மலைவாழ் மக்களிடையே நிலவளப் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வந்த திருவிழாவே இன்று ஹோலியாக உருப்பெற்றிருக்கிறது என்பர். ஹோலி என்னும் வார்த்தை, ஹோலகா என்ற சொல்லின் திரிபே என்று கூறுவர். ஹோலகா என்பது முற்றிய நிலையில் உள்ள மொச்சைக் கதிர்களைக் குறிக்குமாம். முன் காலத்தில் இந்நாளில் கோதுமை, பார்லி முதலியவற்றால் வேள்வி செய்வர். வேள்வியின் நிறைவில் யாகத்தின் சாம்பலை நெற்றியில் பூசிக்கொள்வதோடு அனைத்து திசைகளிலும் தூவுவர். இதுவே வண்ணங்களைத் தூவும் வழக்கத்தின் காரணமாக இருக்கலாம். ஹோலியை ஹுதாஷிணி என்றும் கூறுவர். ஹுதாஷிணி இருளையும் தீமையையும் எதிர்த்துப் போராடுபவள் என்று பொருள்.வேடிக்கை விநோதங்கள் நிறைந்த வடநாட்டுப்பண்டிகை ஹோலி. கிருஷ்ணனைக் கொல்ல வந்த பூதனை என்னும் அரக்கியைக் கொன்ற நாளாக இந்நாளை மக்கள் கொண்டாடுகின்றனர். கேலியும் கூத்தும் மட்டுமே பிரதிபலிக்கும் விதத்தில் ஹோலி என்றாலே ஜாலி என்று மாறிவிட்டது. ஆனால், ஆன்மிக அடிப்படையிலேயே விழாக்கள் ஏற்படுத்தப்பட்டன. சாயத்தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பது, கலர்ப்பொடி தூவுவது ஆகியவை, உறவுகள் பலப்படவேண்டும், பகையை மறந்து ஒன்றுசேரவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விஷயங்களாகும். சிவபெருமான் மன்மதனை எரித்த காமதகனவிழாவாக தென்னிந்தியாவிலும், பூதனை என்னும் அரக்கியை பாலகிருஷ்ணர் கொன்ற நாளாக வடநாட்டிலும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. நம் மனதில் இருக்கும் வேண்டாத தீய எண்ணங்களை அழிப்பதற்காக மன்மதன், பூதனை போன்ற உருவபொம்மைகளை தீயிலிடுவர்.
தாயின் வயிற்றில் இருக்கும்போதே நாராயண நாமத்தைக் கேட்டு பக்தியில் திளைத்தவன் பிரகலாதன். உண்ணும்போதும் உறங்கும்போதும் ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தை அவன் மறந்ததில்லை. பிள்ளையின் விஷ்ணு பக்தி தந்தை இரண்யனுக்கு பிடிக்கவில்லை. அவனை அடித்துப் பார்த்தான். அடங்கவில்லை. மலையில் உருட்டி விட்டான். உயிர் போகவில்லை. நஞ்சைக் கொடுத்துப் பார்த்தான். அஞ்சவில்லை. அசுரகுரு சுக்ராச்சாரியாரிடம் படிக்க அனுப்பினான். மனதில் பக்தி வளர்ந்ததே ஒழிய பாடத்தில் ஈடுபாடில்லை. இறுதியில், தன் தங்கை ஹோலிகாவை அழைத்தான். அவளுக்கு விசேஷ சக்தியுண்டு. நெருப்பு அவளைத் தீண்டாது. பிரகலாதனை மடியில் வைத்துக் கொண்டு தீக்குள் புகுமாறு தங்கையிடம் கட்டளையிட்டான். ஆனால், வழக்கத்துக்கு மாறாக ஹோலிகாவின் உடலில் தீ பற்றிக் கொண்டது. பிரகலாதனோ, சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். இறைசக்தியின் முன் தீயசக்திகள் அழிந்து போகும் என்ற உண்மையை இறைவன் உணர்த்தினார். இந்நாளே ஹோலிபண்டிகையாகக் கொண்டாடப்படுவதாக ஒரு கதை உண்டு. இந்நாளில் ஒம் நமோநாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஜெபித்தும், பிரகலாதனைப் போற்றியும் வழிபடுவது சிறப்பாகும். வடமாநிலங்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. அநியாயம் அழிந்தநாள் என்பதால், மக்கள் வண்ண பொடிகளை தூவி மகிழ்கின்றனர்.
|
|
|