அவந்திகாபுரி அரசனான வேதப்ரியன் சிவபக்தன். இவன் பூஜையில் ஆழ்ந்திருந்தபோது, அவனைக் கொல்ல வந்த அசுரன் தூஷணனைச் சம்ஹாரம் செய்து, மஹாகாலேஸ்வரராக உஜ்ஜயினியில் அருள்பாலிப்பவர் பைரவர். தீய சக்திகளை அடக்க வீர பராக்கிரமச் செயல்கள் புரிந்து, தென்னகத்தில் அட்ட வீரட்டானத் தலங்களில் எழுந்தருளியிருக்கும் மகேசன் எடுத்த சொரூபங்கள் பைரவத் திருக்கோலங்கள் எனப் போற்றப்படுகின்றன.
பரமேஸ்வரன் ருத்ர ரூபமெடுத்து, பிரம்ம தேவனின் ஆணவத்தை அடக்கி, ஒரு சிரசைக் கொய்தார். இதனால் பிரம்மஹத்தி தோஷத்துக்கு உள்ளாகி, கபாலம் ஏந்தி, பிட்சாடனராக அலைந்து, முடிவில் காசியை அடைந்தார். தேவியின் உதவியால் விமோசனம் பெற்றார். பின்னர், வீரபத்திரராகத் தோன்றினார். என்றும், தட்சனின் வேள்வித் தீயில் தன்னை மாய்த்துக் கொண்ட சதி தேவியின் உடலுடன் கோரத்தாண்டவமாடினார் என்றும் புராணக் கதைகள் வாயிலாக நாம் அறிவோம். பன்னிரெண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் குடிகொண்டு அவற்றைக் காப்பவராகவும், ஐம்பத் திரண்டு சக்தி பீடங்களில் அன்னைக்குப் பாதுகாவலராகவும் விளங்குபவர் பைரவர்.
பரண (பேணிக் காத்தல்), ரவண (அழித்தல்), வமண (தோற்றுவித்தல்) என்பதன் கூட்டெழுத்து தான், ‘பைரவர் ’ எனும் நாமம். அகந்தையினால் இழிச்செயல் புரிவோரைத் தண்டிப்பதால், ‘அமர்ஷகர்’ எனவும், எவ்வித உள்நோக்கமுமின்றி இழைக்கப்படும் பாபச் செயல்களைப் பொறுத்தருளுவதால், ‘பாபபக்ஷணர்’ என்றும் வேறு பெயர்களுண்டு. எந்தக் கட்டுப்பாடும் இன்றி கயவர்களைக் கொடூரமாகத் தண்டிக்கும் தருகுரும்பனாக விளங்குவதால், ‘ஸ்வச்சந்தம்’ என்றும் அறியப்படுகிறார்.
பைரவருக்கு உகந்த தினம் அஷ்டமி திதி. அதிலும் தேய்பிறை அஷ்டமி மிக முக்கியமானதாகும். மேலும், கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி அதைவிட மிகவும் சிறந்ததாகும். இதுவே, ‘மகா தேவாஷ்டமி’ என்று வட இந்திய மாநிலங்களில் அனுசரிக்கப்படுகிறது. ‘அஷ்டமி திதியா? வேண்டவே வேண்டாம் ’ என்று பொதுவாக ஒதுங்குகையில், நடந்தேறியச் சம்பவங்களை அந்நாளில் நினைத்தோ மானால் துன்பம், தீய சக்திகள் அகன்று, இன்பமும், நன்மையும் விளைந்த நன்னாளாக அது திகழ்வதை அறியலாம்.
ஈஸ்வரனின் ஆணைப்படி அனைத்து ஜீவராசிகளுக்கும் பதினாறு வகை செல்வப் பேறுகளையும் அளிப்பவர்கள் அஷ்ட லக்ஷ்மியர். சொர்ண பைரவரிடமிருந்து பெற்ற அப்பேறுகளை அவர்கள் பக்தர்களுக்கு அளித்து வர, சக்தியின் வீர்யம் படிப்படியாகக் குறைகிறதாம்.
