அன்னுார்; ஆதரவற்றோரை மகிழ்விப்பதால், நமக்கு புண்ணியம் சேரும், என குருஜி சிவாத்மா பேசினார்.
நல்லகவுண்டம்பாளையம், பிரபஞ்ச அமைதி ஆசிரமம் நிறுவப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து ஆசிரம வெள்ளி விழா, நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்தல், 14 ஏழை ஜோடிகளுக்கு திருமணம், ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவில் ஆசிரம நிறுவனர் குருஜி சிவாத்மா பேசுகையில், வழக்கமாக, நம் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு விழா கொண்டாடுவோம். தற்போது நாம் அனைவரும் இங்கு உள்ள ஆதரவற்ற குழந்தைகள், முதியோர், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மன வளர்ச்சி குன்றியோர், சிறையில் இருந்து கருணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டோர் ஆகியோருக்கு நம்பிக்கை அளித்து அவர்களை மகிழ வைத்து கொண்டாடுவது நமக்கு புண்ணியத்தை சேர்க்கும். நமது குடும்பத்தில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம் கிடைக்கச் செய்யும், என்றார்.14 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆசிரம நன்கொடையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். சூலூர் எம்.எல்.ஏ., கந்தசாமி, முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் சதாசிவன், கந்தவேல், சமூக ஆர்வலர்கள் காளியப்பன், சத்தியமூர்த்தி, மகேந்திரன், ஒய்ஸ் மேன் கிளப், லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப், வாசவி கிளப் மற்றும் பரஸ்பரம் டிரஸ்ட் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.