விஜயதசமி கொண்டாடுவது ஏன்: பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால் மட்டுமே நிகழ வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். தனக்கு அழிவே கிடையாது என ஆணவம் கொண்டான். தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் பராசக்தியிடம் முறையிட்டனர். அவர்களின் துன்பம் தீர்க்க எண்ணிய தேவி, உக்ரரூபம் கொண்டாள். மும்மூர்த்திகளும் தங்களது அம்சத்தையும் அவளுக்கு அளித்து உதவினர். மகிஷனுடன் அவள் போரிட்டாள். சூலத்தை வீசிக் கொன்றாள். மகிஷனை வதம் செய்ததால் ‘மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். அந்த வெற்றித் திருநாளையே விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். இந்நாளில் அம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.
சக்தியின் நான்கு வடிவங்கள்: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (பிள்ளைகள் செய்யும் தவறை தந்தைக்கு தெரியாமல் தாய் மறைப்பது போல, உலக உயிர்கள் செய்யும் தவறை சிவனுக்கு தெரியாமல் மறைத்து வைத்தல்) அருளல் என்னும் ஐந்து தொழில்களை செயல்படுத்த ஆதாரமாகத் திகழ்பவள் சக்தி. எல்லாவற்றுக்கும் மூல காரணமாக இருப்பதால் அவளை ‘ஆதிபராசக்தி என்பர். அவள் சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும்போது ‘பவானி என்றும், அவளே ஆண் தன்மையை ஏற்கும் போது ‘மகாவிஷ்ணு என்றும், அசுரர்களை அழித்து உலகத்தைக் காத்தருளும்போது ‘காளி என்றும், வெற்றிவாகை சூடி புன்முறுவல் காட்டும் போது ‘துர்கா என்றும் பெயர் பெறுகிறாள். பவானி, மகாவிஷ்ணு, காளி, துர்கா ஆகிய நான்கு வடிவங்களும் சக்தியின் வடிவங்களாகும்.
அம்பாள் வழிபாடு அங்கும் இங்கும்..: முதல்வேதமான ரிக்வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் பராசக்தியைப் பற்றிய குறிப்புகள் ‘தேவி சூக்தம் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளன. அம்பிகையை மட்டுமே வழிபடும் முறைக்கு ‘சாக்தம் என்று பெயர். சாக்தத்தில் வாமாசாரம், தட்சிணாசாரம் என்னும் இருவித வழிபாடு உண்டு. தேவியை வாமாசாரமாக வழிபடுவது கடினமானது. இம்முறை வடமாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. அசாமில் வாமாசாரத்தைப் பின்பற்றுகின்றனர். மந்திரதீட்சை பெற்றால் தான் அம்பாளை இங்கு வழிபட முடியும். அம்பாளுக்கு பலியிடுவது இவர்களின் வழக்கம். சாத்வீகமான முறையில் அம்பிகையை வழிபடும் முறை தட்சிணாசாரம் ஆகும். இது தென்னிந்தியப் பகுதியில் பின்பற்றப்படுகிறது. இங்கு பெரும்பாலான அம்மன் கோயில்களில் உயிர்ப்பலி கொடுப்பதில்லை.
விஜயதசமி மரம்: சாதாரணமாக, கோயில்களில் வில்வம், வேம்பு, அரசமரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று வன்னிமரத்தை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம். பஞ்சபாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது. அவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் வன்னிமரத்தை 21 முறை வலம் வந்தால் எண்ணியது ஈடேறும் என்பர். இந்நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வன்னிமரத்திற்கு, சிறப்பு பூஜை நடக்கும்.
முக்குண தேவியர்: ஆதிபராசக்திக்கு ஆயிரமாயிரம் வடிவங்களும், பெயர்களும் உள்ளன. இதில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியவை முக்கிய வடிவங்கள். மனிதனுக்குரிய குணங்களான சத்வம்(மென்மை), ரஜோ(வன்மை), தமோ(மந்தம்) ஆகிய மூன்றின் அடிப்படையில் தேவியர் அமைந்துள்ளனர். சத்வம் கொண்டவளாய் லட்சுமியும், ரஜோ கொண்டவளாய் சரஸ்வதியும், தமோகுணம் கொண்டவளாய் பார்வதியும் இருக்கின்றனர். எல்லா குணங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுகிறது. எனவே தான். மூன்று தேவியரையும் நாம் வழிபடுகிறோம்.
ஒழுக்கத்திருநாள்: சிவபக்தனாக ராவணன், தினமும் கோயிலுக்குச் சென்று சிவபார்வதியை வணங்குவது வழக்கம். பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை. சீதையை சிறையெடுத்து அசோகவனத்தில் வைத்தான். இதனால், பார்வதிதேவிக்கு ராவணன் மீது சீற்றம் உண்டானது. பக்தியை விட ஒழுக்கமே முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த எண்ணினாள். விஸ்வாமித்திரர் மூலம் சிறுவயதிலேயே ராமன் தேவிமந்திரத்தை அறிந்திருந்தார். அம்மந்திரத்தை ஜெபித்து நவராத்திரி விரதம் மேற்கொண்டார். அவருக்கு துர்க்கையாக காட்சியளித்த பார்வதி, யுத்தத்தில் வெற்றி கிடைக்க அருள்புரிந்தாள். ராவணனை வெற்றி கொண்ட தினத்தையே வடமாநிலங்கள் சிலவற்றில் விஜயதசமியாக மக்கள் கொண்டாடுகின்றனர். வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.
வெற்றிக்குரிய தசமி திதி: எச்செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அவ்வெற்றியை நமக்கு தந்தருளும் நாளே விஜயதசமி. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர். இதனை ‘அட்சர அப்யாசம் என்பர். கூத்தனூர் சரஸ்வதிகோயிலில் அட்சர அப்பியாச வழிபாடு மிகவும் விசேஷம். படிப்பு மட்டுமில்லாமல் சுபவிஷயங்களையும் இன்று தொடங்கினால், எளிதில் வெற்றி பெறலாம்.
|
|
|