சென்னை: சென்னை, புறநகரில் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் இன்று நடைபெற்றது.
மார்கழி மாத பவுர்ணமியன்று திருவாதிரை பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதுவே ஆருத்ரா தரிசனம் என அழைக்கப்படுகிறது. இன்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை கபாலீஸ்வரருக்கு பசும் நெய் சார்த்தப்பட்டு வழிபாடு நடைபெற்றது. அதேபோல, மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், திருவொற்றியூர் தியாகராஜர், பெசன்ட்நகர் ரத்னகிரீஸ்வரர் உள்ளிட்ட சிவா ஆலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியை முன்னிட்டு மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.