Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>வரவிருக்கும் பண்டிகை> ஆருத்ரா தரிசனம்
ஆருத்ரா தரிசனம்
ஆருத்ரா தரிசனம்

மார்கழி திருவாதிரையன்றும், ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நட்சத்திரங்களிலும் நடராஜப் பெருமானை வணங்குவதற்குரிய பிரார்த்தனை சித்சபேச தசகம் என்ற நூலில் இருந்து தரப்பட்டுள்ளது.  பக்தியோடு இதை பாராயணம் செய்பவர்கள் எல்லாவித நன்மைகளையும், யோகபலனும் பெறுவார்கள்.

* பிரகாசம் பொருந்திய சித்சபையின் தலைவரும், தில்லைவாசிகளாலும், வேதபண்டிதர்களாலும் வணங்கப்படும் திருப்பாதங்களைக் கொண்ட நடேசப்பெருமானை நான் துதிக்கிறேன்.

* ஒரு பாதத்தை மேலே தூக்கி நின்று ஆடுபவரும், காலனைச் சம்ஹாரம் செய்த காலகாலனும், வணங்கும் அன்பர்களைக் காக்க சூலம் தாங்கி நிற்பவரும், மனக்கவலைகளைப் போக்கி அருள்செய்பவரும், கருணையே வடிவானவரும், கபாலம் ஏந்தி நிற்பவருமான சிதம்பரப் பெருமானைப் போற்றுகிறேன்.

* நெற்றியில் ஒளிவீசும் கண்களைக் கொண்டவரும், வியாக்ரபாதர், பதஞ்சலி போன்ற மகரிஷிகளால் வில்வம் போன்ற பூஜாதிரவியங்களால் அர்ச்சிக்கப்படுபவரும், ஸ்ரீகோவிந்தராஜப்பெருமாளைத் தோழனாகக் கொண்டவரும், புலித்தோலினைத் தன் ஆடையாக உடுத்தவரும், பவானியான சிவகாமி அன்னையைத் தன் மனைவியாகப் பெற்றவரும் ஆகிய சிற்றம்பல நடராஜப் பெருமானை வணங்கி மகிழ்கிறேன்.

* கண்ணிலிருந்து புறப்பட்ட தீக்கணையால் மன்மதனைத் தகனம் செய்தவரும், ஊன்றிய திருவடியில் அபஸ்மாரனை அழுத்தி நிற்பவரும், கழுத்தில் சர்ப்பங்களை மாலையாகப் அணிந்தவரும், வேதங்களின் சொரூபமாகத் திகழ்பவரும், ஆசையே இல்லாதவரும், ஒளிவீசும் ஜடாமுடியைத் தாங்கி நிற்பவருமான தில்லை நடராஜப்பெருமானுக்கு தலைவணங்குகிறேன்.

* திருவாதிரை நன்னாளில் அபிஷேகம் காண்பவரும், அழகிய உருவம் கொண்டவரும், சந்தனம், திரவிய அபிஷேகத்தால் மனம் மகிழ்பவரும், மனக்கவலையைத் தீர்க்கும் மகாபிரதோஷ புண்ணிய வேளையில் பூஜிக்கப்படுபவரும், பிரம்மா,விஷ்ணு,நந்திகேசர், நாரதர், இந்திரன் மற்றும் தேவர்களுடன் நர்த்தனம் புரிபவருமான சபாபதியைப் போற்றுகிறேன்.

* எந்த இறைவனை வணங்கினால் பரிசுத்தமான மனத்தைப் பெறுகிறோமோ, விபூதி, ருத்ராட்சம் அணிந்து எந்தப் பெருமானை வணங்கினால் பரிசுத்தம் அடைகிறோமோ, மாணிக்கவாசகர் போன்ற சிறந்த பக்தர்கள் எல்லாம் யாரைப் போற்றித் துதித்தார்களோ, அந்த தில்லை அம்பலவாணரை வழிபடுகிறேன்.

