வசந்த பஞ்சமி: இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகின்றது.
ஆதியில், பிரம்ம தேவர் அனைத்து உலகங்களையும், உயிரினங்களையும் படைத்த பின்னரும், அவருக்கு ஏதோ குறை இருப்பது போலவே தோன்றியது. அனைத்துப் படைப்புகளும் அமைதியாக, மௌனமாக இருந்தன. இது குறித்து சிந்தித்தவாறே பிரம்ம தேவர் தம் கமண்டலத்தை எடுத்தார். அப்போது அதிலிருந்து சில துளிகள் கீழே சிந்தின. அவை ஒருங்கிணைந்து, ஒரு பெரும் சக்தியாக, மிகுந்த பிரகாசத்துடன் உருவெடுத்தன. ஒரு அழகிய பெண், நான்கு திருக்கரங்களுடன் கூடிய உருவில் பிரம்ம தேவர் முன் தோன்றினாள்.. சுவடிகள், ஸ்படிக மாலை, வீணை முதலியவற்றைத் தாங்கியவளாகத் தோன்றிய அந்த மஹாசக்தி, தன் வீணையை மீட்டி, தேவகானம் இசைக்கத் தொடங்கினாள். ஞான ஒளிப் பிழம்பான அம்பிகை, கானம் இசைக்கத் தொடங்கியவுடன், பிரம்ம தேவரின் படைப்புகள், ஒசை நயம் பெற்றன.. ஆறுகள் சலசலக்கும் ஒலியுடன் ஓடத் துவங்கின. கடல் பெருமுழக்கத்தோடு அலைகளைப் பிரசவித்தது.. காற்று பெருத்த ஓசையுடனும், முணுமுணுக்கும் ஒலியுடனும் வீசியது.
மனிதர்கள் மொழியறிவு பெற்றனர். பிரம்மதேவர் மகிழ்ந்தார்.வாக்வாதினி, வாகீசுவரி, பகவதி என்றெல்லாம் அம்பிகையைப் போற்றித் துதித்தார். இவ்வாறு சரஸ்வதி அவதரித்த தினமே வசந்த பஞ்சமி நாள் என கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி தேவிக்கு வசந்த பஞ்சமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால், ஞானம் மற்றும் அறிவு சார் கலைகளில் முன்னேற்றம் கிடைப்பதுடன், உயர்நிலைகளை அடைதலும் கிட்டும் என்பது நம்பிக்கை. வட மாநிலங்களில் குறிப்பாக, மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம், ஒரிசா, அசாம் போன்ற இடங்களில் வசந்த பஞ்சமி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
மாசி மாதம் சுக்ல பட்சபஞ்சமி நாள்தான் வசந்த பஞ்சமி நாளாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் நவராத்திாியின்போதுதான் மகாநவமி நாளன்று நாம் சரஸ்வதி பூஜையைக் கொண்டாடுகிறோம். ஆனால் வடமாநிலங்களில் வசந்த பஞ்சமி நாளன்றுதான் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி தேவியின் அவதார நாளாக இது கருதப்படுவதால் பிரம்மா, சரஸ்வதி தேவியின் கையில் வீணையைக் கொடுத்து அதன்மூலம் உலக மக்களுக்குப் பேசும் சக்தியை அளித்ததாகப் புராணம் தொிவிக்கிறது.
பஞ்சாப், காஷ்மீா், அசாம் மாநிலங்களில் வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் ஆடை, மஞ்சள் மலா் மாலைகள் அணிவிக்கப்படுகின்றன. மஞ்சள் ஆடை அணிந்துதான் மக்களும் பூஜை செய்கின்றனா். மஞ்சள் பிள்ளையாா் வைத்து வழிபட்டுப் பின்னா் தேவிக்கு மஞ்சள் நிறத்திலேயே இனிப்பு வகைகள் தயாாிக்கப்பட்டு நிவேதனம் செய்யப்படுகின்றன.
மஞ்சள் நிற சேலைகள், மஞ்சள் நிற துப்பட்டாக்கள், ஜாிகை மற்றும் கோட்டா அலங்கார ஆடைகளைப் பெண்கள் அணிவாா்கள். எங்கு பாா்த்தாலும் மங்களகரமாக மஞ்சள் வண்ணம் தான் கொலுவீற்றிருக்கும்.
மேற்குவங்கம், மாயாப்பூாில் உள்ள ராதா மாதா மந்திாில் வசந்த பஞ்சமி நாளான்று ஸ்ரீகிருஷ்ணா் மற்றும் அவரது எட்டு பட்ட மகிஷிகள் விக்கிரகங்களுக்கு மஞ்சள்பொடி பூசப்பட்ட, மஞ்சள் பட்டாடைகள், மஞ்சள்மலா் மாலைகள் அணிவிக்கப்படுகின்றன. கருவறை மண்டபங்கள் அனைத்துமே மஞ்சள் நிறமலா்களால் அலங்காிக்கப்படுகின்றன. இந்தக் காட்சியைக் காண்பதற்கென்றே ஆயிரக்கணக்கான கிருஷ்ண பக்தா்கள் இந்த நாளில் இஸ்கான் இயக்கத்தினா் நடத்தும் இவ்விழாவில் கலந்து கொள்கிறாா்கள்.
ராஜஸ்தான் மாநிலம் புஷ்காில் உள்ள பிரம்மா, சரஸ்வதி கோயில், கா்நாடகத்தில் உள்ள உடுப்பி ஸ்ரீகிருஷ்ணா் ஆலயம் மற்றும் ஒடிசா பூாி ஜெகநாதா் ஆலயம் ஆகியவற்றில் வசந்தபஞ்சமி விழா வெகு சிறப்பாகக் கடைபிடிக்கப்படுகிறது.
மேற்குவங்க மாநிலத்தில் இந்த வசந்த பஞ்சமி நாளில்தான் வித்யாரம்பம் என்கிறாா்கள். இந்நாளில் கல்வியை துவக்கவுள்ள குழந்தைகள் முன்பாக பென்சில், பேனா, சிறிய தொழிற் கருவிகள் போன்றவற்றை வைத்து அவற்றில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்வா். குழந்தை எடுக்கும் பொருளில் அடிப்படையில் அதன் ஆா்வமும், எதிா்காலமும் அமையும் என்பது நம்பிக்கை. உதாரணமாகப் பேனாவை எடுத்தால், பொிய கல்விமானாக ஆவான் என்றும், சங்கீத உபகரணங்களை எடுத்தால், சங்கீத மேதையாவான் என்றும், தொழிற்முனைவாக ஆவான் என்றும் நம்பப்படுகிறது.
வசந்த பஞ்சமி வட மாநிலங்களில் ஒரு சமுதாய விழாவாகவே மாறிவிடுகிறது என்று சொல்லலாம். ஹோலிப் பண்டிகையை வரவேற்க கட்டியம் கூறும் விழாவாக இந்த வசந்த பஞ்சமி விளங்குகிறது. இந்நாளில் சில பகுதிகளில் வண்ண வண்ண பட்டங்களைப் பறக்கவிடுவதும் விழாவின் ஓா் அம்சம்.