Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>வரவிருக்கும் பண்டிகை> மகாளயபட்சம் ஆரம்பம்
மகாளயபட்சம் ஆரம்பம்
மகாளயபட்சம் ஆரம்பம்

பித்ருக்களின் ஆசி கிடைக்கும் மகாளய பட்சம்: தட்சிணாயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசையும், உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் தை அமாவாசையும் முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இதனிடையே புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய பட்சம் புரட்டாசி அமாவாசையன்று முடிவடையும். அதற்கு முந்திய பதினைந்து நாட்களும் மகாளய பட்ச காலமாகும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச்சிறந்ததாகும்.

மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த காலகட்டத்தில் வரும் பரணி, மஹாபரணி என்றும், அஷ்டமி, மத்பாஷ்டமி என்றும் திரயோதசி கஜச்சாயை என்றும் கூறப்படும். மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம் செய்ய முடியாதவர்கள் இந்தக் காலத்தில் தனங்களைச் செய்வதால் பன்னிரண்டு மாதங்களிலும் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

புராணங்களில் மகாளயபட்சம்: கருடபுராணம், விஷ்ணு புராணம், வராகபுராணம் போன்ற தெய்வீக நூல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. நாம் கலியுகத்தில் வாழ்வதால், அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசிவழங்குவதற் காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

இந்த பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம் கொடுக்கலாம். ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோரின் பெயர்களை உச்சரித்து, "காசி காசி என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு கூட திதி பூஜையைச் செய்யலாம். பின்னர், பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.

அன்னதானம் செய்த கர்ணன்: பிணிகளில் கொடுமையானது பசிப்பிணி. பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பார்கள். பசியின் கொடுமை பல தானங்களை செய்த கர்ணனையே வாட்டியது. அதற்கு காரணம் கர்ணன் அன்னதானம் செய்யாதுதான் என்று கூறப்பட்டது. அது பற்றிய சுவையான கதை. கர்ணன் தர்மங்கள் பல செய்த மாபெரும் வள்ளல் என்றாலும் கூட, அதர்மத்துக்கு துணை போன துரியோதனனுடன் சேர்ந்திருந்ததால், அவனை அழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் கிருஷ்ண பரமாத்மா. குருசேத்திர யுத்தத்தின் முடிவில், கர்ணன் இறக்க வேண்டும் என்பது விதி. இதற்காகவே அர்ஜுனனை தயார் செய்து கர்ணன் மீது அம்பு எய்ய சொன்னார் கிருஷ்ணன். ஆனால் அர்ஜூனன் விட்ட சில அம்புகளால் அவனைக் காயப்படுத்தினவே ஒழிய உயிரைப் பறிக்கவில்லை. அதற்குக் காரணம் கர்ணன் செய்த தர்மம்தான்.

தானம் பெற்ற கிருஷ்ணன்: அப்போது, அந்தணராக வேடமணிந்துவந்த கிருஷ்ணன் கர்ணன் செய்த தர்மங்களை அவனிடம் இருந்து தானமாக பெற்றார். அதற்காக, அவனுக்கு மோட்சம் அளித்தார். சொர்க்கம் சென்ற கர்ணனுக்கு, அவன் செய்த பொன், நவரத்தின தானத்துக்கு பலனாக தங்கமாளிகை கட்டித் தரப்பட்டிருந்தது. பலவிதமான வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன; ஆனால், அவனுக்கு அங்கே உணவு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தெரியாமல் அவன் தவித்தபோது, தேவர்கள் அவனிடம், “கர்ணா… நீ பூமியில் இருந்தபோது பொன்னும், மணியுமே தானம் செய்தாய்; அன்னதானம் செய்யவில்லை. எனவே, நீ இப்போது பூமிக்குச் செல். இப்போது மகாளயபட்ச காலம். பிதுர்கள் பூமிக்குச் செல்லும் காலம். அவர்களை அவரவர் உறவினர் வரவேற்று, தர்ப்பணம் செய்து, ஏழைகளுக்கு அன்னதானமும் செய்வர். இக்காலத்தில், நீ மறைந்திருந்து அன்னதானம் செய்து வா. பின்பு இங்கு உணவும் கிடைக்கும்!’ என்றனர். இதனையேற்று கர்ணன் பூமிக்கு வந்த காலமே மகாளய காலம் ஆனது.

உலகுக்கே சூரியன் சொந்தம் என்பதால், அவரது புத்திரனான கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான். அவன் பூமியில் வந்து தர்மம் செய்யும் மகாளயபட்ச காலத்தில், நாம் எல்லாருமே முன்னோர்களை வரவேற்று 14 நாட்களும் தர்ப்பணம் முதலானவை செய்ய வேண்டும். கடைசி நாளான மகாளய அமாவாசையன்று முன்னோருக்கு பெரும் படையல் படைத்து, அதை ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். மகாளயபட்ச காலத்தில், நம் முன்னோருக்காக விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், முன்னோரின் ஆசி நமக்கு கிடைக்கும். நமக்கு மட்டுமின்றி, உலகிலுள்ள பிறருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்பது ஐதீகம்..

