
மக நட்சத்திரம் பெருமாளுக்கும் உகந்த நாள். நீர் நிலை உள்ள இடங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இப்படி தீர்த்தவாரிக்கு பெயர் பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்று மகாபலிபுரம். இங்கு மாசி மகத்தன்று நீராடுவது ராமேஸ்வரத்தில் நீராடிய பலனைத் தரும். இதற்குக் காரணமானவர் புண்டரீக மகரிஷிதான். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளின் காலடியில் அன்றலர்ந்த தாமரை மலரை வைத்து வணங்க வேண்டும் என்ற ஆவலில் இவர் மாமல்லை கடற்கரையில் மலரை வைத்துவிட்டு, பாற்கடலுக்கு வழி ஏற்பாடு செய்ய முயற்சித்தார். அதற்காக கடல்நீரை தொடர்ந்து இரைத்துக் கொண்டிருந்தார். இவரின் தளரா முயற்சியையும் தாளாத பக்தியையும் கண்ட திருமால் ஒரு முதியவராக உருக்கொண்டு முனிவரிடம் வந்து, எனக்கு பசியும் களைப்புமாக உள்ளது. ஊருக்குள் சென்று உணவு வாங்கி வாருங்கள். அதுவரை நானே கடல்நீரை உமக்காக இரைக்கிறேன் என்று அனுப்பினார். முனிவரும் உணவு வாங்கிவந்து பார்த்தபோது கடல் உள்வாங்கி இருந்தது. முதியவரைக் காணோம். அப்போது ஒரு குரல் கேட்டது. முனிவர் அவ்விடத்தைப் பார்க்க, தான் வைத்த மலரை பாதங்களில் வைத்துக்கொண்டு திருமால் தரையில் பள்ளிகொண்டு ரிஷிக்கு காட்சி தந்தார். ஸ்ரீமன் நாராயணனே தன் திருக்கரத்தால் நீர் இரைத்த இந்த அர்த்தசேது கடலில் மகத்தன்று நீராடுவது பெரும் புண்ணியம்.
இந்திரனே ஈசனுக்கு எடுக்கும் விழா!
இந்திரனே ஈசனுக்கு எடுக்கும் விழாவிற்கு இந்திரப் பெருவிழா என்று பெயர். திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத அகோரமூர்த்தி ஆலயத்தில் இவ்விழா மாசி வளர்பிறையில் நடக்கிறது. இதை இந்திரனே நடத்தி வைப்பதாக ஐதீகம். இவ்விழாவில் சுவாமி காவிரி சங்கமத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார். இதுவன்றி வாரம்தோறும் ஞாயிறன்று அகோரமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இத்தலத்தில் மட்டுமே ஐந்து முகம் கொண்ட பஞ்சமூர்த்தியாக அகோர சிவன் காட்சி தருகிறார். சோழர் காலத்தில் ஐம்பொன் விக்ரகங்களை உருவாக்கும் தொழிற்கூடமாக இது இருந்துள்ளது. சீர்காழியிலிருந்து 10 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
குந்தியும், மாசிமகமும்: குந்திதேவிக்கு, சூரியன் மூலமாக கர்ணன் அவதரித்தான். திருமணமாவதற்கு முன் கர்ணனைப் பெற்ற குந்திதேவி, குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள். அந்தப் பாவம் அவளை உறுத்திக்கொண்டே இருந்தது. ஒரு நாள் ஒரு முனிவரைச் சந்தித்த குந்தி, கர்ணனை ஆற்றில் விட்ட பாவம் நீங்க பரிகாரம் கேட்டாள். அதற்கு முனிவர், மாசி மகம் அன்று ஏழு கடலில் நீராடினால் பாவம் விலகும் என்றார். ஒரே நாளில் எப்படி ஏழு கடல்களில் நீராட முடியும்? என்று இறைவனை வேண்டினாள் குந்தி. அப்போது, திருநல்லூர் கோயில் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. அதில் உனக்காக ஏழு கடல் தீர்த்தங்களை வரவழைக்கின்றேன். அந்தத் தீர்த்தத்தை ஏழு கடலாக நினைத்து மாசி மகம் அன்று நீராடு! என்று அசரீரி கேட்டது. குந்தியும் அப்படியே செய்து விமோசனம் பெற்றாள். அந்தத் தீர்த்தமே சப்த சாகர தீர்த்தம் ஆகும். இத்திருத்தலம், தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் திருநல்லூரில் உள்ள பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் ஆகும்.
