வடமதுரை: வடமதுரை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு 70 அடி உயர வழுக்கு மரத்தில் ஏறும் போட்டி நடந்தது.
வடமதுரை சிங்காரகோட்டையில் விநாயகர், காளியம்மன், மாரியம்மன், பகவதிம்மன், முத்தாலம்மன் கோயில் திருவிழா கடந்த ஜூலை 10ல் துவங்கியது. மா விளக்கு, முளைப்பாரி, அக்கினிச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்து கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துதல் போன்ற வழிபாடுகள் நடந்தன. நேற்று முத்தாலம்மனுக்கு படுகளம் அமைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக எண்ணெய் கழு (வழுக்கு) மரத்தில் ஏறும் போட்டி நடந்தது. முன்னதாக ஊர் மந்தையில் 70 அடி உயரத்திற்கு வழக்கு மரம் கிரேன்கள் உதவியுடன் நடப்பட்டது. பாரம்பரியமாக இங்கு வழுக்கு மரம் ஏறும் சாணார்பட்டி தோப்பூரைச் சேர்ந்த இளைஞர் குழு ஒருசேர முயற்சித்து ஒரு மணி நேரம் முயன்று இறுதியில் மரத்தின் உச்சியை அடைந்தது. அங்கிருந்த விபூதி பொட்டலத்தை எடுத்து வந்து கோயிலில் வழிபட்டு பக்தர்களுக்கு வழங்கினார்.