அதனால், அஷ்டமிதோறும், பைரவரை வழிபட்டு சக்திகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் முயற்சியில் அவர்கள் முழுவதும் ஈடுபட்டிருப்பதால், பக்தர்கள் மீது கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறதாம். அதனால்தான் அந்நாட்களில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் பலனளிப்பதில்லை. அஷ்டலட்சுமிகள் வணங்கும் பைரவநாதரை அன்று (அஷ்டமியில்) பூஜிப்பதால் நன்மைகள் பெறலாம் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
காலை, நண்பகல், மாலை மற்றும் இரவு வேளைகளில் பைரவரை அவருக்குரிய சுலோகங்களால் துதித்துப் பூஜிக்க, வாழ்வு வளம் பெறும். பைரவருக்கும் எட்டு என்ற எண்ணுக்கும் மிக நெருங்கியத் தொடர்பு உள்ளதால் அவருக்கு அஷ்ட விதார்ச்சனை என்னும் சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது. ஊரின் காவல் தெய்வமாகக் கருதப்படுவதால் கிராமங்களில் எளிதில் கிடைக்கும் எட்டுவிதமான மலர்கள், எட்டுவிதமான தளிர்கள், இலைகள் கொண்டு, எட்டு பேர் சுற்றி நின்று பைரவரின் ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி அர்ச்சிப்பது வழக்கம். நிவேதனமாக, நெய், தேனில் அமிழ்த்திய வடை, தேனில் ஊறிய இஞ்சி, கலந்த சாத வகைகள், பாயசம் முதலியன படைக்கப்படுகின்றன.
அஷ்டவிதார்ச்சனை செய்வதால் பைரவர் மனம் மகிழ்ந்து அன்பர்களின் மனதில் தோன்றும் அச்சத்தை நீக்கி, வாழ்வில் வளம் தந்து காப்பார் என்பது உறுதியான நம்பிக்கை. இப்படிப்பட்டவரை, ஆதிசங்கரர் பாடிப் பரவியது போன்று நாமும், ‘காசிகா புராதிநாத கால பைரவம் பஜே’ எனப் போற்றி வணங்குவோம்.
மஹாதேவாஷ்டமி: அன்னதானம் செய்யுங்கள் ..
கார்த்திகை மாதம், தேய்பிறை அஷ்டமியை, மகாதேவாஷ்டமி என்றும் பைரவாஷ்டமி என்றும் அழைப்பர். இந்த நாளில், அன்னதானம் செய்வது விசேஷம். இந்த அன்னதானத்தை, சிவபார்வதியே வந்து ஏற்பதாக ஐதீகம். இந்நாளில், அன்னதானம் செய்யக் காரணம் என்ன?
பத்மாசுரனும், அவனது தம்பி தாரகாசுரனும், தேவர்களுக்கு மிகவும் கொடுமை செய்தனர். அவர்களை அழிக்க, சிவன் முடிவெடுத்து, தன், நெற்றிக்கண்ணில் இருந்து, முருகனை உருவாக்கினார். முருகன், தாரகாசுரனை அழித்து, பத்மாசுரனை அடக்கி, சேவலாகவும், மயிலாகவும் மாற்றி விட்டார். நியாயத்துக்காக செய்த கொலையானாலும், பாவம் வந்து சேரும். அந்தப் பாவத்திற்கு பரிகாரம் தான், அன்னதானம். சிவன், தன் மகன் முருகனுக்கு ஏற்பட்ட இந்த பாவ தோஷத்தை நீக்க, மானிட வடிவெடுத்து, பூலோகம் வந்து, எல்லாருக்கும் அன்னதானம் செய்தார். அவர் அன்னதானம் செய்த இடம், கேரளாவிலுள்ள வைக்கம் என்ற ஊர். இதை, அவ்வூரிலுள்ள மகாதேவர் கோவில் வரலாறு கூறுகிறது.
