மயிலாடுதுறை; சீர்காழி சட்டை நாதர் கோவிலில் நடந்த சித்திரை பெருவிழா கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. தேவார பாடல் பெற்ற மலைக்கோவிலான இங்கு சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டை நாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளியுள்ளனர். மேலும் அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளதால் காசிக்கு இணையான பைரவ சேத்திரமாக போற்றப்படுகிறது. திருஞானசம்பந்தர் அவதார ஸ்தலம். இக்கோவிலில் சுவாமி, அம்பாள், சட்டை நாதர் மற்றும் பைரவர்களை வழிபடுவோர் பாவ சாப தோஷங்கள் நீங்கி, சிறந்த ஞானத்தையும், சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்புடைய கோவிலின் சித்திரை பெருவிழா இன்று பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கி 14 நாட்கள் நடைபெறுகிறது. சித்திரை பெருவிழா கொடியேற்றம் இன்று நடந்தது. கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று காலை மிருகசீரிஷம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய மிதுன லக்னத்தில் கோவில் கொடிமரம் முன்பு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள சிவாச்சாரியார்கள் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க தருமபுரம் ஆதீன கட்டளை சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் ரிஷப கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி செந்தில் தலைமையிலானோர் செய்திருந்தனர். சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக நாளை பகல் 12 மணிக்கு தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் புகழ்பெற்ற திருமுலைப்பால் விழா, 5ம் தேதி சகோபரம், 6ம் தேதி திருக்கல்யாணம் 8ம் தேதி திருத்தேர் உற்சவம், 13ம் தேதி தெப்போற்சவம் 23ம் தேதி முத்து சட்டை நாதர் உற்சவம் நடைபெறுகிறது.