வத்திராயிருப்பு; சதுரகிரி மலை ஓடைகளில் நீர் வரத்து காரணமாக சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு இன்று சுவாமி தரிசனம் வந்த பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி நேற்று முதல் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் தினமும் சுவாமி தரிசனம் செய்ய விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதன்படி முதல் நாள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் கூட வரவில்லை. இந்நிலையில் நேற்று இரவு முதல் மலைப்பகுதியில் பெய்த மழையால், கோயிலுக்கு மலை ஏறும் வழியில் உள்ள ஓடைகளில் நீர் வரத்து ஏற்பட்டது. இதனிடையே விடுமுறை நாளான இன்று காலை 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். ஆனால் ஓடைகளில் நீர்வரத்து செல்வதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறையினர் தெரிவித்தனர். சிறிது நேரம் காத்திருந்த நிலையில் பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.