வடலூர்; தமிழக ஊரக வளர்ச்சி மற்றும், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், வடலூர் அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்
வடலூர், ஆபத்தாரணபுரம் பகுதியில் அமைந்துள்ள பச்சைவாழி அம்மன் கோவிலில், த.வெ.க., பொது செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் இன்று சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை, 11:00 மணிக்கு தனது குலதெய்வமான பச்சைவாழி அம்மன் கோவிலுக்கு, அமைச்சர் ஆனந்த் மஞ்சள் சட்டை மற்றும், வேட்டியில் மனைவியுடன் வருகை புரிந்தார். அமைச்சர் வருகையையொட்டி, கோவில் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. பிற்பகல் 12:00 மணிக்கு மேல் கோவிலில் பச்சைவாழி அம்மனுக்கு நடந்த அபிஷேகம் மற்றும், சிறப்பு வழிபாட்டில் அமைச்சர் ஆனந்த் கலந்து கொண்டு பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். மதியம், 3:00 மணி வரை கோவிலில் இருந்த அமைச்சர் ஆனந்த், அதன் பிறகு அங்கிருந்து கிளம்பினார். அமைச்சர் வருகையால் வடலூர், குறிஞ்சிப்பாடி பகுதிகளின் நகர த.வெ.க., நிர்வாகிகள் மற்றும், பொதுமக்கள் பலர் கோவிலில் திரண்டனர். அமைச்சர் வருகை குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது : அமைச்சர் ஆனந்த் அவருடைய குலதெய்வ கோவிலான பச்சைவாழி அம்மன் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வருகை புரிவது வழக்கம். இந்த ஆண்டும் கோவிலுக்கு வந்த அவர் அபிஷேகம் மற்றும், பூஜைகளில் கலந்து கொண்டு அம்மனை மனமுருக வழிபட்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.