* எந்தச் சன்னதியை முன்ஜென்மத்தில் செய்த புண்ணிய வினைகளால் தரிசிக்க இயலுமோ, எந்த இறைவனிடம் சர்க்கரைப் பொங்கல் போன்ற நிவேதனங்களை பரப்பி வழிபட்டால் கோரிய பலன் நிறைவேறுமோ, எந்த மூர்த்தியை துறவிகளும், ஞானிகளும் நித்தமும் தியானித்து மகிழ்கிறார்களோ அந்த சிற்றம்பலப் பெருமானை சேவிக்கிறேன்.

* சிறந்த திருவாக்கினைக் கொண்டவரும், பக்தர்களின் பாவங்களை போக்கி அருள்பவரும், யாகங்களைக் காப்பவரும், வேதங்களை உபதேசித்தவரும், பர்வதராஜ குமாரியான உமையவளிடம் விளையாடி மகிழ்பவரும், சிதம்பர ரகசியமாகத் திகழ்பவருமான கனகசபாபதி பெருமானைச் சரணடைகிறேன்.

* பூதங்களின் தலைவனான நடராஜ மூர்த்தியே! நீரே என் வாழ்வில் உண்டாகும் இன்னல்களைப் போக்கி அருள்செய்ய வேண்டும். சாதுக்களுக்கும், நல்லவர்களுக்கும் உண்டாகும் மனபயத்தை நீயே போக்கி துணை நிற்க வேண்டும். சபேசனே! உமது திருவடிகளை அடைக்கலம் புகுந்து நிற்கிறேன்.

*  பிறவிப்பயனை அருள்செய்பவரும், மோட்சத்தை தந்தருள்பவரும், நம் வாழ்வில் இன்பங்களைச் சேர்ப்பவரும், தலையில் புண்ணிய மிக்க கங்கையினை தாங்கி நிற்பவருமான நடராஜப் பெருமானை போற்றுகின்றேன்.

நடராஜருக்குரிய திருவாதிரை: நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவன ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. இதில் திருவாதிரை நடராஜருக்குரிய சிறப்பான விரதநாள் ஆகும். மார்கழி மாத திருவாதிரை நாளில் தொடங்கி ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். அதிகாலையில் சிவாலயம் சென்று நடராஜரை தரிசனம் செய்ய வேண்டும். விரதகாலத்தில், சிதம்பரம், திருநெல்வேலி, குற்றாலம், மதுரை ஆகிய பஞ்சநடராஜர் தலங்களில் எங்காவது ஓரிடத்திற்கு சென்று வரலாம். இந்த விரதத்தை அனுஷ்டிப்பது மிகவும் நன்மை தரும் என்று உபதேச காண்டச் செய்யுள் விளக்குகிறது. இவ்விரதத்தை முருகப்பெருமான் மேற்கொண்டு சிவபெருமானின் அருள்பெற்றார். வியாக்ரபாதர் விரதமிருந்து உபமன்யுவைப் பிள்ளையாகப் பெறும் பேறு பெற்றார். விபுலன் என்னும் அந்தணர், இவ்விரத பயனால் நடராஜப்பெருமானின் திருவடியில் நீங்கா இடம் பிடித்தார். விரதநாளில் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் படிக்க வேண்டும். சுவாமிக்கு களி, தயிர்ச்சாதம், சுண்டல் நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

தில்லை பாதி திருவாசகம் பாதி: திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்கவாசகர், அவர் சொல்லச் சொல்ல இதை எழுதியவர் யார் தெரியுமா? தில்லையம்பல நடராஜப்பெருமானே அந்தணர் வடிவத்தில் வந்து ஏடும் எழுத்தாணியும் கொண்டு எழுதினார். ‘மாணிக்கவாசகன் சொல்ல அழகிய சிற்றம்பலம் உடையான் எழுதியது என்று திருவாசக ஏட்டில் கையெழுத்திட்டு சிற்சபையின் பஞ்சாட்சரப்படியில் வைத்து விட்டு மறைந்து விட்டார். திருவாசக ஏட்டைக் கண்ட கோயில் அந்தணர்கள் மாணிக்கவாசகரை அழைத்து திருவாசகத்திற்கு விளக்கம் தருமாறு வேண்டினர்.

