புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையொட்டி, நாளை (19ம் தேதி) சிறப்பு பூஜை நடக்கிறது.
புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் 36 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. புரட்டாசி மாதத்தையொட்டி, 5 சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் சனிக்கிழமையான நாளை (19ம் தேதி) கனிவர்க்க சேவை சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடக்கிறது.
அதனை தொடர்ந்து, இரண்டாவது சனிக்கிழமை (26ம் தேதி) சந்தனக்காப்பு சேவை, மூன்றாவது சனிக்கிழமை அடுத்த மாதம் (3ம் தேதி) புஷ்ப அங்கி சேவை, நான்காம் சனிக்கிழமை (10ம் தேதி) முத்தங்கி சேவை மற்றும் ஐந்தாம் சனிக்கிழமை (17ம் தேதி) விசேஷ புஷ்ப சேவை நடைபெற உள்ளது. 5 சனிக்கிழமைகளில் காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.