ஊட்டி; ஊட்டி பழைய அக்ரஹாரம் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஊட்டி பழைய அக்ரஹாரம் பகுதியில், ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஆரம்ப காலத்தில் அங்கு பெருமாள் பஜனை நடந்தது. தொடர்ந்து, 1948ம் ஆண்டு கோவில் கட்டுமான பணிகள் துவக்கப்பட்டு, 1950ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இக்கோவிலில், ராமநவமி, கிருஷ்ணர் ஜெயந்தி, புராட்டாசி மாதம் ஐந்து சனிக்கிழமை, பெருமாள் கல்யாண உற்சவம், பிருந்தாவன பஜனை, கருட சேவை, ஊஞ்சல் உற்சவம் மற்றும் மார்கழி பஜனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் கோவிலில் சிறப்பாக நடத்தப்படுகிறது. குறிப்பாக, மார்கழி மாதத்தில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி பூஜை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்நிலையில், இன்று மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜை சிறப்பாக நடந்தது. காலை, 6:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து, இதன் அருகே உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில், ஆஞ்சநேயருக்கு பெருமாள் அவதார அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பஜனை, ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* ஊட்டி புதிய அக்ரஹாரத்தில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான வேணுகோபாலசுவாமி கோவிலில்,சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி காலை, 5:30 மணிக்கு நடந்தது. 10;25 மணிக்கு கருட வாகனத்தில் உற்சவர், ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி திருவீதி உலா நடந்தது. அதில், பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்கிறது.