அவரும் தில்லை நடராஜரின் சன்னதிக்கு வந்துநின்று ‘அம்பலக்கூத்தனே அதன் பொருள் என்று கூறி இறைவனுடன் இரண்டறக் கலந்தார். அதனால் ‘தில்லை பாதி திருவாசகம் பாதிஎன்ற பழமொழி உண்டானது. திருவாசகம் வேறு, தில்லை நடராஜர் வேறு அல்ல. இரண்டும் ஒன்றே. திருவாசகம் முழுவதும் சிதம்பரப்பெருமானின் திருவடியையே போற்றுகிறது. திருவாசகத்தில் சிவபுராணம் தொடங்கி, அச்சோ பதிகம் வரை 51 தலைப்புகளில் 658 பாடல்கள் உள்ளன. மாணிக்கவாசகருக்கு சிறப்பு செய்யும் விதத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி திருவாதிரை விழா அமைந்துள்ளது. பத்துநாட்கள் நடைபெறும் இவ்விழாவில், ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும் மாணிக்கவாசகர், சுவாமி சன்னதிக்கு எழுந்தருள்வார். அப்போது திருவாசகம் பாடப்படும். குறிப்பாக திருவெம்பாவைப் பாடல்களைப் பாடுவர். அதன்பின் மாணிக்கவாசகருக்கும், சுவாமிக்கும் தீபாரதனை நடக்கும்.

பட்டமரத்தில் பகல் குருடு: சிதம்பரத்தில் வாழ்ந்த அருளாளர்களில் மறை ஞானசம்பந்தரும், உமாபதி சிவமும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இருவரும் சந்தானக்குரவர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளனர். குருசிஷ்யராக வாழ்ந்த இவ்விருவரும் சந்தித்த விதம் சுவாரஸ்யமானது. தில்லைவாழ் அந்தணரான உமாபதிசிவம் ஒருநாள் நடராஜருக்குப் பகல்நேர பூஜையை முடித்துவிட்டு, பல்லக்கில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.

பல்லக்கின் முன் ஒருவன் தீவட்டியைப் பிடித்துச் சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் நின்றமறை ஞானசம்பந்தர், பல்லக்கில் செல்லும் உமாபதி சிவத்தைக் கண்டார். பகல்நேரத்தில் சூரியன் இருக்க, ஏன் தீவட்டியோடு செல்ல வேண்டும் என்ற பொருளில், “பட்ட மரத்தில் பகல் குருடு என்று உமாபதிசிவத்துக்கு கேட்கும்படியாக உரக்கச் சப்தமிட்டார்.

இதைக் கேட்ட உமாபதிசிவத்துக்கு சுருக்கென்றது. பல்லக்கில் இருந்து குதித்து, மறைஞானசம்பந்தரை நோக்கி ஓடினார். எப்படியாவது அவரைத் தன் குருவாக ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உமாபதி சிவத்திற்குத் தோன்றியது. உமாபதி சிவத்திடம் பிடிகொடுக்காமல் ஓடிய மறை ஞானசம்பந்தருக்கு பசி ஏற்பட்டது. ஒரு வீட்டின் முன் நின்று உணவு கேட்டார். அவர்கள், அவரது கைகளில் ‘சிவப்பிரசாதம் என்று சொல்லி கூழை ஊற்றினர். அவரும் ‘சிவப்பிரசாதம் என்று சொல்லி குடிக்கத் தொடங்கினார். இதற்குள் உமாபதி சிவம் ஓடிவந்து, மறை ஞானசம்பந்தரின் கைகளில் வழிந்த கூழைக் ‘குருபிரசாதம் என்று சொல்லிக் குடித்தார். அதுமுதல் மறை ஞானசம்பந்தருக்கு உமாபதி சிவம் சீடராக மாறினார். உமாபதிசிவமே சைவசிந்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் ‘சித்தாந்த அட்டகம் என்னும் எட்டுச் சாத்திரங்களை எழுதிய பெருமை உடையவர் ஆவார்.

