பதிவு செய்த நாள்
12
ஏப்
2014
10:04
உடுமலை : மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா, கொடியேற்றம் பக்தர்கள் முன்னிலையில், நேற்று நடந்தது. உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 1ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. 8 ம் தேதி, திருவிழா கம்பம் போடப்பட்டது. திருவிழா கம்பத்துக்கு தினமும் பக்தர்கள் மஞ்சள் நீர், தீர்த்தம் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு வாஸ்து சாந்தி, கிராம சாந்தி பூஜைகள் நடந்தன. இதைதொடர்ந்து, நேற்று மதியம் தேர்த்திருவிழாவுக்கான கொடியேற்றம் மற்றும் பூவோடு துவக்க நிகழ்ச்சி நடந்தது.கொடியேற்றத்தையொட்டி, நேற்று காலை ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. கொடிக் கம்பத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கம்பத்தில், மஞ்சள் துணியில், அம்மன் சிம்ம வாகனத்தில் காட்சி அளிப்பது போன்ற உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.திருத்தேருக்கு முகூர்த்தங்கால் பூஜை செய்யப்பட்டு, தேர் பணிகள் துவக்கப்பட்டது. பூவோடு துவக்க விழாவில், பக்தர்கள் பூவோடு ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி, வழிபட்டனர்.தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று முதல் அம்மன் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி துவங்கியது. முதல்நாளான நேற்று காமதேனு வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது; அம்மன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கோவில் கலையரங்கில் இன்று இரவு 7.00 மணிக்கு, ஆன்மிக பேரவை சார்பில், இன்னிசை நிகழ்ச்சியும், குட்டைத்திடலில், இன்று இரவு 10.00 மணிக்கு, இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.