மாதா மாதம் அமாவாசை வருகிறது. ஆனால் மகாளய அமாவாசை என்பது மிகவும் விசேடமானது. மகாளய அமாவாசைக்கு முன்னர் மகாளயபட்சம் என்ற ஒன்று ஆரம்பமாகும். எப்படி கிருஷ்ண பட்சம், சுக்கில பட்சம் என்ற இரண்டு உள்ளது. சுக்கில பட்சம் என்றால் வளர் பிறை, கிருஷ்ண பட்சம் என்றால் தேய்பிறை. அதுபோல் மகாளய பட்சம். இது எப்போது ஆரம்பம் ஆகுமென்றால், ஆவணி மாதத்தில் பெளர்ணமி முடிந்த மறுநாள் மகாளய பட்சம் ஆரம்பமாகும். இதில் தொடங்கி, புரட்டாசி மாதத்தில் அமாவாசை வருகிறது அல்லவா, அதுவரை - அதாவது பெளர்ணமியில் இருந்த அமாவாசை வரையிலான இரு வார காலம் இந்த மகளாய பட்சம் ஆகும்.

தர்ம சாஸ்திரங்களுள் மகாளய பட்ச நாட்கள் மிகவும் முக்கியமான நாட்களாகச் சொல்லப்பட்டிருப்பதால், இந்த நாட்களில் பிதுர்பூஜை, செய்வது போற்றப்படுகிறது. நம் முன்னோர்கள், நம்மில் வாழ்ந்து அமரர் ஆனவர்களுக்கு யாரும் தர்ப்பணம் செய்யலாம். உறவினர்களுக்கு மட்டுமல்ல; மறைந்த நண்பர்களுக்கும் மிக நெருங்கியவர்களுக்கும் தர்ப்பணம் கொடுக்கலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் தேய்பிறை பதினைந்து திதிகளிலும் மகாளய புண்ணிய காலம் என்பதால் பித்ருக்களை நினைவு கூர்ந்து தர்ப்பணம் செய்தால் அவர்கள் நம்மையும் நம் குடும்பத்தினரையும் வாழ்த்துவார்கள். மகாளய பட்ச நாட்களில் நம் முன்னோர்கள் அவரவர் உறவினர்களைத் தேடி பூலோகத்திற்கு வருவதாக ஐதீகம். இதில் வடநாட்டிலுள்ள விஷ்ணுபாதம் என்னும் இடம் மிகவும் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அதற்குக் காரணமாக புராணத்தில் ஒரு நிகழ்வுக்குறிப்பு உண்டு.

கயாசுரன் என்ற அசுரன் மகாவிஷ்ணுவை நினைத்து தவம் செய்தான் யார் ஒருவர் என்னை எந்த நிலையில் தரிசித்தாலும். அவர்கள் எந்தவிதத் தடையுமின்றி வைகுண்டம் போய்விட வேண்டும் என்று மகாவிஷ்ணு விடம் வரம் பெற்றான். இந்த வரத்தினைப் பெற்ற கயாசுரன் அக்கிரமங்கள் பல புரிந்தான். முனிவர்களும் தேவர்களும், அவனைச் சந்திக்கவே பயந்தார்கள். கொடூர குணம் கொண்ட அவனை அழிக்கவேண்டுமென்று மகாவிஷ்ணுவிடம் முனிவர்களும் ரிஷிகளும் முறையிட்டனர். உடனே மகாவிஷ்ணு பிரம்மனிடம் நீ கயாசுரனிடம் சென்று, யாகம் செய்ய புனிதமான இடம் தேவைப்படுகிறது; உன் உடல்தான் மிகவும் புனிதமானது என்று தேவர்கள் அனைவரும் நினைப்பதால் அதைத் தரவேண்டும் என்று கேள் என்றார். பிரம்மனும் கயாசுரனிடம் சென்று யாகம் செய்ய அவன் உடலைக் கொடுக்கும்படி கேட்டார். பிரம்மனே தம்மிடம் யாகம் செய்ய தன் உடலைக் கேட்கும்போது கொடுக்காமல் இருக்க முடியுமா என்று கயாசுரன் சம்மதித்தான் அவன் உடல் பூமியில் வட்டக்கல்லாக மாறியது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தேவர்கள் அவனது மார்பின்மீது ஏறி நின்று அவனைக் காலால் அழுத்தினார்கள். பெரும் பாறைகளைக் கொண்டும், மிகப்பெரிய யானைகளை அவன் மீது ஏறி நிற்கவைத்தும் அவன் மாண்டு போகாததால், தேவர்கள் மகாவிஷ்ணுவை வேண்ட அவர் அங்கு தோன்றினார். பூமியில் வட்டக்கல்லாக மாறிப் படுத்திருந்த கயாசுரன்மீது தன் காலை வைத்து அழுத்தினார்.

