பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆனித் திருவிழாவை நிறைவை தொடர்ந்து, நேற்று ஆடி மறுபூஜை, பாலாபிஷேகம் திருவிழா கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா ஜூலை 6ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. பத்து நாட்கள் நடந்த திருவிழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா வந்தார். ஜூலை 15 ல் திருவிழா நிறைவடைந்தது. நேற்று ஜூலை 21ல் மறுபூஜை, பாலாபிஷேகத்தை முன்னிட்டு பெரியகுளம் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து திருவிழாவில் அம்மனுக்கு அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை, மாவிளக்கு எடுத்த பக்தர்கள் அவர்களது குடும்பத்தினர் ஏராளமானோர் தீர்த்ததொட்டியில் தீர்த்தம் எடுத்து, அதில் பால் நிரப்பி பால்குடம் எடுத்தனர். அங்கு துவங்கிய பால்குடம் பாலசுப்பிரமணியர் கோயில், வடக்கு அக்ரஹாரம், வரதராஜப் பெருமாள் கோயில் வழியாக கவுமாரியம்மன் கோயில் வந்தனர். அம்மனுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடந்தது. உற்ஸவர் கவுமாரியம்மன், குங்குமம் அம்மனாக மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். பெரியகுளம் தையல்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் மண்டகபடி செய்தனர். பிரசாதம் வழங்கினர். அம்மன் மின்னொளி வாகனத்தில் வீதி உலா வந்தார்.