Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>வரவிருக்கும் பண்டிகை> ரத சப்தமி
ரத சப்தமி
ரத சப்தமி

எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் கொண்டாடி  மகிழ்கிறார்கள். அந்த நாள்தான் ரதசப்தமி. உத்ராயன தை அமாவாசைக்குப் பின்வரும் ஏழாவது நாள் (சப்தமி திதி) ரதசப்தமி என்று  போற்றப்படுகிறது. சூரியன் தன் வடக்கு நோக்கிய பயண ஆரம்பத்தில், இந்த சப்தமி திதியிலிருந்துதான் தன் ஒளிக்கதிர்களுக்கு  வெப்பத்தை சிறுகச் சிறுகக் கூட்டுகிறான் என்று சாஸ்திரம் கூறுகிறது. இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது.

ரதசப்தமி நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், அன்றைய  தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும். சூரிய உதயத்திற்குமுன் எழுந்து காலைக்கடன்களை  முடித்துக்கொண்டு ஆண்கள் சூரியனுக்குப் பிடித்த எருக்கன் இலைகள் ஏழு எடுத்து அத்துடன் அட்சதையும் (சிறிதளவு பச்சரிசி)  விபூதியையும் தலையின்மீது வைத்துக்கொண்டு கிழக்கு திசை நோக்கி நீராட வேண்டும். பெண்கள் (கன்னி மற்றும் சுமங்கலிகள்) ஏழு  எருக்கன் இலைகள் மேல் சிறிதளடு மஞ்சள் தூளையும் அட்சதையையும் வைத்துக்கொண்டு நீராட வேண்டும். சூரியனின் ஏழு  வகையான கிரணங்கள் எருக்கன் இலைகள் மூலமாக உடலில் பாய்ந்து உடல்நலத்தை வலுப்படுத்தும் என்பது ஐதீகம். அதற்குப்பின்  சூரிய நமஸ்காரம் அவசியம் செய்யவேண்டும். அப்போது அர்க்ய மந்திரம் சொல்லி நீர்விட வேண்டும். வேதம் அறிந்த விற்பன்னர்களிடம்  உபதேசம் பெற்று மந்திரத்தை அறிந்துகொள்வது நலன் தரும்.

ஆயுள், ஆரோக்யம் தரும் விரதங்கள் ஆண்டில் பல வந்தாலும் அனைத்திலும் சிறந்ததாகச் சொல்லப்படுவது ரத சப்தமி விரதமே.  தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், அன்றுமுதல் வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிப்பதாக ஜோதிட புராண நூல்கள்  சொல்கின்றன. அதாவது அன்றுதான் தட்சிணாயன காலம் முடிந்து உத்தராயண காலம் ஆரம்பமாகிறது. அன்று சூரிய உதய நேரத்தில்  எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு. இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது சூரிய ஒளிபடும்  இடத்தில் நீராடலாம். நீராடும்போது, ஏழு எருக்கிலைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, அவற்றின் மீது சிறிது அரிசி, மஞ்சள்  ஆகியவற்றை வைத்து அதனை அப்படியே உச்சந் தலையில் வைத்துக் கொண்டு நீரில் மூழ்கி எழவேண்டும். வீட்டில் நீராடும் போது  அவற்றைத் தலையில் வைத்துக் கொண்டபின், தண்ணீர் ஊற்றிக்கொண்டு குளிக்கலாம். இப்படிச் செய்வதால் நம் பாவங்கள் விலகி  பகலவனைக் கண்டு பனி மறைவது போல மறைந்து போகும். புண்ணிய பலன்கள் பெருகும் என்பது ஐதிகம்.

அன்றைய தினம் குளித்து முடித்தபின் சூரியனை நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின் தெரிந்த சூரிய துதிகளைச் சொல்ல வேண்டும்.  எந்த தெய்வத்தை வழிபடுகிறோமோ அந்த தெய்வத்தின் திருக்கரங்களில் நீர் வார்ப்பது போன்ற அர்க்கியம் விடுவது. எனவே ரத  சப்தமியன்று சூரியனுக்கு அர்க்கியம் விடுவது முக்கியத்துவம் உடையது. சூரியனுக்கு உகந்த நிவேதனம் சர்க்கரைப் பொங்கல். பொங்கல்  வைத்து அது சூடு ஆறும் முன்பாக நைவேத்தியம் செய்துவிட வேண்டும். சூரியனுக்குப் படைத்த சர்க்கரை பொங்கலை பிறருக்கு  விநியோகிப்பது சிறப்பான பலன் தரும். ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க் கோலம் போடுவது பலரது  வழக்கம். இந்தக் கோலத்தினை வீட்டு வாசலில் போட்டு, அதன் வடமாக ஒரு கோட்டினை தெருவரை நீளும்படி வரைவதும் உண்டு.

நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார்.  அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆரோக்யமும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது  சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் சிலர் கூறுவர். பார்வைக்குத் தெரியும் பகவானை பகலவனை ரதசப்தமி தினத்தில்  வழிபடும்போது சூரியனை நோக்கி, ஓம் நமோ ஆதித்யாய.. ஆயுள், ஆரோக்யம், புத்திர் பலம் தேஹிமே சதா! என்று சொல்லி  வணங்கலாம். அறிவு, ஆற்றல், ஆரோக்யம், ஆயுள் என யாவற்றிலும் சிறந்து விளங்கும் அனுமனுக்கு அந்த ஆற்றலை குருவாக இருந்து  அளித்தவர் சூரியன். சூரியனை பொங்கலன்றும் ரத சப்தமி நாளிலும் மட்டும் வழிபடாமல் தினமுமே வணங்கலாம். ஆதவனை  வழிபடுவோர் வாழ்வில் தீவினை இருள் விலகி நன்மை ஒளி பரவும் என்பது நிச்சயம்!

சூரியனை ஆன்மாவாகவும் சந்திரனை தலையிலும் வைத்து இருப்பார் ஈசன் (ஆதித்யாத்மா, சந்திரசேகர:) ஸ்ரீமன் நாராயணன், அவற்றை தன்னுடைய இரு கண்களாக வைத்து, செயல்பாடுகளுக்கு சாட்சியாக இருப்பார் (சந்த்ரசூர்யௌச நேத்ரே). சூரியனும் சந்திரனும் அடுத்தடுத்த ராசியில் தென்படுவர். கடகத்தில் சந்திரனும் சிம்மத்தில் சூரியனும் இருப்பார்கள். உச்சத்திலும் நீசத்திலும் அவ்விருவரும் அடுத்தடுத்த ராசியில் தென்படுவார்கள். (மேஷம், விருஷபம் - உச்சம், துலாம், விருச்சிகம் - நீசம்). கிழமைகளிலும் ஞாயிறு, திங்கள் அடுத்தடுத்து இருக்கும் தை மாதத்தில் சூரிய பூஜை மாசிப் பவுர்ணமியில் சந்திர பூஜை அங்கும் அவர்களது வரிசை தவறாது ஆக, சூரியனுக்கு உகந்தது இந்த தை மாதம்!

சூரியன், கிரக நாயகன், ஆத்ம காரகன், ஒளிப்பிழம்பு, உலகத்தின் ஒளிவிளக்கு. உலகின் இயக்கம் அவன் வசம். முத்தொழிலிலும் சூரியன் தென்படுவதால், பரம்பொருளின் மறுவடிவமாகத் திகழ்கிறான் என்று புராணம் கூறும் (விரிஞ்சி நாராயண சங்கராத்மனே) கிரகங்களின் நாயகன் சூரியன். ஒளி வடிவானவன்; பார்வைக்கு இலக்காகும் பரம்பொருள், அவன் (சூர்ய: ப்ரத்யஷதேவதா). உலகின் அணையா விளக்கு என்பார் வராகமிஹிரர் (த்ரைலோக்ய தீபோரலி:) சூரியனது கிரணங்களே, மற்ற கிரகங்களை இயக்க வைக்கிறது. காலை, மதியம் மற்றும் அந்தி சாயும் வேளைகளில் அவனை ஆராதிப்பது சிறப்பு என்கிறது வேதம். சூரிய வழிபாடு சுகாதாரத்தை நிலை நிறுத்தும் (ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத்). சூரியனின் கிரணம் படாத இடமே இல்லை. கிரணம் பட்டு, அதன் தாக்கத்தால் பொருளில் தென்படும் மாற்றங்களைக் கொண்டு உருவானதே காலம்; அதாவது வேளை என்கிறது வேதம் (தஸ்யா: பாகவிசேஷேண ஸ்மிருதம்காலவிசேஷணம்) இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்கால நிகழ்வுகளுக்கு அவனே சாட்சி! முக்காலத்திலும் நிகழ்கிற பலன்களை வெளியிடும் தகுதியை எனக்கு அளித்து அருளுங்கள் என வராகமிஹிரர் சூரிய பகவானை வேண்டுகிறார் (வாசம்ந: ஸததாதுறைக்கிரண: த்ரைலோக்யதீபோரலி:).

