அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்?: அன்னசூக்தத்தில் உள்ள மந்திரம் அன்னத்தின் தன்மையை எடுத்துச் சொல்கிறது. ‘ ஒருவன் என்னை (உணவு) நிறைய சாப்பிடத் தொடங்கினால் அவனை நான் சாப்பிட்டு விடுவேன், என்கிறது அந்த மந்திரம். கடவுளுக்குப் படைத்த பிரசாதம் ஆனாலும், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக்கூடாது. அன்னத்தை கடவுளாக உணர்ந்து அளவாகச் சாப்பிட வேண்டும். உடல்நிலைக்கேற்ப ஒருவருடைய ஜீரணசக்தி மாறும். அவரவர் தன்மைக்கேற்ப சாப்பிடுவது அவசியம். இதைத் தான் ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று பெரியவர்கள் சொல்லி வைத்தனர். அளவாகச் சாப்பிட்டால் உடலில் வியாதிகள் அணுகாது. ஆரோக்கியம் நிலைத்திருக்கும்.‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழலாம். அன்னத்தை வீணாக்கக்கூடாது, அது தெய்வசொரூபம் என்பதை மக்களுக்கு உணர்த்தவே அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.
பகவானும் பழைய சாதமும்: சிவாலயங்களில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்கிறார்கள். இதுபோல் பெருமாளையும் பழைய சாதத்துடன் ஒப்பிடுவார்கள். பழையது சாப்பிடும் பழக்கம் இப்போதும் சிலரிடம் இருக்கிறது. கிராமங்களுக்குப் போனால், முதல்நாள் மீந்துபோன சோறை, தண்ணீரில் போட்டு விடுவார்கள். காலையில் எழுந்ததும், சோறு ஊறிய நீரைக் குடிப்பார்கள். இதற்கு ‘நீராகாரம் என்று பெயர். பின், பழைய சாதத்தை சாப்பிடுவார்கள். இது காலை வெயிலைத் தாங்கும் சக்தியைத் தரும். ‘பழையதும் பகவானும் ஒண்ணு தான். எப்படி தெரியுமா? பழையதும் விடிய விடிய ஜலத்தில் கிடக்கிறது. நாராயணன் கடலிலேயே படுத்திருக்கிறார். பழையதை காலையில் சாப்பிட வேண்டும். பகவானையும் காலையில் வணங்க வேண்டும். பழையதைப் போல நாராயணனும் நாரம் (தண்ணீர்) சூழ இருக்கிறார். நாரம் சூழ உள்ளதால் தான் அவனை ‘நாராயணன் என்கிறோம்.
மழலை வரம் அருளும் மகேசனின் அன்னப் பிரசாதம்!
அபிஷேகப் பிரியரான ஈஸ்வரனை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி திருநாள் அன்று, ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு உரிய பொருட்களால் வழிபடுவது விசேஷம். சித்திரையில் மருக்கொழுந்து, வைகாசியில் சந்தனம், ஆனி மாதத்தில் காராம் பசுவின் பால், ஆவணியில் வெல்லம், புரட்டாசியில் கோதுமை மற்றும் பசு நெய் கலந்த வெல்ல அப்பம், கார்த்திகை மாதத்தில் பசு நெய் மற்றும் தாமரை தீபம், தை மாதத்தில் கருப்பஞ் சாறு, மார்கழியில் பசு நெய் மற்றும் நறுமண பன்னீர் சமர்ப்பித்து வழிபடுவார்கள். அதேபோல், ஐப்பசி மாதத்தில் அன்னத்தால் ஈஸ்வரனை வழிபடுவது சிறப்பு. அன்னம் பரப்பிரம்ம சொரூபம் என்பார்கள். அதாவது, அன்னம் வேறு, ஆண்டவன் வேறு அல்ல. இதையே சோத்துக்குள்ளே இருக்கார் சொக்கநாதர் என்றும் சொல்வது உண்டு.
சிவலிங்க பாணத்தின் நீள்வட்ட வடிவமானது, எல்லையற்ற ஒன்றைக் குறிக்கும். அதாவது, பிரபஞ்ச சக்தியை உணர்த்துவது. அரிசியின் வடிவமும் நீள்வட்டம்தான். ஆகாயத்தில் தோன்றும் காற்றின் துணையுடன் நெருப்பு எரிகிறது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகிறது. ஆக, அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகிறது. பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி அடையாதவனை போதும் என்று சொல்ல வைப்பதும் அன்னம் மட்டுமே! ஆக, உன்னதமானவருக்கு உன்னதமானதைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பைத் தருவது ஐப்பசி அன்னாபிஷேகம்.
