு. அலகை பேய். சுயம்புதானே தோன்றியது. பிரமாணம்அறியப்படுகின்ற பொருள். பிரமாதாஅறிகின்ற பொருள். பிரமிதிஅறியும் கருவி. சுத்திசிப்பி. சிலம்பிசிலந்தி. பாதவம்மரம். பலாலம்வைக்கோல். படம்துணி. நுந்துழிகுளவி. சைவந்தவன்சைவத்தோடு தொடர்புடையவன். சாளரம்பலகணி அங்குலிவிரல். தர்ப்பணம்கண்ணாடி. நிரயம்நரகம்.

அரிதேர்ந்து உணராய் பெரியோன் உரைத்த
பதிபசு பாசம் விதிமுறை கிளக்கில்
ஈசன் ஏகன் எண்ணிலி பசுக்கள்
பாசம் இருவகைப் பரிசினது உலகத்
தாயவன் உயிர்க்கு மாயையின் அருளால்

இருவினைத் தகையின் உருவினைத் தருமால்
கருமுகில் அடர இரிதரு கதிர்போன்று
அறிவாம் உயிரில் பிரியாது ஏயும்
ஈட்டும் இருபயன் ஊட்டிடும் நியதி
ஒருபோது இருபயன் நுகர்வுற மருவுதல்

இன்மை யாதல் முன்னிய காலைச்
சத்திநிபாதம் உற்றுஇறை அருளால்
உருவுகொடு உலகு தெரிவுற மருவி
மாசுறும் தூசு தேசுற விளக்கும்
தன்மையில் உணர்த்தும் புன்மைகள் நீங்கி

நீரும் நீரும் சேரும் தகைமையில்
அறிவினோடு அறிவு செறிவுறப் பொருந்தி
ஒன்று ஆம் என்பதை உலகோர்
நன்றாம் முத்தி எனநவிற் றினரே

திருமாலாலும் தேடி அறியப்படாத சிவபெருமானால் அருளப்பட்ட முப்பொருள் உண்மைகளை முறையாகச் சொல்ல முற்பட்டால்; இறைவன் ஒருவனே; பசுக்களாகிய உயிர்கள் எண்ணற்றவை. பாசம் எனப்படும் தளைகள் இரண்டு வகைகளை உடையது. அவை மாயை, கன்மம் என்பன. உலகத்துக்குத் தாயும் தந்தையும் ஆகிய சிவபெருமான் தனது திருவருளால் உயிர்களுக்கு மாயையிலிருந்து அவ்வுயிர்களின் நல்வினை தீவினைகளுக்கு ஈடாகப் பல் வகைப்பட்ட உடல்களைத் தருவான்.

வானில் கருமேகங்கள் சூழ்வதனால் கதிரவன் மறைக்கப்படுவது போன்று இவ் உயிர்கள் அறிவுடையனவாய் இருந்தும் அவை ஈட்டிய வினைப் பகுதியின் தொகுதியால் உயிர்களின் அறிவு குன்றும். வினைப்பயன்களின் நுகர்வுகளை விருப்பு வெறுப்பு அற்று ஒரு தன்மையாகக் காணும் நிலைக்கு உயிர் உயர்ந்த போது இறைவனின் திருவருள் உயிரில் பதிதலாகிய சத்திநிபாதம் நிகழும். அப்போது இறைவன் தன் திருவருளே திருமேனியாகக் கொண்டு எழுந்தருளுவான். துணிணிலய படிந்த அழுக்கை வெளுத்து நீக்குவது போல் உயிரில் படிந்த அழுக்கு விலகும் வண்ணம் ஞானத்தை உணர்த்துவான். அப்போது உயிரைப் பற்றியிருந்த மாயையும் கன்மமும் விலகும். இவ்வாறு தூய்மைப்படுத்தப்பட்ட உயிரும் இறைவனும் நீரும் நீரும் கலந்தது போலச் சிவஞானத்தோடு ஆன்ம ஞானமும் செறிவுற்றுக் கலந்து ஒன்றாகும். இதுவே இன்பம் விளைவிக்கும் முத்தி நிலை என்று பெரியோர் கூறுவார்கள்.