அவனுடைய வெப்பம், குளிர்ச்சியை சந்தித்த சந்திர கிரணத்துடன் இணைந்து ஆறு பருவக் காலங்களை உருவாக்குகிறது. தட்பவெட்பங்கள்தான் உலகச் சூழல் என்கிறது சாஸ்திரம் (அக்னீஷோமாத்மகம்ஜகத்). இடைவெளியை (ஆகாசத்தை) நிரப்பும் இந்த இரு பொருள்களின் மூலாதாரம் அவன் என்கிறது வேதம் (விச்வான்யயோ...). மோட்சத்தின் நுழைவாயில் சூரியன் என்கிறார் வராகமிஹிரர் (வர்த்மாபுனர் ஜன்மனாம்). அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களைப் படிப்படியே அடையச் செய்பவன் சூரியன்! ஒளிப்பிழம்புகள் ஜோதிடத்துக்கு ஆதாரம். சூரியன், ஒளிப்பிழம்பு. அவனிடம் இருந்து ஒளியைப் பெற்ற சந்திரனும் ஒளிப்பிழம்பு நட்சத்திரங்களும் ஒளி வடிவானவை என்கிறது வேதம் (ஜ்யோதிரிதி நஷத்ரேஷீ). கண்ணுக்குப் புலப்படும் சாஸ்திரம் ஜோதிடம். அதற்கு, சூரியனும் சந்திரனும் சாட்சி என்கிறது ஜோதிடம் (பிரத்யஷம் ஜ்யௌதிஷம் சாஸ்திரம் சந்திரார்க் கவுயத்ர ஸாக்ஷிணௌ). கிரகங்களின் கூட்டத்துக்கு சூரிய - சந்திரர்கள் அரசர்கள் என்கிறது ஜோதிடம். தேவர்களின் கூட்டத்துக்கு மன்னர்கள் என்கிறது வேதம். சூரியனும் சந்திரனும் இன்றி, வேள்வி இல்லை என்றும் தெரிவிக்கிறது. அது (யதக்னீ ஷோமாவந்தரா தேவதா இஜ்யேதே).

இப்படி வேதத்தின் மறுவடிவம்; வேள்விக்கு ஆதாரம்; ஜோதிடத்தின் அடிப்படை; விஞ்ஞானத்தின் எல்லை; மெய்ஞ்ஞானத்தின் நிறைவு; அன்றாடப் பணிகளின் வழிகாட்டி... என நம்முடன் இணைந்த கிரகம் சூரியன். சிம்மத்துக்கு அதிபதியாக சூரியனைச் சொன்னாலும், அத்தனை ராசிகளிலும் சூரியன் (ஆன்மா) நிறைந்திருக்கிறான். எண்ணக்குவியல்களின் தொகுப்பை மனம் என்கிறோம். மன சஞ்சல இயல்பு, சந்திரனுக்கும் உண்டு (சஞ்சலம்ஹிமன: பார்த்த) சந்திரனுக்குக் கடகம் என்று சொன்னாலும், எல்லா ராசிகளிலும் நிறைந்திருக்கிறான், அவன் ஹோரா என்கிற பெயரில், எல்லா ராசிகளிலும் இரண்டு பேரும் சம பங்கில் நிறைந்திருப்பதாகச் சொல்கிறது ஜோதிடம். இந்த இரண்டுபேரின் தொடர்புடன் ராசி நாதனான மற்ற கிரகங்கள் செயல்படுகின்றன.

சூரியன் ஆன்மகாரகன்; சந்திரன் மனோகாரன். ஆன்மாவும் மனமும் இணைந்தால் மட்டுமே புலன்கள் செயல்படும். ஜீவாத்மா வெளி÷றிய பிறகு, மனம் இருந்தும் உடல் இயங்குவதில்லை. ஒவ்வொரு ராசியும் ஆன்மாவுடன் இணைந்த மனம் படைத்த உடலாகவே செயல்படுகிறது. ராசிச்சக்கரத்தில் சூரியனின் ஊடுருவல், அத்தனை கிரகங்களையும் செயல்படவைத்து, நன்மை தீமைகளை, கர்மவினைக்குத் தக்கபடி, நடைமுறைப்படுத்த வைக்கிறது.

பிரளயம் முடிந்து, புதிய படைப்பு துவங்கும்போது, பிரளயத்துக்கு முன்பு இருந்த சூரியனையும் சந்திரனையும் அப்படியே தோற்றிவைக்கிறார் கடவுள் என்கிறது வேதம் (சூர்யா சந்திரம ஸௌ தாதா யதாபூர்வம் கல்பயத்). இனப்பெருக்கத்துக்குக் காரணமான ராசிபுருஷனின் 5-ஆம் வீடான சிம்மத்தை அவனது ஆட்சிக்கு உட்பட்டதாகச் சொல்கிறது ஜோதிடம்.