உணர்வற்ற நிலையில் பாதுகாப்பவர்
: சிவபெருமானுக்கு போகநிலை, வேகநிலை, யோகநிலை என்று மூன்று விதமான கோலங்கள் உண்டு. மனைவி மக்களுடன் வீடு வாசல் என்று வாழும் வாழ்க்கையே போக வாழ்க்கை. இந்த விதத்தில் இறைவனும் கல்யாண சுந்தரனாக, உமா மகேஸ்வரராக  அருள் செய்கிறார். தீமைகளைப் போக்கும் விதத்தில் சம்ஹார மூர்த்தியாக அவர் வேகவடிவமும் எடுக்கிறார். கஜசம்ஹாரர், மன்மத தகன மூர்த்தி, ருத்திர மூர்த்தி என்ற வடிவங்களில் தீமைகளைப் போக்குகிறார். மிக உயர்ந்த நிலை ஞானநிலை. ஞானமூர்த்தியாக வரும்போது மவுனமே பிரதானம். இதுவே தென்முகக்கடவுளான தெட்சிணாமூர்த்தி ஆகும். இந்த மூன்று கோலங்களையும் ஒருசேர அருளுவதே நடராஜர் வடிவாகும். அதாவது, உல்லாசமாக தேவியுடனும், கோபத்துடன் ருத்ரமூர்த்தியாக சம்ஹார தாண்டவமும், பெருங்கூட்டத்துடன் ஹாஸ்யமாகவும் இவர்ஆடுகிறார்.  இவரது ஆட்டத்தில் நவரசங்களும் உண்டு. இந்நடனத்தின் போது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (உறக்கத்தின் போது உணர்வற்று இறந்தவனைப் போல் நாம் மாறி விடுகிறோம். அந்நேரத்தில் நம் உயிரைப் பாதுகாப்பது இறைவனே. இதையே ‘மறைத்தல் தொழில் என்பர்) அருளல் என்னும் ஐந்தொழில்களையும் செய்து, இந்த உலகத்தை இயக்குகிறார்.

உலக இயக்கத்திற்கு ஆதாரமான நடராஜர் திருநடனம்:
நீர், நெருப்பு, காற்று, விண், மண் என்று பஞ்சபூதங்களால் இவ்வுலகம் இயங்குகிறது. கடலில் எப்போதும் ஓயாது அலையடித்துக் கொண்டே இருக்கிறது. நெருப்பு தன் ஜுவாலையான நாக்கை சுழற்றி எரிகிறது. காற்று தென்றலாய், புயலாய் வலம் வருகிறது. வானம் இடியாய், மின்னலாய், மழையாய் வர்ணஜாலம் செய்கிறது. பூமிப்பந்து தங்கு தடை இல்லாமல் சூரியனைச் சுற்றி வந்து இரவையும், பகலையும் உண்டாக்குகிறது. இந்த பஞ்சபூதங்களால் தான் உலக இயக்கமே நடக்கிறது. இந்த இயக்கத்திற்கு ஆதார சுருதியாய் இருப்பது சிவபெருமானின் திருநடனம் தான். ஈசன் அசைந்தால் உலகமே அசைகிறது. அவன் அசைவை நிறுத்தி விட்டால் சிறிய அணு கூட அசையும் சக்தியை இழந்து விடும். இதைத்தான் ‘அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது என்பர். மனிதன் கருவில் இருக்கும்போதே இதயத்தின் இயக்கம் துவங்கி விடுகிறது. எவ்வளவு காலம் வாழ்கிறானோ அதுவரை இதயத்தின் வேலை தொடர்கிறது. ஒருகணப்பொழுதும் அது தன் இயக்கத்தை நிறுத்துவதில்லை. நடராஜப்பெருமானும் இவ்வுலகத்தின் மூச்சாக இருந்து எப்போதும் நடம் செய்து இவ்வுலகத்தின் இதயகமலமாய்த் திகழ்கிறார். அவரது ஆட்டம் நின்றுவிட்டால், உலகம் அழிந்து போகும்.