பரிசுஇயல்பு,வகை. ஏயும்பொருந்தும். முன்னிய காலைநேரும்போது, தூசுஉடை, துணி, தேசுஒளி

ஐக்கியவாதி சங்கற்ப நிராகரணம்

முத்தி என்பதை எவனோ சுத்த
அறிவு எனில் பாசம் செறியா மாயை
உருஇரு வினையால் வரும் இரு வினையும்
உருவால் அன்றி மருவாது இவற்றின்
மூந்தியது ஏதோ வந்து அணைவதற்கு ஓர்

ஏது வேண்டும் தான் இயல்பு என்னில்
வீடு உற்றவரினும் கூடக் கூடும்
ஈங்குஇவை நிற்க நீங்காக் கருவிகள்
கொண்டு அறிவு அறியக் கண்டதும் அன்றி
மருவிய உருவு துயில் பெறும் காலைச்

சிறுபொறித் தறுகண் கறைஅணல் கடிகைத்
துத்திக் கடுவுள் துணை எயிற்று உரக்க
கொத்து அயல் கிடப்பினும் குவைதரு நவமணி
ஒருபால் துதையினும் பெருகு ஆர்வத்தினோடு
அச்சமும் அணுகாக் கொச்சைமை என்னோ

கருவி யாவும் பிரிவுறு நிலையேல்
பொறிபுலன் ஆதி குறைவற நிறைந்து
காட்சியது அளிக்கும் மூட்சியின் முன்னாக்
கொடுத்து ஓர் ஆழி விடுத்தவன் நாடிக்
கொள்வோர்க் காணாது உள்கி மீண்டுழித்

தந்தவன் கண்டாங்கு அந்தமில் அதனைத்
தருக வென்னும் பெருமதி பிறங்கும் அது
அறிவிலாமை என்றனை அது மலமாகத்
குறிகொளாளர் அறைகுவர் அன்றே
அறிவிற்கு அறிவு செறியவேண் டின்றே

உண்மையில் இருமையும் ஒளியே எனில் ஒரு
தன்மை யாகமுன் சாற்றினர் இலரே
முன்பு நன்றுடன் ஒன்றிய காலை
இன்பம் எய்துதற்கு இலது உயிர் ஆதலின்
நியலை பொருத மாயா வாதி
ஆயினை அமையும் அருள்நிலை கேண்மதி

முத்தி நிலை என்பது என்ன? அதைப் பற்றி இப்போது பேச வேண்டாம். முதலில் நீ கூறிய கட்டு நிலை பற்றிய விளக்கம் பொருத்த மானதுதானா என்பதைக் காணலாம். உயிர் அறிவாக இருக்கும் என்றால் அதனை மாயையும் கன்மமும் இடையில் வந்து பற்றுவானேன்? மாயையின் விளைவாகிய உடல் வினையால் வரும் என்றனை. வடிவம் இல்லாத ஒரு பொருள் இருவினையும் ஆற்றுதல் இயலாது. இவ்வாறாயின் மாயை முந்தியதா? கன்மம் முந்தியதா? இந்தக் கேள்விகளக்கு விடை கூறுதல் வேண்டும். இரண்டில் எது முந்தி வந்தது என்று சொன்னாலும் அது ஏன் வந்து பொருந்திற்று என்பதற்குக் காரணம் கூறியாக வேண்டும். கன்மமும் மாயையும் உயிரைப் பொருந்துவது இயல்பு என்று கூறினால் வீடுபேறு அடைந்தவர்களையும் அத்தளைகள் பொருந்தும் எனல் வேண்டும்.

உயிர் அறிவுடைய பொருள் என்றாய் ஆயினும் கருவிகளோடு கூடிய போதே உயிரால் அறிய முடிகிறது என்பதையும், கருவிகளிலிருந்து நீங்கிய போது உயிர் அறிவற்று இருப்பதையும் கண் கூடாகக் காண்கிறோம். ஒருவன் தூங்கும்போது, உடம்பில் சிறு புள்ளிகளும், கருத்த கழுத்தும், படமும், உள் துளை உள்ள பற்களும், நஞ்சும் கொண்ட பாம்புக் கூட்டம் பக்கத்திலே கிடந்தாலும் மற்றொரு புறம் நவமணிகள் குவிந்து கிடந்தாலும் பாம்புக் கூட்டத்தரல் அச்சமும், குவிந்த நவமணிகளில் ஆர்வமும் இல்லாது அவன் உறங்குகிறானே, அது ஏன்? கருவிகள் நீங்கிய நிலையில் அவன் அவ்வாறு அறிவற்றுக் கிடக்கிறான்.