தன்னம்பிக்கை, துணிச்சல், வீரம், பெருந்தன்மை, அலட்சியம், பொறுமை, அபிமானம் ஆகியவை சிம்மத்துக்கு உண்டு; சூரியனுக்கும் உண்டு. பொருட்களின் தோற்றத்துக்கு அவனது வெப்பம் வேண்டும். எனவே, அவனை பித்ருகாரகன் என்றும் சொல்வர். அவனுடன் இணைந்த கிரகங்கள் அனைத்தும் வலுப்பெறும். ஆன்ம சம்பந்தம் இருப்பதால், திறமை வெளிப்படும். அவனது கிரணத்தில் மூழ்கி, உருத்தெரியாமல் மங்கி விடுவதும் உண்டு. சூரியனுடன் இணைந்த புதன், சிந்தனை வளத்தைப் பெருக்குவான். அதனை நிபுண யோகம் எனப் பெருமைபடத் தெரிவிக்கிறது ஜோதிடம். ஆனால், அவனுடன் முற்றிலும் ஒன்றினால் (அஸ்தமனம்) விபரீத பலனைத் தந்து, துயரத்தைச் சந்திக்க நேரிடும்.

குருவுடன் சேரும்போது, ஆன்மிக நெறியைத் தந்தருள்வான். செவ்வாயுடன் இணையும்போது உலகவியலில் திளைத்து, சிறப்பான செயலால் பேரும் புகழும் பெற்றுத் திகழலாம். சந்திரனுடன் இணைந்தால், மனத்தெளிவை ஏற்படுத்துவான். சுக்கிரனுடன் இணைந்தால் தாம்பத்தியத்தை இழக்க நேரிடும். சனியுடன் இணைந்தால், தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட்டு செல்வ வளம் பெற்றாலும், செல்லாக்காசாக மாற நேரிடும். ராகுவுடன் சேர்ந்தால், வீண்பழி, அவப்பெயர்தான் மிஞ்சும்.

பலவீனமான மேகம், சில தருணங்களில் சூரியனின் ஒளி பரவாமல் தடுப்பது உண்டு. அதேபோல் ஒளிப்பிழம்பான சூரியனை, இருள் கிரகம் மறைப்பதும் உண்டு. கேதுவுடன் சேர்ந்தால், வசதி இருந்தும் அனுபவ அறிவு இல்லாது போகும்! வசதி உலகவியலில் அடங்கும்; சுகம், மனம் சார்ந்த விஷயம் ஒன்றை அழித்து மற்றொன்றை அளிக்க வைப்பான். உச்சம், ஸ்வஷேத்திரம் போன்ற நிலைகளில் சூரியன் இருந்தால், செல்வாக்கு மிகுந்தவனாக மாற்றிவிடுவான். அவனது தனித்தன்மையை அழியாமல் காப்பாற்றுவான். நீசம், சத்ருக்ஷேத்திரம் ஆகிய நிலைகளில் இருந்தால், விழுந்து விழுந்து வேலை செய்தாலும், தகுதி இருந்தும் சிறக்க முடியாது போகும்! சமூகத்தில் அங்கீகாரம் இருக்காது. பலம் பொருந்திய குரு, புதன் ஆகியோருடன் இணைந்தால், சிந்தனை வளம் பெருகும்; தன்னம்பிக்கை பிறக்கும்; மக்கள் சேவையுடன் திகழலாம்; புகழுடன் வாழலாம்! ஆன்மகாரகனின் தொடர்பு, பலன்களைச் சுவைக்கத் துணை புரியும். சூரியனும் சந்திரனும் பலம் பெற்றிருந்தால், மற்ற கிரகங்களின் தாக்கத்தை அதனால் விளையும் சங்கடங்களை எளிதாகக் கடந்துவிடலாம். ஆன்ம பலத்தில் மனம் வலுப்பெற்றால், எல்லா இன்னல்களில் இருந்தும் விடுபடுவது எளிது.

மகான்கள் மனோபலம் மற்றும் ஆன்ம பலத்தால் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். அந்த மனோபலத்தை சூரியனிடமிருந்து பெற வேண்டும். சந்திரன், சூரியனிடமிருந்து பலம் பெறுகிறான். தேசத்தோடு இணைந்து பிறந்தவனின் வேளை (லக்னம்) சூரியனை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. வாரம், திதி நட்சத்திரம், கரணம், யோகம் ஆகிய ஐந்து கால அளவுகளுக்கு சூரியனின் பங்கும் உண்டு.

