வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அனுமதி பெறாமல் தனியார் சோலார் நிறுவனம் அமைத்த இரு மின்கோபுரங்களை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று அகற்றினர்.
வடமதுரை பால்கேணி மேடு பகுதியில் சவுந்தரராஜப் பெருமாள் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட 11 ஏக்கர் நிலம் உள்ளது. தனியார் நிறுவனம் சித்துவார்பட்டி பகுதியில் சோலார் மின்சக்தி தயாரித்து வடமதுரை துணை மின்நிலையத்திற்கு வழங்கும் வகையில் கோயில் இடத்தில் எந்தவொரு அனுமதியும் பெறாமல் இரு மின்கோபுரங்கள் அமைத்தனர்.இதையறிந்த ஹிந்து சமய அறநிலையத்துறையினர் ஆக.,29ல் உதவி ஆணையர் நாகவேல் தலைமையில் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து தொடர்புடைய தனியார் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி தாங்களே அகற்றி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் தரப்பில் கூறிய பதிலில் மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்த பின்னர் அகற்றி கொள்ள அவகாசம் வேண்டும்; இல்லையெனில் கோயில் நிர்வாகமே அகற்றி கொள்ளலாம் என்றனர். மேலும் நாட்கள் கடந்தால் தேவையற்ற சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை உணர்ந்து உடனடியாக நேற்று காலை அகற்றும் பணியை துவக்கினர். இதற்காக 200 அடி உயரம் வரை கையாளும் திறன் கொண்ட கிரேன் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பாக மின்கோபுரங்களை அகற்றினர். பின்னர் ஏல நடைமுறையில் விற்கப்பட்டு தற்போது ஏற்பட்ட தேவையற்ற செலவிற்கு ஈடு செய்ய முயற்சிக்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.