சபரிமலை பெரிய பாதையின் சிறப்புகள்!



சபரிமலைக்கு பெரிய பாதை என்னும் எரிமேலி வனப்பாதையே ஐயப்பன் தன் யாத்திரைக்காகச் சென்ற வழி என்பார்கள் குருமார்கள். பெரிய பாதை என்பது எருமேலி, பேரூர் தோடு, காளைகட்டி, அழுதை, அழுதை நதி, கல்லிடுங்குன்று, இஞ்சிப்பாறை- உடும்பாறை, முக்குழி, கரிவலம் தோடு, கரிமலை, பெரிய யானை வட்டம், சிறிய யானை வட்டம், பம்பா நதி வழியாகப் பயணிக்கும் பாதையாகும்.

மஹிஷியைக் கொன்று வீசிய இடம் எரிமேலி எருமைக்கொல்லி என்ற பெயரே எருமேலியாகி உள்ளது. முதலில் இங்குள்ள பேட்டை சாஸ்தாவை வணங்கி, ஐயன் வனம் புகுந்ததை நினைவுபடுத்த பேட்டைத் துள்ளல் நடைபெறுகிறது. பேரூர் தோடிலிருந்துதான் ஐயப்பனின் உண்மையான பூங்காவனம் தொடங்குகிறது. முறையான விரதம் இல்லாவர்கள். இங்கு நுழைய முற்படாமல் இருப்பதே நலம். அந்தக் காலத்தில், குரு விபூதி பிரசாதம் தந்தால் மட்டுமே மேற்கொண்டு யாத்திரையைத் தொடரலாம். அல்லாமல் அவர் இருமுடியை வாங்கி வைத்துக் கொண்டாரானால், வீட்டுக்குத் திரும்பிவிட வேண்டியதுதான்.

வனதேவதைகளும், பூதகணங்களும், வனமிருகங்களும் இந்த விரத மகிமைக்கு மட்டுமே கட்டுப்பட்டு பக்தர்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்கின்றன என்கிறார்கள்.
காளைகட்டியில் நந்திகேஸ்வரரை வணங்கி, யாத்திரையைத் தொடர வேண்டும். பம்பையின் கிளை நதி அழுதை. இதில் ஸ்நானம் செய்து அழுதை மலையை ஏறிக் கடக்க வேண்டும். அழுதையில் முழுகிக் கல்லை எடுத்துக்கொண்டு மடியில் காப்பாற்றிவைப்பது வழக்கம். இந்தக் கல்லை கல்லிடும்குன்றில் விடுவிக்கவேண்டும். பூதநாதரின் சாந்நித்யம் நிலை பெற்றிருக்கும் இடம் உடும்பாறைக் கோட்டை. ஸமஸ்த பூத கணங்கள் சூழ இங்கு அவர் "வ்யாக்ரபாதன் என்ற பெயரில் வசிக்கிறார். இரவு நேரங்களில் இங்கு தங்குபவர்களுக்குப் பூதநாதனின் சங்கிலி சத்தமும் கேட்பதுண்டு. பூதநாதருக்கென விசேஷமான ஒரு பாறையும் அங்கே பகவானுக்கென விசேஷமாக ஆழி பூஜையும் நடத்துவது மரபு. அடுத்து முக்குழியில் பத்ரகாளியை வணங்கி அவளுக்குக் குங்குமார்ச்சனை செய்து குருதி படைக்கும் வழக்கமும் உண்டு.

கரி என்றால் யானை, யானைகள் தண்ணீர் அருந்த வலம் வரும் பகுதியே கரிவலம் தோடு, இது தங்குவதற்குரிய இடம் அல்ல; பயமுறுத்தும் கரிமலை ஏற்றத்துக்குக் கொஞ்சம் தயார்படுத்திக் கொள்ள உதவுமிடம் இது. கரிமலை, பக்தர்களின் விரத பலத்தையும் பிரம்மச்சர்ய பலத்தையும் சோதிப்பது. அவரவர் மனத்தின் உண்மைகளை வெளிக்கொணரும் இடம் இது. கரிமலை ஏற்றமும் இறக்கமும் ஒரு மனிதனை புடம் போடக்கூடியவை. சரணம் சொல்லாதவரையும் சரணம் சொல்ல வைப்பன. முறையாக விரதமிருந்து கரிமலை ஏறி இறங்குபவனுக்கு ஐயனின் அருள் பூரணமாகக் கிடைக்கும். பகவான் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து அவனது துன்பத்தைத் துடைப்பார்.

பண்டைய காலத்தில் வெளியானை வட்டத்தையொட்டி அமைந்துள்ள பகுதியே பம்பை. கரிமலை உச்சி தொடங்கி பம்பை வரை கருப்பனின் சாந்நித்யம் நிறைந்து விளங்கும். வலியானை வட்டத்தில் தேங்காயில் கருப்பனை ஆவாஹித்து பூஜிக்கும் வழக்கம் உண்டு. இங்குதான் பகவான் சாஸ்தாவின் வரவுக்காக சனகாதி ரிஷிகள் தவமியற்றிக் காத்திருந்தனர். இன்றும் மகான்களும், ஞானிகளும் சூட்சுமமாய் இங்கு தவம் செய்கின்றனர். இங்கு நடத்தப்படும் அன்னதானத்தில் ஐயப்பனே நேரடியாக ஏதாவது ஓர் உருவத்தில் வந்து பங்குகொள்கிறார் என்ற காரணத்தால், இங்கு அன்னதானத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம்.


பின்னர் சபரி பீடத்தில் அம்பிகையையும் ஐயப்பனையும் வணங்கி, விரதத்தில் ஏதும் குறைகள் இருப்பின் மன்னிக்கும்படி ‘ஸமஸ்தாபாரதம்’ கேட்டு, சரங்குத்தியை வணங்கி பதினெட்டாம் படியை அடைய வேண்டும். கடுத்தனெனும் பெரிய மற்றும் சிறிய கருப்பனை வணங்கி உத்தரவுபெற்று, தேங்காய் உடைத்து சத்தியமான பதினெட்டுபடிகளில் ஏறுதல் வேண்டும். தரிசனம் கண்டு, நெய் அபிஷேகம் முடித்த பின்னர், குருவுக்கு தட்சணை தந்து அவர் கையால் அந்த பிரசாதத்தைப் பெறுதல் வேண்டும். பிரசாதத்தை இருமுடியில் வைத்து இருமுடியை சுமந்தபடி கீழே இறங்க வேண்டும். முத்திரை மாலையை எக்காரணம் கொண்டும் வழியிலேயே கழற்ற கூடாது.


ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்