அன்னூர் ; அன்னூர் பெரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில், 400க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கினர்.
அன்னூர் சின்னம்மன், பெரியம்மன் கோவிலில், 56வது ஆண்டு பூச்சாட்டு திருவிழா கடந்த 13ம் தேதி கிராம சாந்தி பூஜை உடன் துவங்கியது. 20ம் தேதி வரை, தினமும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று று அதிகாலை 4:00 மணிக்கு, ஆனைமலை கருப்பராயன் கோவிலில் இருந்து சின்னம்மன் கோவில் வழியாக, பெரிய அம்மன் கோவிலுக்கு கரகம் எடுத்து வரப்பட்டது. காலை 6:10 மணிக்கு, 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கினர். இதையடுத்து, கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்தனர். காலை 11:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், துவங்கி மதியம் முடிந்தது. பெரியம்மனுக்கு அபிஷேக பூஜையும் மகா தீபாராதனையும் நடந்தது. 3,000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் 2:30 மணிக்கு பெரிய அம்மன் கோவில் நுழைவு வாயிலில் இருந்து உற்சவர், மாவிளக்கு மற்றும் முளைப்பாலிகை எடுத்து வரப்பட்டது. பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (22ம் தேதி) கரியாம்பாளையம், ராக்கியண்ணசாமி கோவிலில் காலை 8:00 மணிக்கு பொங்கல் வைத்தலும், 10:00 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜையும் நடக்கிறது. மதியம் சிவன், சக்தி பூங்கரகம் எடுத்து வரப்படுகிறது.