ஆண்டுக்கு ஆறு அபிஷேகம்: ஆடல்வல்லானாகிய நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகமவிதிகள் கூறுகின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை. மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

சிதம்பர ரகசியம்: சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று வடிவங்களில் வீற்றிருக்கிறார். இம்மூன்று விதங்களிலும் ஒருசேர அருள்பாலிக்கும் தலம் சிதம்பரம். இங்கு லிங்கரூபமாக இருக்கும் திருமூலநாதர் அருவுருவ வடிவமாவார். நடராஜரின் திருமேனி உருவ வடிவமாகும். சிதம்பர ரகசியமாக இருக்கும் வெட்டவெளி சிவனின் அருவவடிவமாகும். நடராஜரின் வலப்பக்கத்தில் ஒரு சிறுவாசல் உள்ளது. அதை திரையால் மூடி இருப்பர். பூஜையின் போது அத்திரையை அகற்றி கற்பூர ஆரத்தி காட்டுவர். அப்போது இறைவனின் திருவுருவம் எதையும் காண முடியாது. ஆகாய ரூபமாக இறைவன் இருப்பதை இவ்வழிபாடு காட்டுகிறது. இறைவன் ஆகாயம் போல் பரந்து விரிந்தவன். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. இறைவனும் முதலும் முடிவும் இல்லாதவன் என்பதை இது காட்டுகிறது. தங்கத்தால் செய்யப்பட்ட வில்வமாலை ஒன்றை மட்டும் அவ்விடத்தில் காணலாம். இதையே சிதம்பர ரகசியம் என்பர்.

நடராஜர் சன்னதி அமைப்பு: நடராஜப்பெருமான் இடைவிடாமல் ஆடிக் கொண்டே இருக்கும் தலம் சிதம்பரம். ஆயிரம் கோயில்கள் இருந்தாலும் சிதம்பரம் கோயிலுக்கு மட்டுமே கோயில் என்று பெயர். தில்லைவனம், புண்டரீகபுரம், பொன்னம்பலம், கனகசபை, வியாக்ரபுரி, பூலோக கைலாயம் என்னும் வேறு பெயர்களும் இதற்கு உண்டு. சிதம்பரத்தை சித்+அம்பரம் என்று பிரிப்பர். சித்-அறிவு. அம்பரம்-வெட்டவெளி. மனிதா! உன்னிடம் ஒன்றுமே இல்லை என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள்.சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்ரத்தையும், சிவனுக்குரிய சிவசக்ரத்தையும் இணைத்து பிரதிஷ்டை செய்துள்ளதாகவும் தகவல் உண்டு.  இந்த சக்ரத்தில் நடராஜப்பெருமான் ஐக்கியமாகி, தன் ஆனந்த நடனத்தினால் உலகை இயக்கிக் கொண்டிருக்கிறார். சைவ ஆகமங்கள் நடராஜரை இதயத்திற்கு உரியவராக குறிப்பிடுகின்றன. இதை உணர்த்தும் விதத்தில் நடராஜர் சந்நிதியின் கருவறை விமானம் இதயவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இடைவிடாத இதயத்துடிப்பினை மையமாகக் கொண்டேமனிதனின் இயக்கம் நடக்கிறது. அதைப் போலவே, ஆடல்வல்லானின் ஆட்டத்தாலே அண்டசராசரங்களும் இயங்குகின்றன. நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே என்ற தத்துவத்தை சிதம்பர நடராஜர் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்.