மாசிமக சிறப்பு: மாசி மாதம் முழுவதுமே புண்ணிய நீராடிட ஏற்ற புனித மாதமாகும். இம்மாதம் தவிர வேறு எப்போதெல்லாம் புனித நீராடலாம் என புராணங்கள் சொல்கின்றன தெரியுமா? அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, இரண்டு அயன காலங்கள், வெள்ளிக்கிழமை, கார்த்திகை, சிவராத்திரி, மாசிமகம், மகாமகம் நாட்கள் தான் அவை. மகாமக திருவிழாவை முதலில் துவக்கி வைத்தவர், பிரம்மதேவன். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் புனித நதிகள் யாவும் வந்து கலப்பதாகவும், அன்று புனித நீராடினால் புண்ணியப்பேறுகள் பலவும் கிட்டும் என்றும் மகாபுராணம் சொல்கிறது. அத்தினமே மகாமகம். மாசி மாதத்தில் மாசி மகப் பெருவிழா பத்துத் தினங்கள் வரை நடைபெறும். அசுவினி நட்சத்திரம் கூடிய நன்நாளில் கொடி ஏற்றஞ் செய்து எட்டாவது நாளில் தேரோட்டமும், பத்தாம் நாளான மகம் நட்சத்திரம் கூடிய முழுநிலவு நாளில் பஞ்சமூர்த்திகளும் புறப்பட்டு மகாமக தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நடக்கும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மகம் நாளில் குரு, சிம்ம ராசியிலும் சூரியன், கும்ப ராசியிலும் வரும். அந்நாளே மகாமகப் பெருவிழா. ராமர், ராவணனை வதம் செய்வதற்காக சிவனருள் பெற வேண்டி, அகத்திய முனிவரின் ஆலோசனையை நாடினார். அம்முனிவர், கும்பகோணம் வந்து சில காலம் தங்கி இத்தலத்திலுள்ள காசி விஸ்வேசுவரரை வழிபட்டால் உருத்திராம்சம் பெறலாம் எனக்கூறினார். அதன்படி ராமர் இங்கு வந்து விஸ்வேசுவரரை வழிபட்டு, தன் உடலில் உருத்திர அம்சம் ஆரோகணிக்கப் பெற்றார். அதன் காரணமாக இவ்விடமும் காரோணம் எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர். இதன் பழைய பெயர், திருக்குடந்தைக் காரோணம். மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ளது இக்கோயில்.
