ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் முன்பாக ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய தெப்பம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளது. ஹிந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. தற்போது கோயிலில் உபயதாரர்கள் மூலம் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் ரூபாய் பல லட்சம் செலவில் நடந்து வருகிறது. இக்கோயிலுக்கான தெப்பத்தைச் சுற்றி 3 பக்கமும் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் தெப்பம் அமைத்தாலும் தெப்பத்தில் இறங்குவதற்கு வழி இல்லை. தெப்பத்தில் நீர் தேக்குவதற்கும் வெளியேற்றுவதற்கும் திட்டமிடல் இல்லை. ஏற்கனவே இருந்த திட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக குவிந்திருந்த குப்பை, மரங்கள், செடி கொடிகள் தற்போது அகற்றும் பணி தொடங்கியுள்ளது. தெப்பத்தின் நீளம், அகலம், ஆழம் ஆகியவற்றை ஆகம விதிப்படி கணக்கிட்டு அமைக்கவும், தெப்பத்தின் நான்கு புறமும் பக்தர்கள் எளிதாக சென்று வருவதற்கான பாதை அமைக்கவும் ஹிந்து அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.