பதிவு செய்த நாள்
23
ஏப்
2015
10:04
கோவை : தண்டுமாரியம்மன் கோவில் சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, அக்னிச்சட்டி ஊர்வலம், மேள, தாளங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, நேற்று விமரிசையாக நடந்தது. தண்டுமாரியம்மன் கோவில் சித்திரைத்திருவிழா, ஏப்,, 13ல் கணபதி வேள்வியோடு துவங்கியது. ஏப்., 14 காலை கொடியேற்றமும், பூச்சாட்டு நிகழ்ச்சியும் நடந்தது.ஏப்., 16ல் அக்னிச்சாட்டு, ஏப், 17ல் மாலை திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சிகள் நடந்தன. ஏப்., 21 வரை அம்மன், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று காலை 7:00 மணிக்கு கோனியம்மன் கோவிலிலிருந்து, சக்திகரகம், அக்னிச்சட்டி ஊர்வலம் துவங்கியது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், கைகளில் அக்னிச்சட்டி ஏந்தி புறப்பட்டனர். ஊர்வலத்தில் மேளதாளங்கள் முழங்கின. சிங்காரிமேளம், கேரள பஞ்ச வாத்தியக் குழுவினரின் இசைநிகழ்ச்சி, தாரை தப்பட்டை, ஜமாப் குழுவினரின் இசைநிகழ்ச்சி என்று ஊர்வலத்தை இசையால் அணிவகுக்கச் செய்தனர்.
வழிநெடுக, நீர்மோர், ஐஸ்மோர், பாதாம்கீர் உள்ளிட்ட குளிர்பானங்கள், வழங்கப்பட்டன. பக்தர்கள் சக்தி கரகத்தை சுமந்து, உடுக்கை பாட்டு பாடி, அம்மனை அழைத்துச்சென்றனர். கோனியம்மன் கோவிலிருந்து புறப்பட்ட அக்னிச்சட்டி ஊர்வலம், பெரியகடைவீதி, ஒப்பணக்கார வீதி, மில்ரோடு, பால் மார்க்கெட், சிரியன் சர்ச் ரோடு, அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக, கோவிலை அடைந்தது. ஊர்வலத்தையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. நேற்று மாலை 6:30 மணிக்கு, கோவிலில் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு 8:30 மணிக்கு தங்க ரத புறப்பாடும், இரவு 9:00 மணிக்கு மலர் பல்லக்கு நிகழ்ச்சியும் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு மகா அபிஷேகம், காலை 10:30 மணிக்கு மஞ்சள் நீர் மாலை, 6:00 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 24 காலை 6:00 மணிக்கு, தமிழில் லட்சார்ச்சனையும், ஏப்., 26 காலை 7:00 மணிக்கு சங்காபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு வசந்த உற்சவமும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.