பதிவு செய்த நாள்
23
ஏப்
2015
10:04
மணப்பாறை: மணப்பாறை அருகே, எம்.சீத்தப்பட்டி கிராம மக்கள், மழை வேண்டி, பஞ்ச கல்யாணி திருமணம் செய்து, அறுசுவை விருந்து வைத்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, எம்.சீத்தப்பட்டி கிராம மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். கடந்த, மூன்றாண்டுகளுக்கும் மேலாக, மழையில்லாததால், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு விட்டன. பல்லாயிரக்கணக்கான தென்னை, மா, கொய்யா, எலுமிச்சை போன்ற பல வகையான மரங்கள் மழையின்றி காய்ந்து விட்டன. இதனால், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் முடங்கின. கிராம மக்கள், வேறு தொழில்களுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு, காசு கொடுத்து, குடிநீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். பஞ்ச கல்யாணி திருமண விழா என, பத்திரிகை அச்சிட்டு, ஒவ்வொரு வீட்டிலும் கொடுத்தனர். திருமணத்திற்கான தாலி, புடவை, வேட்டி, துண்டு, மாலை ஆகியவைகளை பொதுமக்கள் வாங்கி வந்தனர். சீத்தப்பட்டி மாரியம்மன், காளியம்மன், பகவதியம்மன் கோவில்களின் முன், பஞ்சகல்யாணி திருமணத்துக்காக பந்தல் அமைத்திருந்தனர். நேற்று காலை, ஆண் பெண் கழுதைகளுக்கு, பொதுமக்கள் முன், திருமணம் நடந்தது. திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. இதில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு வந்த வர்கள் அனைவரும் மொய் கொடுத்துச் சென்றனர்.