திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், நின்ற நாரயணப் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
திருத்தளிநாதர்கோயிலில் மார்கழி உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:30 மணிக்கு நடைதிறந்து திருப்பள்ளியெழுச்சி பூஜைகள் நடந்தன. தொடர்ந்து காலை 5:00 மணிக்கு மூலவர் யோகநாராயணப் பெருமாளுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் பெருமாள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. திரளாக பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருநாள் மண்டபத்தில் உற்ஸவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பாஸ்கர் குருக்களால் பூஜைகள் நடந்து தீபாராதனை நடந்தது. பின்னர் உற்ஸவர் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து பரமபத வாசல் எழுந்தருளினார். தொடர்ந்து வாசலுக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து தீபாராதை நடந்தது. பின்னர் சொர்ககவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பிரவேசித்தார். தொடர்ந்து பெருமாள் திருவீதி வலம் வந்து கோயில் சேர்ந்தார்.
நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறந்து காலை 5:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி நடந்தது. தொடர்ந்து காலை 8:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபராதனை நடந்தது. பின்னர் உற்ஸவருக்கும், பரமபத வாசலுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருளினார். திரளாக பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். மாலையில் 6:30மணிக்கு நம்மாழ்வாரின் நல்மோட்சம் குறித்து அழ.மெய்யம்மை பேசினார். இரவில் பெருமாள் கருட வாகனத்தில் அருள்பாலித்தார். நாளை கூடாரவல்லி உத்ஸவத்தை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு ஆண்டாள் நாச்சியாருக்கு திருமஞ்சனம், காலை 11:00 மணிக்கு திருவாராதனம் நடைபெறும்.