ஒருவன் நனவு நிலையிலேயே மற்றொருவனிடம் தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்து அதனை விற்று வா என்று வேண்டுகிறான். விற்கச் சென்றவன் பல நாள் பலரையும் நாடி முயன்றும் வாங்குவார் இல்லாமையால் மோதிரத்தை உடையவனிடமே மீண்டும் கொடுத்து விடுகிறான். சில நாள் கழிந்த பிறகு மோதிரத்தை மீண்டும் பெற்றுக் கொண்டதை மறந்து நான் கொடுத்த மோதிரத்தை மீண்டும் பெற்றுக் கொண்டதை மறந்து நான் கொடுத்த மோதிரத்தை தா என்று கேட்கிறான். விழித்திருக்கும் போது கொடுத்து விழித்திருக்கும் போதே மீளவும் பெற்றுக் கொண்டது எவ்வாறு அவனுக்கு மறந்து போயிற்று? அதுவும் மாயையில் விளைந்த அறியாமை என்று சொன்னால் அது பொருத்தமற்றது இந்த மறதிக்குக் காரணமாக உயிரைப் பற்றி நிற்கிற மலம் என்ற ஒன்று உண்டு என்பதனைப் பெரியோர் கூறுகிறார்கள்.

இறைவனும் ஞான வடிவினன். உயிரும் ஞானமே வடிவானது என்றால் ஒன்றோடு ஒன்று செறிதல் வேண்டும் என்ற தேவை இல்லை. உயிரும் இறைவனும் ஒரு தன்மையவாய் இருக்கும் என்பதை மிகச்சிலரே ஏற்றுக்கொள்வர். மேலும் நீ கூறிய மாயை கன்மம் ஆகிய இரு தளைகளும் உயிரை வந்து பற்றுவதற்கு. முன் உயிர் முத்தியின்பத்தைத் துய்த்துக் கொண்டிருந்தது என்பதும் யாராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நீயும் மாயாவாதியோடு ஒரு வனாகின்றாய். முத்தியின்பத்தைப் பற்றி நான் கூறுகிறேன் கேட்பாயாக.

இந்த ஐக்கியவாதியின் கொள்கையை மறுக்கின்ற பாடாணவாதியின் மறுப்பில் தொடக்கத்தில் முத்திநிலை பற்றி இப்போது பேச வேண்டாம் என்று குறிப்பிட்டது நினைவு கூர்தற்குரியது. ஏனெனில் ஐக்கியவாதியின் முத்திநிலைக் கொள்கை இதை அடுத்துவரும் பாடாண வாதியின் சங்கற்பத்தில் கூறப்படுகிறது அதற்காகவே ஆசிரியர் அருள்நிலை கேண்மதி அதாவது முத்தி நிலையைப்பற்றி நான் கூறுகிறேன் கேட்பாயாக என்று கூறி இப்பகுதியை நிறைவு செய்தார்.

கறையணல்கரிய கழுத்து. துத்திபடம், கடுநஞ்சு, உரகம்பாம்பு, கொச்சைமை அறியாமை. அலைபொரு மாயாவாதிமறுக்கப்பட்ட மாயாவாதி

பாடாணவாதி சங்கற்பம்

மூல மலத்தால் சாலும் மாயை
கருமத்து அளவில் தரும் உரு இறைவன்
செறிந்துஇரு பயனும் நுகர்ந்திடும் உயிர்கள்
இருள்உரு மலத்தில் பருவரல் படுதலின்
இடைஇரு நோக்கும் தடைபட் டோரில்

துயர்உறும் அதனால் செயிர்உறு துன்பம்
கொத்தை மாந்தர் உய்த்துஉறும் துயில் போல்
காட்சி என்னக் காணாத் துயர
காட்சியை முத்தி எனவகுத் தனரே

தோற்றமில் காலத்திலேயே உயிரைப் பற்றிக் கொண்டிருக்கும் ஆணவ மலம், மூலமலம் எனப்படும். இதனால் உண்டாகிய துன்பத்தைப் போக்குவதற்கு இறைவன் மாயையை உயிருடன் கூட்டுவான். உயிரின் வினைக்கேற்ற உடலையும் இறைவன் தருவான். அந்த உடலில் பொருந்தி உயிர் இருவினைப் பயன்களையும் நுகரும். அப்போது ஆணவ மலச் சேர்க்கையால் உயிர் துன்புறும். காணும் தன்மையுடைய கண்களைப் படலம் மறைத்தாற் போல ஆணவம் உயிரின் அறிவை மறைக்கும். இதனால் மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் துன்புறும் இது கட்டு நிலை ஆகும். உறக்கத்தில் அழுந்திக் கிடக்கிற போது உயிர்கள் துன்பம் அற்று இருப்பது போல, முத்தி நிலையிலும் உயிர் எதனையும் அறியாது இன்பத் துன்பங்களும் இல்லாது இருக்கும் இத்தகைய உயர் நிலையையே முத்தி நிலை என்று முன்னோர் வகுத்தனர்.