இப்போதும், கார்த்திகை அஷ்டமியை ஒட்டி, இங்கு, 11 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. இதை, வைக்கத்தஷ்டமி என்பர். இந்த தினத்தில், இங்கு, ஏராளமான பக்தர்கள் அன்னதானம் செய்கின்றனர். இந்த தானத்தை ஏற்க, சிவனே வருவதாக ஐதீகம் என்பதால், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அன்னதானம் செய்ய முடியும். அதுபோல், சாப்பிட வருவோரும், சிவனோடு அமர்ந்து சாப்பிடுகிறோம் என்ற, பரவச நிலையை அடைகின்றனர். மேலும், சிவன் பைரவராக உருவெடுத்து அந்தகாசுரன் என்ற அரக்கனை அழித்ததால், இங்கு, பைரவர் வழிபாடும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இரண்யாட்சன் என்ற அசுரனின் மகன் அந்தகாசுரன். இவன், திருமால், பிரம்மா முதலான தெய்வங்களால் கூட, அழிவு வரக் கூடாது என்ற வரத்தை, சிவனிடம் பெற்றான். இந்த வரம் காரணமாக, தேவர்களை அடிமைப்படுத்தி துன்புறுத்தி வந்தான். தேவர்களே... என்னை நீங்கள் அழிக்க முடியாதபடி வரம் பெற்றுள்ளேன். என் சேனைகளை நீங்கள் அழித்தால், அவர்கள், எங்கள் குலகுரு சுக்ராச்சாரியாரின் மந்திர சக்தியால், உயிர் பெற்று விடுவர். அதனால், தோல்வியை ஒப்புக் கொண்டு, பெண்களைப் போல உருவத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இந்த உத்தரவை மீறினால், உங்களைக் கொன்று விடுவேன்... என்று மிரட்டினான். இதனால், தேவர்கள் பயந்து, தங்கள் உருவத்தை பெண் உருவாக மாற்றிக் கொண்டனர். இந்நிலையிலிருந்து மீள, சிவனை சரணடைந்தனர் தேவர்கள்.தான் கொடுத்த வரத்தை, தவறாகப் பயன்படுத்திய அந்தகாசுரனின் ஆணவத்தை அடக்க முடிவெடுத்த சிவன், தன்னில் இருந்து தோன்றிய பைரவரை அழைத்து, பைரவா... நீ சென்று, அந்தகாசுரனின் ஆணவத்தை அடக்கி வா... என்றார்.
வந்திருப்பது சிவஅம்சம் பொருந்தியவர் என்பதை அறியாத அந்தகாசுரன், பைரவருடன் போரிட்டான். அழிந்து போன அசுரப்படைகளை, சுக்ராச்சாரியார், தன் மந்திர சக்தியால் காப்பாற்றி விட்டார். உடனே, சிவன், சுக்ராச்சாரியாரை விழுங்கி, வயிற்றில் அடக்கிக் கொண்டார். இதன் பின், பைரவர், அந்தகாசுரனை, ஒரு சூலத்தில் குத்தி, உயர்த்திப் பிடித்து, அவனது, ரத்தம் வழியும் வரை காத்திருந்தார். ஒடுங்கிப் போன அந்தகாசுரன், தன்னை விடுவிக்கும்படி கெஞ்சினான். பைரவரும் அவனை விடுவித்தார். அவன் சிவநாமம் சொன்னவன் என்பதால், உயிர் பிழைத்தான். எதிரிகளால் தொல்லை இருந்தால், தேய்பிறை அஷ்டமி நாட்களில், பைரவருக்கு வடைமாலை, செவ்வரளி அல்லது எலுமிச்சை மாலையை, ராகு காலத்தில் சாத்தினால், எதிரிகளின் தொல்லை, நீங்கும் என்பர்.
கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியன்று, பைரவரை வணங்குவதுடன், அன்னதானமும் செய்தால், நாம் படும் கஷ்டங்களின் அளவு குறையும். பாதுகாப்பான வாழ்வு கிடைக்கும்.