மூச்சுத்திணறிய கயாசுரன், பகவானே, என்னை மன்னித்துவிடுங்கள். நான் செய்த அக்கிரமத்திற்கு நீங்கள் எந்த தண்டனை கொடுத்தாலும் மகிழ்ச்சி. உங்கள் பாதம் பட்டதால் நான் புனிதமானேன் என்றான். உடனே மகாவிஷ்ணு, உன் இறுதிகாலம் நெருங்கிவிட்டது. நீ மடிவதற்குள் என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார் அதற்கு கயாசுரன், யாகம் செய்வதற்காக என் உடலை வட்டக்கல்லாக மாற்றிப் படுத்திருந்தேன் ஆகையால் நான் உயிரை விடும் இந்த இடம் பெரும் பாறையாக மாறவேண்டும். அந்தப் பாறையில் தங்கள் பாதச்சுவடு பதிந்திருக்க வேண்டும். மேலும் இந்தப் பாறையருகில் பித்ருக்களுக்கு யார் பிண்டம் வைத்துப் பூஜிக்கிறார்களோ, அவர்கள் செய்த பாவங்கள் நீங்க வேண்டும் என்று வேண்டினான் மகாவிஷ்ணுவும் அவன் வேண்டுதல்படி அருள்புரிந்தார். அன்றிலிருந்து இன்றுவரை அந்த இடத்தில் பித்ரு பூஜைகளும் பிண்டம் வைப்பதும் தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றையும் மக்கள் வைதீக விற்பன்னர்கள் உதவியுடன் செய்து, பாவங்களைத் தொலைத்து முன்னோர்களிடம் ஆசிபெற்றுச் செல்கிறார்கள். அந்த இடம்தான் கயை என்னும் புனிதத்தலம் ஆகும். கயையில் இருக்கும் அந்தப் பாறையினை விஷ்ணுபாதம் எனப் போற்றுகிறார்கள். அங்குள்ள கோயில் விஷ்ணு மந்திர் என அழைக்கப்படுகிறது. கயையில் அருள் பாலிக்கும் திருமாலை சுதாதரன் என வழிபடுகிறார்கள்.

வடநாட்டில் உள்ள ஹரித்வார், ரிஷிகேஷம், வாரணாசி எனப்படும் காசி, அட்சய வடம் போன்ற புனிதத் தலங்கள் சிறப்பாகப் பேசப்பட்டாலும் கயா சிரார்த்தம் மட்டும் மிகவும் உயர்வாகச் சிறப்பிக்கப்படுகிறது. மகாளய பட்ச காலத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும்போது, கிருஷ்ணபட்ச பிரதமை முதல் அமாவாசை வரையுள்ள காலம் மகாளயம் ஆகும். அதாவது பித்ருபட்சம் ஆகும். அமாவாசைக்குப் பிறகு மேலும் ஐந்து நாட்கள் பஞ்சமி வரைகூட பித்ரு பூஜை செய்யலாம். இக்காலக்கட்டத்தில் எமன் எல்லா பித்ருக்களையும் தனது உலகத்திலிருந்து விடுவித்துவிடுவதால், அவர்கள் பூலோகத்தில் தங்கள் வாரிசுகள் தரப்போகும் பிண்டத்துக்காகக் காத்துக் கொண்டிருப்பதாக ஐதீகம் கயை போன்ற புனிதத் தலங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள புனித நீர் நிலைகளில் பித்ரு பூஜை செய்து பலன் பெறலாம். வடக்கே காசி, பத்ரிநாத், ஹரித்வார், பிரயாகை, பூரிசோம்நாத், அட்சயவடம்; கர்நாடகாவில் திருக்கோகர்ணம்; தமிழகத்தில் திருவெண்காடு, கும்பகோணம்; மகாமகக்குளம், ராமேஸ்வரம், திருப்புல்லாணி உள்ளிட்ட பல தலங்கள் பித்ரு தர்ப்பணத்துக்கு உகந்தவை.

காவேரிக் கரையோரம் ரங்கநாதர் அருள்புரியும் திருத்தலங்களும் சிறப்பானவை. அதில் தமிழ்நாட்டில் கயாவுக்கு சமமான புனித இடம் திருவாரூர் அருகிலுள்ள பூந்தோட்டம் என்னும் ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்திலுள்ள திலதர்ப்பணபுரி ஆகும். இங்கு மகாளய பட்ச பூஜை தர்ப்பணம் செய்தால் அவர்களின் பித்ருக்கள் நேரில் வந்து படையலைப் பெற்றுக் கொண்டு ஆசி வழங்குவதாக நம்பிக்கை. திவசமும் தர்ப்பணமும் செய்கிறபோது, பூலோகத்திலோ அல்லது வேறு எங்கோ எந்த உருவத்திலோ தங்கள் பாவ புண்ணியங்களுக்கேற்ப பிறந்திருக்கிற மூதாதையர்களுக்கு, இங்கே சிரார்த்தத்தில் கொடுக்கிற எள், தண்ணீர், பிண்டம், முதலானவற்றை பித்ரு தேவதைகள் அவர்கள் விரும்பும் உணவாக மாற்றி அங்கே கிடைக்கச் செய்வதாக சாஸ்திரம் சொல்லும். எனவே தீர்த்த சிரார்த்தமும், திவசமும், பித்ரு பூஜைகளும் நம்மையும் நம் வாரிசுகளையும் வளமுடன் வாழவைக்கும் என்பதில் ஐயமில்லை.

Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar