ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தன்று பூணூல் அணியும் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவர் பிராமணர்கள். பொற்கொல்லர்கள், தேசிகர்கள் ஆகியோர் பூணூல் அணிபவர்கள். இவர்கள் அன்று குருமுகமாக பூஜை செய்த பின் பழைய பூணூலை அகற்றி விட்டு புதுப்பூணூல் அணிந்துகொள்வார்கள். இதை வீட்டில் செய்ய இயாலதவர்கள் குழுக்களாக ஒன்றுகூடி கோயிலுக்குச் சென்று அணிந்துகொள்வார்கள். உபநயனம் என்ற பூணூல் கல்யாணத்தை, பூணூல் அணிபவர்கள் தங்கள் வீட்டு ஆண் குழந்தைகளுக்கு மூன்று முதல் ஏழுவயதிற்குள் நடத்துவார்கள். இதையொரு கல்யாண வைபம் போலவே சீரும் சிறப்பாகச் செய்வார்கள். அப்போது குழந்தையை தந்தைமீது அமரவைத்து பிரம்மோபதேசம் செய்வார்கள். அதன்பின் புதிய பூணூலை முதன் முறையாக அக்குழந்தைக்கு அணிவிப்பார்கள். தந்தை தான் குழந்தையின் முதல் குரு. அரனுக்கும் அவள் தேவிக்கும்தான் முக்கண்கள் உண்டு. மனிதர்களுக்கும் மூன்றாவது கண் உண்டு இயற்கையாக இருக்கும் இரு புறக்கண்களுடன் மூன்றாவதாக உள்ள கண்தான் அகக்கண். அந்த அறிவுக்கண்ணைத் திறந்து வைப்பதற்கான நிகழ்ச்சிதான் உபநயனம் உப கூடுதல் நயனம் - கண் இரு கண்களுடன் கூடுதலான அறிவுக் கண் திறப்பு விழாதான் பூணூல் கல்யாணம் என்ற உபநயனம்.
முப்புரிநூல் (யக்ஞோப வீதம்) மிகவும் புனிதமானது. கடவுளைத் துதித்தல், அறிவுத்திறனை தேடுதல் உடல்நலம் பேணுதல் ஆகிய மூன்றையும் ஒழுங்காகச் செய் இதற்குத் துணை குரு கற்பது, கேட்பது, குரு உபதேசம் என மூவகையில் அறிவை வளர்த்துக்கொள்; உரிய பயிற்சி, உரிய உணவு, உரிய ஓய்வு என மூவகையாக உடலைப் பேணு என்பதை உணர்த்துவதுதான் முப்புரிநூல். குடும்பஸ்தனானதும் மேலும் மூன்று கடமைகள் சேரும். குழந்தை பிறந்ததும் அதற்கு மேலும் மூன்று கடமைகள் சேரும். அறிவைத் தேடும் சமயத்தில் நாவுக்கு அடிமையாகி உணவைத் தேடி ஓடாதே என்பதையும் கிடைப்பதையே புசி என்பதையும் உணர்த்த பவதி பிட்சாத் தேஹி என பிட்சை எடுக்கும் சடங்கையும் உபநயனத்தில் நடத்துவார்கள். முதல் பிட்சை இடுபவர் தாய். தெய்வ அருளால் உனக்குக் கிடைத்த இந்த உணவை பிரசாதமாக நினைத்து உண் என்பதுதான் இதன் அர்த்தம்.
உரிமையுடன் உணவு கேட்பது பிட்சை; உழைக்காமல் உணவு தேடி அலைவது பிச்சை. அறிவைத் தேடி புறப்படும் குழந்தைக்கு தந்தையின் உபதேசமும் தாயின் ஆசியும் கிடைக்கச்செய்யும் நிகழ்ச்சிதான் உபநயன விழா. வசதியில்லாதோர் தங்கள் உறவினர் இல்லத் திருமண விழாவில் மணமக்கள் அமர்ந்த மேடையில் தங்கள் குழந்தையை வைத்து குருமுகமாக உபநயம் செய்து கொள்வார்கள். காயத்ரி மந்திரத்தில் 24 எழுத்துக்கள் உண்டு. 11 சொற்கள் கொண்டது இம்மந்திரம். இதைவிட சிறந்த மந்திரம் வேறில்லை என்பர். மனித இனத்திற்கு கடவுள் வழங்கிய கொடை இந்த மந்திரம். விஸ்வாமித்திரரின் தவத்திற்கு மகிழ்ந்த காயத்ரி இந்த காயத்ரி மந்திரத்தை அவருக்கு உபதேசித்தாள். அவர் உலக நன்மைக்காக அந்த மந்திரத்தை நமக்களித்தார். இதை ஜெபித்தே ராமன் இராவணனை வதம் செய்தார். காயத்ரி மந்திரத்திலுள்ள 24 எழுத்துக்களில் ஓர் எழுத்துக்கு 1,000 ஸ்லோகம் என, 24 எழுத்துக்களுக்கும் 24 ஆயிரம் ஸ்லோகங்களால், காயத்ரி மந்திரப் பொருளாகவே வால்மீகி முனிவர் இராமாயணத்தை இயற்றினார் என்பர். விஷ்ணு பகவான் உலகை சிருஷ்டிக்க திருவுளம் கொண்டபோது அவர் முகத்திலிருந்து காயத்ரி மந்திரம் தோன்றியது.
ஞானம் பெற விரும்பிய முனிவர்கள் வேதக்கடலைக் கடைந்தபோது த்ரயி என்ற வேதாசாரம் கிடைத்தது. அதை காணமதி என்ற மத்தினால் கடைந்தவுடன் காயத்ரி தேவியின் வடிவம் தோன்றியது வேதங்களின் தாய் காயத்ரி. இத்தனை சிறப்புமிக்க காயத்ரிதேவிக்கு ஐந்து முகங்களும் பத்து கரங்களும் உண்டு. சரஸ்வதி, பார்வதி, மகேஸ்வரி, லட்சுமி, மனோன்மணியாகிய இந்த முகங்கள் பவள நிறம், பொன்னிறம், ஆகாய நீலம், தூய வெண்ணிறம், முத்து போன்ற நிறங்களை உடையவை. இவை சிவனைப்போல ஐந்தொழில்களைப் புரிகின்றன. காயத்ரிதேவி காலையில் குழந்தையாகவும், மதியம் நடுத்தர வயதினளாகவும், மாலையில் முதிய தோற்றத்துடன் காட்சிதருகிறாள். காலை பிரம்ம சொரூபிணியாகவும் நடுப்பகல் ருத்ர சொரூபிணியாகவும், மாலையில் விஷ்ணு சொரூபிணியாகவும் அருள்புரிகிறாள். காயத்ரி தேவியின் வாகனம் அன்னம்.
காயத்ரி மந்திரம் 24 எழுத்துக்கள், 11 சொற்கள் கொண்டது.
ஓம், பூர், புவஸ்ஸுவ தத், ஸவிதுர், வரேண்யம், பர்கோ, தேவஸ்ய தீமஹி தியோ, யோநஹ், ப்ரசோதயாத்.
எல்லா பாவங்களையும் அறியாமையையும் போக்குபவரும், வணங்குவதற்குரியவரும், இவ்வுலகத்தைப் படைத்தவருமான கடவுளையும் அவரது புகழையும் தியானிப் போமாக. அவர் தம் புத்தியை வழிநடத்து வாராக என்பதுதான் இதன் பொருள். உபநயனம் முடிந்தபின் முப்புரி நூலாகிய யக்ஞோபவீதத்தை அணிந்து கொண்ட பிள்ளைகள் தினமும் மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் அப்போது இந்த காயத்தரி மந்திர ஜெபம் செய்ய வேண்டும். இதை எல்லாரும் சுலபமாகச் செய்யலாம். இதற்கு தண்ணீர் தவிர வேறு திரவியம் தேவையில்லை. ஆயுட்காலம் உள்ளவரையும் உடலில் தெம்பு உள்ளவரையும் தினம் தவறாமல் கண்டிப்பாக செய்ய வேண்டும். தினமும் காலையில் கிழக்குமுகமாக நின்றபடி, இருகைகளையும் துணியால் மூடி, முகத்திற்கு நேராக கைகளை வைத்தபடி ஜெபிக்க வேண்டும். மதியம் கிழக்குமுகமாக அமர்ந்தும் மாலையில் மேற்குமுகமாக அமர்ந்தும் சூரியனைப் பார்த்தபடி ஜெபிக்க வேண்டும் 21 முறை, 108 முறை, 1008 முறை என்ற எண்ணிக்கையில் ஜெபிப்பதும் நலம்.
11 சொற்களை, கையில் 11 இடங்களைத் தொட்டுத் தொட்டு இந்த ஜெபத்தைச் செய்ய வேண்டும். முதலில் சுண்டுவிரல் அடியிலிருந்து மூன்று கணுக்களைத் தொட்டும், மோதிவிரல் நுனி, நடுவிரல் நுனி, ஆள்காட்டி விரல் நுனி, கட்டைவிரலில் இரு கணு, ஆள்காட்டி விரல் கீழ்க் கணு, நடுவிரல் கீழ்க் கணு, மோதிர விரல் கீழ்க் கணு என மொத்தம் 11 இடங்களில் தொட்டு ஜெபிக்க வேண்டும். உச்சரித்தல் பயன்: வாய் திறந்து ஜெபித்தால் 10 பங்கு பலன்; வாயசைத்து ஜெபித்தால் 100 பங்கு பலன் மவுனமாக ஜெபித்தால் 1,000 பங்கு பலன் பெறலாம். அஷ்டமாசித்தியும் அஷ்ட ஐஸ்வர்யமும் பெற முடியும். ஆரோக்கியம் அறிவு, பிரம்மதேஜஸ், அழகு கிடைக்கும். மூடனும் ஞானியாவான் தரித்திரனும் செல்வனாவான். மங்களம் உண்டாகும். விரும்பிய லோகம் செல்லலாம். பூவுலகில் வாழும்வரை இகபர சுகம் அனுபவிக்கலாம். நல்ல ஒழுக்க நெறியுடன், உள்ளத்தூய்மையுடன் ஜெபித்தால் மட்டுமே மேற்கண்ட பலன்களைப் பெறலாம்.
|
|
|