ஆன்ம சம்பந்தம் இல்லாத உடலுறுப்புகள் இயங்காது. நேரடியாகவோ பரம்பரையாகவோ ஆன்மகாரகனின் சம்பந்தமின்றி, கிரகங்கள் இயங்காது. சூரியன் தன்னிசையாக எதுவும் செய்வதில்லை. கர்மவினைக்குத் தக்கபடி மாற்றத்தை ஏற்படுத்துவான். பலவாறான கர்மவினைகள்; எனவே, மாறுபட்ட கிரகங்களின் துணை அவனுக்குத் தேவை, பூமியில் விளையும் பயிர்கள் பலவிதம்; அதற்கு விதையின் தரம் காரணம். கண்ணுக்கு இலக்காகாத கர்மவினையின் தரத்தை வெளிக்கொண்டு வருபவன், சூரியன்! ஞாயிற்றுக்கிழமை, சூரிய வழிபாட்டுக்கு உகந்த நாள். விண்வெளியில் சூரியனின் ஓடு பாதை, நடுநாயகமாக விளங்குகிறது. சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி- இப்படி முன்னும் பின்னுமாக இருக்கிற எல்லா கிரகங்களையும் தனது கிரணத்தால் செயல்பட வைத்து உலக இயக்கத்தைச் செம்மைப்படுத்துகிறான், சூரியன்.

ஸூம் ஸூர்யாயநம: என்று சொல்லி 16 உபசாரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். சூரியன் உதிப்பதற்கு முன்பே அவனை வணங்குவது சிறப்பு. சூரிய நமஸ்காரம் 12 முறை செய்ய வேண்டும்.

மித்ர -ரவி- ஸூர்ய -பானு -கக- பூஷ- ஹிரண்யகர்ப - மரீசி - ஆதித்ய -ஸவித்ரு - அர்க்க - பாஸ்கரேப்யோ நம: என்று சொல்லி வணங்கலாம். மித்ராயநம: ரவயநம: ஸூர்யாயநம: பானவேநம: ககாயநம: பூஷ்ணெநம: ஹிரண்யகர்பாயநம: மரீசயேநம: ஆதித்யாயநம: ஸவித்ரேநம: அர்க்காயநம: பாஸ்கராயநம: என்று சொல்லிப் புஷ்பத்தைக் கைகளால் அள்ளி, அவனது திருவுருவத்துக்கு அளிக்க வேண்டும். மேலும், பானோ பாஸ்கர மார்த்தாண்ட சண்ரச்மேதிவாகர... என்ற செய்யுளைச் சொல்லி வழிபட்டால், நினைத்து நிறைவேறும்.

ரத சப்தமியும் பீஷ்மாஷ்டமியும்!

கவுர சபையில் பாஞ்சாலிக்கு அநீதி இழைக்கப்பட்டபோது, அதை தட்டிக்கேட்காமல் இருந்ததனால் ஏற்பட்ட வினை, யுத்தக்களத்தில் அம்புப்படுக்கையில் கிடந்த பீஷ்மரின் மனதை வாட்டி வதைத்தது. வியாச முனிவர் வந்து எருக்கன் இலைகளின் மகிமையை பீஷ்மருக்கு எடுத்துரைத்து, அவற்றால் பீஷ்மரின் மேனியை அலங்கரிக்க, கொஞ்சம்கொஞ்சமாக மன அமைதியடைந்தார். பீஷ்மர். அப்படியே தியானத்தில் ஆழ்ந்தவர், அந்த நிலையிலேயே முக்தியும் அடைந்தார். "அவருக்கு யார் பித்ருக் கடன் செய்வது? என்று தர்மர் வருந்தினார். அதையறிந்த வியாசர், ""தர்மரே! வருந்தவேண்டாம் ஒழுக்கம் தவறாத நேர்மையான பிரம்மச்சாரிக்கும் தூய்மையான துறவிக்கும் பித்ருக் கடன் அவசியமே இல்லை. மட்டுமின்றி, வருங்காலத்தில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்க்கடன் அளிக்கும். ரத சப்தமி அன்று தங்கள் உடலில் எருக்கன் இலைகளை வைத்துக்கொண்டு குளிக்கும் மக்கள், தங்களுடைய பாவங்களிலிருந்து விடுபடுவார்கள். பீஷ்மருக்கு நீர்க்கடன் அளித்த புண்ணியமும் அவர்களுக்குக் கிடைக்கும் என்றார். எனவே, ரத சப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொல்லியபடி நீராடினால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும். மேலும் ரதசப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். அன்று புனிதநீர் நிலைகளுக்குச் சென்று, பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.

Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar