மதுரை; ராமபிரானை வணங்கினால் யோகமும் போகமும் பெறலாம்’’ என ஆன்மிகப் பேச்சாளர் கலைமாமணி நாகை முகுந்தன் பேசினார்.
ராம நவமியை முன்னிட்டு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் எஸ்.எஸ்.காலனி, எஸ்.எம்.கே., மண்டபத்தில் முகுந்தனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடக்கிறது. நேற்று அவர்யோகமும் போகமும் என்ற தலைப்பில் பேசியதாவது; ராமாயணம் என்றால் அது ராமபிரானின் வரலாறு என்பதாக நினைக்கிறோம். அதற்கு ராமோ தண்டம் என்று வைத்திருக்கலாம். உதண்டம் என்றால் வரலாறு என்று பொருள். அயனம் என்றால் வழி என்று பொருள். சூரியன் தை மாதத்தில் இருந்து ஆனி மாதம் வரை செல்லும் பாதை உத்தராயனம். ஆடி முதல் மார்கழி வரை செல்லும் பாதை தட்சணாயனம். உத்திர என்றால் வடக்கு, தட்சணம் என்றால் தெற்கு. அதுவே உத்தராயனம், தட்சணாயனம் ஆகும். அதுபோல ராமாயணம் என்றால் ராமபிரானின் வழி. வாழ்வாங்கு வாழும் மனிதர்கள் தெய்வ நிலையை அடைய ராமபிரான் வழியில் அதாவது ராம அயன’த்தில் நடந்தால் உயர்ந்த நிலையை அடையலாம். அதற்காக வாழ்ந்து காட்டியதுதான் ராமபிரானின் வழி. ஒரு சொல்; ஒரு இல்; ஒரு வில்; இது ராமனின் வழி. ராமபிரான் உலகில் உள்ள அனைவரையும் சகோதரராக நேசித்தார். உண்மையான சமூக நீதியை நிலைநாட்டினர். அந்தக் காலத்தில் தீண்ட தகாதவன் என்று ஒதுக்கி தள்ளப்பட்ட குகப்பெருமானை, குரங்கு இனத்தைச் சேர்ந்த சுக்ரீவனை, தன் மனைவியை கவர்ந்து சென்ற ராவணனின் தம்பி விபீஷணனை சகோதரனாக ஏற்றுக் கொண்டார். .
‘இன்று பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்’ என்று ஒரு சிலர் பேசுகிறார்களே, அதனை நடத்திக் காட்டியவர் ராமபிரான். ஒரு பறவை ஜடாயு அதை தன் தந்தை ஸ்தானத்தில் வைத்து ஈமக்கிரியை செய்தான். இப்படிப்பட்ட ராமபிரானையும், சீதையையும் வணங்கினால் வாழ்க்கையில் யோகமும் போகமும் பெறலாம். யோகம் என்றால் அதிர்ஷ்டம். போகம் என்றால் அதை அனுபவிக்கும் வாய்ப்பு. வாழ்க்கையில் பலருக்கு அதிர்ஷ்டம் இருக்கும். அதை அனுபவிக்க முடியாது. ஒரு சிலர் அதிர்ஷ்டம் இல்லாமலேயே அனுபவித்துக் கொண்டிருப்பர். ஆனால் ராமபிரானும், சீதாப்பிராட்டியும் அதிர்ஷ்டத்தையும், அதை அனுபவிக்கும் வாய்ப்பையும் கொண்டனர். இவ்வாறு அவர் பேசினார். இன்று (ஏப்.5) மாலை 6:30 மணிக்கு ‘திருவடி சூடிய திருமுடி’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. ஏற்பாடுகளை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.