அன்னாபிஷேக தினத்தில் ஈசனின் திருமேனியில் சாற்றப்படும் ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம். எனவே, அன்று சிவதரிசனம் செய்தால் கோடிலிங்க தரிசனத்துக்குச் சமம். அன்று லிங்கத்தின் மேல் சாற்றப்பட்ட அன்னம் வீரியம் மிக்க கதிர்வீச்சு கொண்டதாக இருக்கும் என்பது ஐதீகம். அன்று, பாண லிங்கத்தின் மேலுள்ள அன்னம் தவிர்த்து, ஆவுடை மற்றும் பிரம்ம பாகத்தின் மேலுள்ள அன்னம், மக்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தயிர் கலந்து கொடுப்பதும் வழக்கத்தில் உண்டு. பிறகு, அந்தப் பிரசாதத்தில் ஒரு பாகம், அருகிலுள்ள திருக்குளத்தில் கரைக்கப்படும். ஏன் அப்படி?
பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு பல்லுயிர்க் குங் கல்லிடைப் பட்டதேரைக்கும் அன்றுற் பவித்திடும் கருப் பையுறு சிவனுக்கும் மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத வானவர் குழாத்தினுக்கும் மற்றுமொரு மூவருக்கும் யாவருக்கும்
என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, இறைவனது பிரசாதம் எறும்பில் தொடங்கி நீர்வாழ் உயிரிகள், மனிதர்கள் என சகல ஜீவராசிகளுக்கும் இதன் மூலம் சென்றடைகிறது.
ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்: “சோறுகண்ட இடம் சொர்க்கம்” என ஒரு பழமொழி உண்டு. அதற்குப் பலர் பல விதமான அர்த்தங்களைக் கூறுவர். ஆனால் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
சிவன் கோயில்களில் நடத்தப்படும் அன்னாபிஷேகத்தைக் காண்பவருக்கு சொர்க்கம் என்பதே சிறந்தது. சரியும் கூட. ஒவ்வொரு அரிசியும் லிங்கம்போல இருப்பதால் அத்தனை கோடி லிங்கங்களைத் தரிசித்த புண்யமும் நமக்கு உண்டு. ஆக அவ்வளவு உயர்ந்தது அன்னாபிஷேகம். மாமன்னன் ராஜராஜ சோழன் தான் பெற்ற வெற்றியின் நிமித்தம் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியபோது சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்ய ஆரம்பித்தான். மிகப்பெரிய லிங்கமான அதற்கு அன்னாபிஷேகம் செய்வது எளிதல்ல. இருந்தும் அதனைத் தன் கடமையாக ஏற்றுச் செய்தான். அடுத்து இவருடைய மகன் ராஜேந்திரனும், தன்னுடைய ஆட்சியில் பெரிய வெற்றி பெற்ற போது அதனைக் கொண்டாட, கங்கை கொண்ட சோழபுரத்தில் தஞ்சை போன்றே ஒரு பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டினான். தந்தையைப் போலவே, மகனும் லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்து வந்தான். காலங்கள் கடந்தன... அந்தப் பழக்கம் அறவே நின்று போனது.... இது சார்ந்த தகவல்கள், காஞ்சி மகாபெரியவர் சந்திரசேகரஸ்வாமிகளுக்குத் தெரிய வந்த போது, தானே முன்னின்று ஒரு கமிட்டியை அமைத்து, அன்னாபிஷேகத்தைத் தொடர ஏற்பாடு செய்தார்.... இந்தச் சிறந்த பணி இன்று வரை செவ்வனே தொடருகிறது.
அன்னாபிஷேகம் காலம் காலமாய் சிவனுடன் சம்பந்தப்பட்டது. சிதம்பரத்தில்... காசியில்... உஜ்ஜயினி.... ஓங்காரேஸ்வரர் உட்பட பல இடங்களில் நடத்தப்படுகிறது. வாழ்க்கைக்கு அன்னமே பிரதானம். அந்த அன்னத்தை நமக்கு அளித்த ஆண்டவனுக்கு அந்த அன்னத்தாலேயே நாம் செய்யும் அபிஷேகம் தான் அன்னாபிஷேகம். கர்நாடகாவின் குடகு ஜில்லாவில் பெருமான்மையாக வாழும் கூர்க்ஸ் அல்லது குடவாஸ் என அழைக்கப்படும் மக்கள் அறுவடை முடிந்ததும், முதல் காரியமாக விளைந்த நெல்லில் ஒவ்வொருவரும் தன் பங்கிற்கு அரிசி தானியங்களை கோயிலில் கொண்டு வந்து குவிப்பர். கோவர்த்தன மலையைத் தூக்கி கிருஷ்ணன் யாதவ இனத்தினரைக் காத்தபோது, பதிலுக்கு யாதவர்கள் கிருஷ்ணனுக்கு நன்றியாக, அவன் கோயிலில் அன்னம், பண்டங்களை மலைபோல் குவித்தனர். காசியில் கண்கண்ட தெய்வம் அன்னபூரணி. சிவனுக்கே அன்ன மிட்டவள். ஜகத்திற்கு என்றென்றும் தன்னுடைய அகப்பையால் அன்னம் வழங்கி வருபவள். இதற்கு நன்றியாக மக்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? தீபாவளியன்று ஏராளமான அன்னவகைகளைக் குவித்து அவளைத் தொழுகின்றனர்.
