அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் அருகே முருங்கை கிராமத்தில் உள்ள வள்ளி – தெய்வானை சமேத பாலமுருகன் கோவிலில், வைகாசி கிருத்திகை விழா நேற்று விமரிசையாக நடந்தது.
அச்சிறுபாக்கம் முருங்கை பாலமுருகன் கோவிலில், வைகாசி கிருத்திகை பால் காவடிப் பெருவிழா நேற்று முன்தினம் பரணி விழா உடன் தொடங்கியது. நேற்று காலை 07:30 மணிக்கு மூலவர் அலங்காரம் மற்றும் மாலை 03:00 மணிக்கு காவடி பூஜை நடந்தது.
இதில் விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள் பால் காவடி, வேல் காவடி, மயில் காவடி, பால் குடங்கள், புஷ்பரதங்கள் மற்றும் அன்னக்காவடிகள் எடுத்து, மாட வீதிகளில் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.
பின், மும்மூர்த்திகளுக்கு மகா சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு, மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக் கப்பட்ட வாகனத்தில் வள்ளி , தெய்வானை சமேத பாலமுருகன் எழுந்தருளினர்.