பொன்னம்பலத் தத்துவம்: சிதம்பரத்தில் கனகசபையும், சித்சபையும் ஒன்றாக சேர்ந்திருக்கும் இடமே பொன்னம்பலம். இதற்கு சிற்றம்பலம், ஞானசபை, சித்சபை என்ற பெயர்களும் உண்டு. மனிதனின் உருவ அமைப்பிற்கும், சிதம்பரத்திலுள்ள நடராஜர் சன்னதிக்கும் ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தின் மேல் 9 தங்கக்கலசங்கள் உள்ளன. இவை ஒன்பதும் நவசக்திகளையும், மனித உடலிலுள்ள 9 துவாரங்களையும் குறிக்கிறது. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தில் ஐந்து படிகள் உள்ளன. 64 கலைகளைக் குறிக்கும் விதமாக 64 கைம்மரங்கள் விதானத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து600 தங்க ஓடுகள் உள்ளன. மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கை இது. இங்கு அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்பின் எண்ணிக்கையை ஒத்திருக்கிறது. 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், பஞ்சபூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. மனிதனின் இதயம் போல பொன்னம்பலத்தின் நடுவில் நடராஜப்பெருமான் வீற்றிருக்கிறார். மனித இதயம் உடலின் மத்தியில் இல்லாமல், இடப்புறமாக இருப்பதுபோல, கருவறையும் கோயிலின் மத்தியில் இல்லாமல் சிறிது தள்ளியே அமைந்துள்ளது.

நடராஜரின் கீழே இன்னொரு நடராஜர்: ஒருமுறை பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார். இதற்காக, தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் சத்தியலோகத்துக்கு அழைத்தார். சிதம்பரத்தில் இருந்து, நடராஜரின் திருநடனத்தைக் காண்பதில் கிடைக்கும் இன்பத்தை விட அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது? என அவர்கள் பிரம்மாவிடம் கேட்டனர். அப்போது, நடராஜர் அந்தணர்களிடம், நீங்கள் யாகத்திற்கு செல்லுங்கள். யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றுகிறேன், என வாக்களித்தார். அவ்வாறு தோன்றிய கோலத்தை ரத்னசபாபதி என்கின்றனர். ரத்னசபாபதியின் சிலை சிதம்பரம் நடராஜர் சிலையின் கீழே உள்ளது. இவருக்கு தினமும் காலையில் 10 -11 மணிக்குள் பூஜை நடக்கும். இந்த சிலைக்கு முன்புறமும், பின்புறமும் தீபாராதனை செய்வது வழக்கமாக இருக்கிறது.

நடராஜர் சன்னதியில் தீர்த்தம்: பெருமாள் கோயில்களில் தீர்த்தம் தருவது வழக்கம். ஆனால், சிவாலயமான திருவாலங்காடு நடராஜர் சன்னதியில் தீர்த்தம் தருகின்றனர். நடராஜர், ஊர்த்துவதாண்டவம் ஆடியபோது, அவரது உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்க நிலைக்குச் சென்றனர். சுவாமி தன் தலையிலிருந்த கங்கையைத் தெளித்து அவர்களை எழுப்பினார். இதனடிப்படையில் இங்கு தீர்த்தம் தரப்படுகிறது.

ஆச்சரிய அம்பிகை:
நடராஜரின் துணைவியை சிவகாமி என்பர். ஆனால், திருவாலங்காட்டு அம்பாளுக்கு சமி சீனாம்பிகை என்று பெயர். நடராஜரின் நடனத்திற்கு ஈடுகொடுத்து, காளி ஆடியபோது ஒரு பெண்ணால் இப்படியும் ஆட முடியுமா? என இந்த அம்பாள் ஆச்சரியமடைந்தாள். இதனால், இவளுக்கு  சீனாம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது. சீனம் என்றால் ஆச்சரியம். இவள் இடது கை நடுவிரலை மடக்கி, கன்னத்தில் கை வைக்கப்போகும் நிலையில், ஆச்சரியப்படும் பாவனையுடன் முகத்தை வைத்திருக்கிறாள். இந்த சிலை அமைப்பு காண்போரை ஆச்சரியப்பட வைக்கும்.

