கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் கைகள். சூரபத்மனுக்கு அசுரமுகம். தாரகனுக்கு யானைமுகம். சிங்கமுகனுக்கு சிங்கமுகம். இவர்கள் குலகுருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவனை நோக்கித் தவமிருந்தனர். தவப்பயனாக 1008 அண்டங்களையும் ஆட்சிசெய்யும் வரம் பெற்றனர். சூரியன், சந்திரன், அக்னிதேவன், குபேரன் முதலிய தேவர்கள் அனைவரும் அசுரர்களின் பணியாளர்களாக மாறினர். தேவர்கள் பிரம்மாவிடம் சென்று தங்கள் நிலையைச் சொல்லி வருந்தினர். சூரபத்மனை அழிக்க சிவனால் மட்டுமே முடியும். அதனால் அவரிடம் முறையிட்டால் விடுதலை கிடைக்கும், என்றார் பிரம்மா. தேவர்களும் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். அவருக்கு சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம், அதோமுகம் ஆகிய ஆறு முகங்கள் உண்டு. அவற்றில் இருந்து ஆறுநெருப்புப் பொறிகளை உண்டாக்கினார். அவை சரவணப்பொய்கையில் விழுந்து குழந்தைகளாக மாறின. அவற்றை ஒன்று சேர்த்த போது கந்தன் ஆனார். இவர் சூரபத்மனை வெற்றி கொண்டு தேவர்களைக் காத்தார். ஐப்பசி சஷ்டிதிதியில் சூரசம்ஹாரம் நிகழ்ந்ததாக ஐதீகம்.
|
|
|