தானங்களில் சிறந்தது அன்னதானம். கர்னாடகாவில் சிறுகோயில்களில் கூட தினமும் காலையில் பகவானைக் காணவரும் பக்தர்களுக்குப் பிரசாத அன்னம் உண்டு. எலுமிச்சை சாதம், அவல், தயிர் சாதம், இனிப்புக் கேசரி எனப் பல தருவர். ஆக... அன்னம் கோயிலுக்குப் புதிதல்ல, அது காலம் காலமாய் வழங்கி வருவதுதான். ஆனால் பிரம்மாண்ட சிவலிங்கத்திற்கு அதைவிட பிரம்மாண்டமாய் அன்னத்தை நிரப்பி, அன்னாபிஷேகமாகச் செய்வதுதான் தனிச் சிறப்பு. இந்த வகையில் கங்கைகொண்ட சோழபுரம் அன்னாபிஷேகம் மிகமிகச் சிறப்பானது. தொடர்ந்து அன்னம் தயாரிக்கப்பட்டு, பிறகு அதனை பாய்களில் பரப்பி, பத்து நிமிடம் வைத்திருந்து அடுத்து வாளிகளில் நிரப்பி, சிவலிங்கத்திற்குச் சாத்தப்படுகிறது. சுமார் ஏழரை மணி நேரத்திற்குக் குறையாமல் இது நடத்தி முடிக்கப்பட்டு, மேலும் மெருகூட்ட வேகவைக்கப்பட்ட காய்கறிகள், பூக்கள், பழங்களை வைத்துச் சுற்றி அலங்கரித்து, அன்னத்திலேயே அழகாக சிவனின் முகத்தை உருவாக்கி அழகுக்கு மேலும் அழகூட்டுகிறார்கள்.
தீபாராதனைக்கு முன் வேத பாராயணங்கள், ருத்திரம், சமகம் ஆகியவை ஓதப்படுகின்றன. பூஜை முடிந்து இறுதியாக தீபாராதனை காட்டி ஒன்றரை மணி நேரம் அலங்காரத்தை அப்படியே வைத்திருக்கிறார்கள். எதற்கு? எங்கோ இருக்கும் பக்தன் கூட கிட்டே நெருங்கிப் பார்க்கத்தான். அன்னாபிஷேக சாதத்துடன் பொங்கல், தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், எள்ளு சாதம், பாயாசம் போன்றவை பல கோயில்களில் கூடுதல் பிரசாதமாக செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. பொதுவாக லிங்கத்தை மூன்று பாகங்களாக பிரிப்பர்.
பிரம்மபாகம்... விஷ்ணு பாகம்... சிவபாகம்... இதில் மேல்பாகத்தின் மீது இருக்கும் அன்னம் இறுதியில் அதிக அதிர்வு மற்றும் கதிர் வீச்சுடன் திகழும் எனக் கருதப்படுவதால் அதனை மக்களுக்குத் தராமல் குளங்கள், நீர்நிலைகளில் கரைப்பர். ஒரு பங்கை பறவைகளுக்குப் போடுவர். மீதமுள்ள உணவை எடுத்து மக்களுக்குப் பிரசாதமாகத் தருவர். இந்த மீதி அன்னாபிஷேக அன்னத்திலும் இறைவனின் அதிர்வுகள் உண்டு. ஆனால் அது மனிதன் தாங்கக் கூடிய அளவில் இருக்கும் என சிவாச்சாரியார்களால் கூறப்படுகிறது. மற்ற பிரசாதங்களும் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் திருவாரூர், தியாகராஜர், நாகை நீலாயதாட்சியம்மன், காயாரோகணேஸ்வரர், நாகை சட்டநாதஸ்வாமி, காயரோகனேஸ்வரர் உட்பட பலகோயில்களில் மிகச்சிறப்பாக அன்னாபிஷேகம் நடக்கிறது. உணவை இந்துக்கள் தெய்வமாக பார்க்கின்றனர். இதனால் உணவைச் சாப்பிடும் முன் அதனைக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு, பிறகு சாப்பிட ஆரம்பிப்பர். செய்யும் தொழிலே தெய்வம். தனக்கும், மக்களுக்கும் அன்னம் அளிக்கும் நிலத்தை வணங்கி உழுகிறான் விவசாயி. ஆக அந்தத் தெய்வம் நமக்கு அளிப்பதை. பதிலுக்கு நாம் அளிப்பதே அன்னாபிஷேகம். ஒவ்வொரு சிவன் கோயிலிலும் நடைமுறைக்கு வரவேண்டும். முடிந்த வரை அன்னதானம் செய்வோம். அதனைக் கோயிலின் மூலம் முறையாகச் செய்து தெய்வீக அருளைப் பெறுவோம்.
|
|
|