அம்பிகையும் அவருக்குள்ளே!: நடராஜரின் திருநடனத்தை சிவகாமி என்ற பெயர் தாங்கி அம்பிகை கண்டு களிப்பதைக் காணலாம். ஆனால், சிதம்பரத்தில் நடராஜர் சிவசக்தியின் அம்சமாக இருப்பதாக ஐதீகம். அதாவது ஆண்பாதி, பெண்பாதியான அர்த்தநாரீஸ்வரரின் தன்மையுடன் திகழ்கிறார். வலப்பாகம் சிவமும், இடப் பாகம் சக்தியும் வீற்றிருக்கின்றனர். அதனால், சிவகாமி இல்லாமல் நடராஜரை வழிபட்டாலே இருவரையும் வழிபட்ட பலன் உண்டாகும். சிவபெருமானுக்குரிய 25 சிவமூர்த்தங்களில் தலையாயதாக நடராஜரே விளங்குகிறார். இவருக்கு அம்பலவாணர், ஆடல்வல்லான், கூத்தப்பெருமான், சபாபதி, நிருத்தன், நடேசன், சித்சபேசன் என்று பல பெயர்கள் இருந்தாலும் நடராஜர் என்ற பெயரே மக்கள் மத்தியில் பிரசித்தமாக உள்ளது. பழந்தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தில் ஆடல்வல்லான் என்று இவர் அழைக்கப்பட்டிருக்கிறார்.

ஆலங்காட்டு ரகசியம்: திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில், நடராஜரின் பஞ்சசபைகளில் ஒன்றான ரத்தினசபை உள்ளது. சிதம்பர ரகசியம் போல, ஆலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து கிடக்கிறது. காரைக்காலம்மையார் சிவனைத் தரிசிக்க கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்றபோது சிவன் அவரை அம்மா! என்றழைத்து,என்ன வரம் வேண்டும்? எனக்கேட்டார். அவர் பிறவாமை வேண்டும். பிறந்தாலும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் வேண்டும்! என்றார். சிவன் அந்த வரத்தை அருளவே, ஆலங்காடு வந்த அம்மையார் மூத்த திருப்பதிகம் பாடினார். இவ்வேளையில் மன்னன் ஒருவனின் கனவில் தோன்றிய சிவன், தனக்கு பின்புறம் காரைக்கால் அம்மையாருக்கு சன்னதி எழுப்பும்படி கூறினார். அதன்படி மன்னன், நடராஜருக்கு பின்புறம் சன்னதி எழுப்பினான். இதில் காரைக்காலம்மையார் ஐக்கியமானார். இவர் சிவனின் தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இதை ஆலங்காட்டு ரகசியம் என்கின்றனர்.

சிதம்பரம் தான் நம்பர் ஒன்: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்கள் என்பர். இந்த ஐந்தின் சேர்க்கையாக இந்த உலகம் இருக்கிறது. பரம்பொருளாகிய இறைவன் ஐந்து பூதங்களிலும் கலந்து நின்று நம்மை வழிநடத்துகிறார். இந்த ஐந்துக்கும் உரிய இடங்களாக ஐந்து திருத்தலங்களை ஏற்படுத்தி வைத்துள்ளனர். அவை சிதம்பரம் (ஆகாயம்), திருவண்ணாமலை (நெருப்பு), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (காற்று), காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் (நிலம்) ஆகும். இதில் ஆகாயத்திற்குரிய சிதம்பரமே முதன்மையாக இருக்கிறது. பஞ்சபூதத லங்களுக்குச் செல்லும்போது, சிதம்பரத்தில் தொடங்கி, காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருவானைக்காவல், காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் என்று யாத்திரையை நிறைவு செய்வது மரபாகும்.

ஆட்டம் எத்தனை ஆட்டம்: நடனக்கலைக்கு நாயகனாக திகழ்பவர் சிவன். அதனால், அப்பெருமானை நடேசன் என்று போற்றுகிறோம். இவர் 108 நடனங்களை ஆடியிருக்கிறார். இதில் அவர் மட்டும் தனித்து ஆடியவை 48. தேவியோடு சேர்ந்து ஆடியவை 36. திருமாலுடன் ஆடியது 9. முருகப்பெருமானுடன் ஆடியது 3. தேவர்களுக்காக ஆடியது 12 ஆகும். சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்திநிலையை அடைவர். இதனைபார்க்க முக்தி தரும் தில்லை என்று கூறுவர். நம் ஆன்மாவை, சிவகாமியாக எண்ணி, நடராஜப் பெருமானின் நடனத்தை காணவேண்டும் என்பது ஐதீகம்.

Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar