பல்லடம்: பல்லடம் அருகே, மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்திய விவசாயிகள், ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுமாறு கோரிக்கை வைத்தனர்.
முன்னாள் விவசாய சங்க தலைவர் என்.எஸ். பழனிசாமியின், 10ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, புகழஞ்சலி கூட்டம், பல்லடத்தை அடுத்த, நாதகவுண்டம்பாளையம் கிராமத்தில் நேற்று நடந்தது. கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். செயல் தலைவர் வெற்றி, மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியின் மாநிலத் துணைத் தலைவர் சுரேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், பல்லடம், சூலூர், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் ராம்குமார், சுகுமார், நித்தியானந்தன் மற்றும் பா.ஜ., மாவட்ட தலைவர் சீனிவாசன், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சிவசாமி மற்றும் ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்று, என்.எஸ். பழனிச்சாமியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.
விவசாயிகள் கூறுகையில், தமிழக அரசு பொறுப்பேற்றதும், விவசாயிகளின் நீர்ப்பாசனத் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்துக்கான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்த்தோம். ஆனால், விவசாயம் குறித்த அந்த அறிவிப்பையும் முதல்வர் வெளியிட வராது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கடந்ந, 60 ஆண்டுக்கு முன் கேரள மாநிலத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல், கிடப்பில் போடப்பட்ட திட்டத்துக்காகதான் நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தைப் போன்றே, கோவை, திருப்பூர் மாவட்டத்துக்கு இத்திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, மக்கள் பிரதிநிதிகளாக வந்நுள்ள எம்.எல்.ஏ.,க்கள், ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக அரசிடம் வலியுறுத்தி, நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். முன்னதாக, தமிழகம் முழுவதும் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி திருமூர்த்தி மலையில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு, சிறப்பு யாக வழிபாடு நடந்தது.