மாசிமகத்தில் விளக்கு ஏற்றுங்க: ஸ்ரீரங்கத்திற்கு எவ்வளவு சிறப்புண்டோ அத்தனையும் கொண்ட சிறப்பான திவ்யதேசம் திருக்கோஷ்டியூர். மந்திர உபதேசம் வேண்டி ராமானுஜர், திருக்கோஷ்ட்டியூர் நம்பியை 18 முறை தேடி வந்தது இங்கு தான். உலகமக்கள் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் உபதேசித்ததால் (ஓம் என்பது ஓரெழுத்து) திருமந்திரம் விளைந்த திவ்யதேசம் என்ற பெருமை இதற்குண்டு. பேரழகு கொண்டவர் என்பதால் இங்கிருக்கும் பெருமாளுக்கு சவுமியநாராயணர் என்பது திருநாமம். பொதுவாக கோயில்களில் உற்ஸவர் விக்ரகங்களை பஞ்சலோகத்தால் அமைப்பர். ஆனால், தூய்மையான வெள்ளியால் ஆன விக்ரகம் இங்குள்ளது. இதை தேவலோக இந்திரனே தந்ததாக ஐதீகம்.இப்பெருமானை திருமங்கையாழ்வார் வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் என்று போற்றுகிறார். இங்குள்ள தாயாருக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் ஆகிய பெயர்களுண்டு. மகாமகக்கிணறு என்னும் சிம்மக்கிணறு இங்குள்ளது. இதில் மாசிமகத்தில் நீராடுவது சிறப்பு. மாசிமகத்தன்று இங்கு தெப்பத்திருவிழா நடைபெறும். சவுமியநாராயணரிடம் ஏதாவது வேண்டுகோள் வைத்து அது நிறைவேறியவர்கள், தெப்பக்குளத்தில் தீபமேற்றி வழிபடுவது சிறப்பாகும். அந்த விளக்கை புத்திர பாக்கியம், திருமணம் போன்ற கோரிக்கைகளை வைப்பவர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று பூஜையறையில் வைத்துக்கொள்ளலாம். வேண்டுதல் நிறைவேறியதும், அடுத்த மாசிமகத்தன்று மீண்டும் அந்த விளக்குடன் மேலும் 3 அல்லது 5 அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது மரபாகும்.
குளத்தில் நீராடும் ஆறு: காவிரிநதி ஏழு கட்டங்களாக பாய்ந்து வளம் பெருக்குகிறது. தலைக்காவிரி, அகன்றகாவிரி, பஞ்சநதம், கும்பகோணம், மத்தியார்ச்சுனம், மயிலாடுதுறை, காவிரிப்பூம்பட்டினம் ஆகியன அவை. இவற்றில் நடுநாயகமாகத் திகழும் தலம் கும்பகோணம். ஒரு சமயம், வெள்ளத்தால் உலகம் அழிய இருந்த வேளையில், மீண்டும் உயிர்களை படைப்பதற்கான பீஜம் தாங்கிய அமுத கும்பத்தை பிரம்மா நீரில் மிதக்க விட்டார். அது வெள்ளத்தில் மிதந்து ஒதுங்கிய இடமே கும்பகோணம். மாசிமகத்தன்று கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் பிரதான வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது. இங்குள்ள தீர்த்தம் மகாமகத் தீர்த்தம். காசியில் ஓடும் புனித கங்கையும் தன் பாவம் தீர நீராடும் குளம் இது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமை பெற்ற தலம்.
மாசிமக தலம்: ஒருசமயம், வெள்ளத்தால் உலகம் அழிய இருந்த வேளையில், படைப்புக் கலன்கள் தாங்கிய அமுதக்குடத்தை, பிரம்மா மேருமலையில் வைத்திருந்தார். பிரளய வெள்ளம் பெருக்கெடுத்து அதில் மிதந்த குடம் தென்பகுதி வந்து சேர்ந்தது. வேடனாக வந்த சிவபெருமான், திருவிடைமருதூரில் தங்கினார். பாணம் ஒன்றை எடுத்து குடத்தைக் குறிவைத்தார். பாணம் எய்த இடம் பாணாத்துறை ஆயிற்று. இவ்வூர் கும்பகோணத்துக்கு வடகிழக்கே உள்ளது. குடம் உடைந்து ஐந்து இடங்களில் சிதறியது. வடமேற்கே சுவாமிமலையிலும், தென்மேற்கே தாராசுரத்திலும், தென்கிழக்கே திருநாகேஸ்வரத்திலும், கிழக்கே திருவிடைமருதூரிலும், வடகிழக்கே கருப்பூரிலும் அமுதம் சிதறி விழுந்தது. இத்தலங்களை "பஞ்சகுரோசத் தலங்கள் என்று குறிப்பிடுவர். "குரோசம் என்றால் "கூப்பிடு தூரம். அருகருகே இந்த தலங்கள் உள்ளதால், இப்பெயர் பெற்றன.
