திருக்கோவிலுார்: பரனுார் சத்திரம் திரவுபதியம்மன் கோவிலில் நடந்த தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருக்கோவிலுாரை அடுத்த பரனுார் சத்திரம் திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம்‚ தேரோட்டம், தீமிதி விழா நடந்தது. திரவுபதியம்மன் சமேத அர்ச்சுணன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி‚ சுற்று வட்டாரத்தை சேர்ந்த 7 ஊர்களில் வீதியுலா நடந்தது. மாலை 4:00 மணிக்கு‚ சுவாமி கோவிலை வந்டைந்தவுடன், தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சுவாமி, தேரில் எழுந்தருளியதும், ஏராளமான பக்தர்கள் வடம்பிடிக்க‚ தேர் முக்கிய வீதிகள் வழியாக நிலையை வந்தடைந்தது. கரகம் தீக்குண்டத்தில் இறங்கியவுடன், ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று இரவு விழாவின் நிறைவாக தெப்ப உற்சவம் நடந்தது. இதில் சுவாமி தெப்பத்தில் குளத்தை வலம் வந்தது.