பழநி: பழநி முருகன் கோயில் பக்தர்களுக்கான வசதிகள் செய்து தர பெருந்திட்ட வரைவு மூலம் கையகப்படுத்தப்பட்ட 58 ஏக்கர் நிலம் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் அங்குள்ள கடைகளை அப்புறப்படுத்தியதால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான தங்கும் கூடம், வாகன நிறுத்தும் இடம் அடிப்படை வசதிகளான கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட வசதிகளை விரிவு படுத்த 58 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி வருவாய்த்துறையினர் கையகப்படுத்தும் பணியை செய்தனர். இந்நிலையில் நேற்று (மே.19,) பழநி வருவாய்த்துறை சார்பில் நிலத்தை நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் பணி நடந்தது. கோயில் நிர்வாகம் சார்பில் அங்கு இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை கனரக இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தினர். அதன் பின் கோயில் நிலத்திற்கான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன. அப்போது தாசில்தார் ரவிக்குமார், கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, கோயில் ஊழியர்கள், பாதுகாவலர்கள், அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் பாதுகாப்பு அளித்தனர். இந்நிலையில் அப்பகுதி விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். விவசாயி மோகன் கூறுகையில், "எனக்கு இப்பகுதியில் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இதுகுறித்து நீதி கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அங்கு பணிகள் குறித்து தடையானை பெறப்பட்டு உள்ளது. நிலத்தை ஒப்படைத்தது குறித்து எந்த முன்னறிவிப்பும் வழங்கவில்லை. நிலம் கையகப்படுத்துவதற்கான தொகை போதுமானதாக இல்லை. நிலத்திற்காக விலை நிர்ணயம் குறித்து அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையும் நடத்த வேண்டும்." என்றார்.