குடத்தின் வடிவில் குளம்: கும்பகோணம் மகாமகக்குளம் கிழக்கு மேற்காக நீள் சதுரமாகவும், வடகரையும் தென்கரையும் சிறிது உள்வளைந்தும், கிழக்கில் குறுகியும், மேற்கில் அகன்றும் உள்ளது. இதை மேலிருந்து பார்த்தால் குடம்போல காட்சியளிக்கும். இக்குளத்தில் புனித நீராடினால் அமுதக் குடத்திற்குள்ளேயே நீராடியது போலாகும். பொதுவாக ஒருவரின் பாவம் புண்ணியதீர்த்தம் எதில் நீராடினாலும் நீங்கும் என்பது சாஸ்திரவிதி. புண்ணியத் தலங்களில் பிறந்தவர்கள் செய்த பாவம் கங்கையில் நீராடினால் நீங்கும். ஆனால், காசியில் பிறந்தோர் கும்பகோணத்தில் நீராடினால் தான் பாவம் விலகும். கும்பகோணத்தில் பிறந்தவர்கள் எங்கும் செல்லத் தேவையில்லை. மகாமகக்குளத்தில் நீராடினாலேயே விலகிவிடும். இதனை "கும்பகோணேக்ருதம் பாவம் கும்பகோணே விநச்யதி என்பர்.
நீராட உகந்த நாட்கள்: புனித தீர்த்தங்களில் எல்லாநாட்களும் நீராடலாம் என்றாலும், குறிப்பிட்ட நாட்களில் நீராடுவது சிறப்பானதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. மகாமக குளத்தில் நீராடுவதற்கு அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, வெள்ளிக்கிழமை, கார்த்திகை நட்சத்திரம், சிவராத்திரி, மாசிமகம், மகாமகம் ஆகிய நாட்கள் சிறப்பானதாகும்.புனிதமான மகாமக தீர்த்தம் கும்பகோணத்தில் மூன்று ஏக்கர் பரப்பில் மகாமகக்குளம் அமைந்துள்ளது. ஒருமுறை உலகம் அழிய இருந்த காலத்தில், படைப்புக்கலன் தாங்கிய அமுதம் நிரம்பிய கும்பத்தை சிவன் அழித்தார். அவ்வாறு பெருகிய அமுதமே இந்தக் குளம் என்று சொல்வதுண்டு. மாசிமகத்தன்று இக்குளத்தில் நீராடுவது புனிதமானது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் மிகவும் சிறப்பானது. இக்குளத்தில் பிரம்மா, அஷ்டதிக்பாலகர்கள், நவகன்னியரான கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதா, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோடினி, சரயு நதிகள் நீராடி புண்ணியம் அடைந்தன. பவுர்ணமியன்று நீராடுவோருக்கு ஏழேழு பிறவிக்கும் நன்மை ஏற்படும். மாசித்திருவிழாவின் பத்தாம்நாளில் கும்பேஸ்வரர் பஞ்சமூர்த்தியுடன் இந்த குளக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் வழங்குகிறார்.
தீர்த்த நீராடலுக்கு முக்கியத்துவம் தரும் விழா மாசி மகம் ஆகும். மாசி மாதத்தில் பவுர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் இவ்விழா நடக்கும். தீர்த்தங்களுடன் அமைந்த பெரும்பாலான கோயில்களில் இந்நாளில் தெப்பத்திருவிழா நடக்கும். ஆண் குழந்தை வேண்டுபவர்கள், இந்நாளில் முருகனை வேண்டி விரதமிருந்து வழிபடுவர்.
பலன்: மாசி மகத்தன்று முருகப்பெருமானை வழிபடுவதால் ஆண் குழந்தை பிறக்கும், அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
|
|
|