மூல மலம்ஆணவ மலம். உருஉடல் பருவரால்துன்பம் கொத்தைகுருடு, இங்கு அறியாமை. பாடாணம்கல். பாடாணவாதிமுத்தி நிலையில் உயிர் இன்பமோ துன்பமோ எதுவும் இல்லாமல் கல்லைப் போலக் கிடக்கும் என்ற கொள்கை உடையவன்.

பாடாணவாதி சங்கற்ப நிராகரணம்

வகுத்துஉரை பெருகத் தொகுத்திடும் முத்தி
நன்று நன்று இருள் ஒன்றிய மலத்து ஆம்
உளத்திற்கு உறுபொறி செறிபுலன் நுகர்தல்
விளக்கின் திகழும் மேன்மையது அன்றே
கருவிகள் அகல்வுழி மருவிய துயரமும்

நன்றுஎனல் ஆகும் துன்றிய படலத்து
இடைதடைப் பட்ட சுடர்வழி மாந்தர்
படலம் நீங்குதல் கடன் ஆதலினே
காட்சி என்னக் காணாத் துயர
காட்சியை முத்தி என வகுத்து உரைக்கில்

கரணா பாவம் மரணம் கருமரம்
ஏய்ந்தவர் முத்தி சேர்ந்தவர் அன்றே
இனைய கதிக்குஓர் முனைவரும் வேண்டா
தனிதரு துயரம் எனும் இது திடனே
பாடாணத்தில் கூடா முத்தி

பல சொற்களால் வகுத்தும் தொகுத்தும் நீ கூறிய முத்திநிலை மிக நன்று! ஆணவத்தோடு கூடிய உயிர்களுக்குக் கருவி கரணங்களின் வாயிலாக வரும் நுகர்ச்சி விளக்கொளியில் காணும் காட்சியினைப் போன்றது. இது சகலநிலை எனப்படுவது, உயிர் கருவி கரணங்களை விட்டு அகலுமானால் அப்பொழுது அது மீண்டும் கேவல நிலைக்குத் திரும்பி ஆணவ மலத்தால் முற்றிலும் மறைக்கப்பட்டுவிடும். நீ கூறுகிற வீடுபேற்று நிலையிலும் இதுவே பேசப்படுகிறது. ஏனெனில் அதிலும் உயிர் கல் போல அறிவற்றுக் கிடக்கிறது என்றாய். அது மட்டிலுமல்லாமல் இறந்தவர்களும், நிறைவடையாத கருவும், மரங்களும் கூட உன் கருத்துப்படி முத்தி பெற்றவனாக வேண்டும். இத்தகைய முத்தியை உணர்த்துவதற்கு ஓர் ஆசிரியனும் தேவையில்லை. உயிர் தனித்துக் கிடக்கும் என்ற உனது முத்தி துயரமே யன்றி வீடுபேறு.

 இப் பகுதியின் இரண்டாவது வரியில் நன்று நன்று என்று கூறியது இகழ்ச்சுக்குறிப்புடன் கூறப்பட்டதாகும். நீ கூறியது நன்றல்ல என்பது கருத்து.

கரணாபாவம் கரணம், அபாவம் கரணங்களிலிருந்து நீங்கி நிற்றல் முனைவர் ஞான ஆசிரியர். பாடாணம். கல்

பேதவாதி சங்கற்பம்

ஈசனது அருளால் பாசத் தொகுதி
செறிவுறு செம்பில் கறையுறு களிம்பு
குளிகை தாக்க ஒளிபெற்று ஆங்கு
நித்த சுத்த முத்தர் ஆக
வைத்தனர் உலகில் மறைவல் லோரே

உயிர்களைப் பற்றியுள்ள பாசங்களின் தொகுதி இறைவன் அருளால் நீங்கும் அது எவ்வாறு எனில் செம்பில் கலந்துள்ள மாசு ஆகிய களிம்பு இரச குளிகையால் நீக்கப்பட்ட போது, செம்பு பொன் ஆனாற் போல. இவ்வாறு உயிர்களைப் பற்றிய தளைகள் யாவும் நீங்கிய உடன் இவ்வுயிர் என்றென்றும் தூய்மை உடையதாகி வீடுபேறு அடைந்து நிலைபெறும் என்று மறை வல்லவர்கள் கூறியுள்ளனர்.

 
மேலும் சங்கற்ப நிராகரணம் »
பேதவாதி சங்கற்ப நிராகரணம்மறைகள் ஆகமத் துறைகள்மற்று எவையும்நாசமில் பதிபசு பாசம்என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar