பெ.நா.பாளையம்; "ராமாயணத்தில் சகோதரத்துவம் மிக அழகாக எடுத்து காட்டப்பட்டுள்ளது" என, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் தமிழ் துறை உதவி பேராசிரியர் குருஞானாம்பிகா பேசினார்.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் ராம நவமியை ஒட்டி கம்பராமாயணம் என்ற தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவு நடந்தது. நிகழ்ச்சிக்கு, வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், ராமாயணத்தில் சகோதரத்துவம் என்ற தலைப்பில், வித்யாலயா வளாகத்தில் உள்ள ராமகிருஷ்ணர் கோவிலில் தமிழ் துறை உதவி பேராசிரியர் குருஞானாம்பிகா பேசுகையில்," உலகத்து மொழிகளுக்கெல்லாம், ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்த மொழிகளிலே பக்தியையும், இரக்கத்தையும் சொல்லும் மொழி என்றால், அது நம் தமிழ் மொழி தான். நம் தமிழ் மொழியின் சீரிய பண்புகளை வள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், பாரதியார் ஆகியோர் வாயிலாக, இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ளலாம்.
இன்றைய கலியுகத்தில், ஒரு அடி நிலத்துக்காக சகோதரர்கள் நீதிமன்றத்துக்கு செல்லும் நிலையில், ராமாயணத்தில் வாழ்ந்தவர்கள் உடன் பிறந்த சகோதரர்களுக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்து வாழ்ந்திருக்கிறார்கள். ராமாயணத்தில் ராமர் ஒரு பரம்பொருளாக வாழாமல், ஒரு எளிய மனிதராக வாழ்ந்து இருக்கிறார். ராமன், இலக்குவன், பரதன், சத்ருகன் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் அளவில்லா அன்பைக் கொட்டி வாழ்ந்திருக்கிறார்கள். ராமனுடன் காட்டில் வாழ்ந்த லக்குவன், ராமனுக்காக அனைத்து துன்பங்களையும் தாங்கி, தன்னை ஒரு வேலைக்காரனாக முன்னிறுத்தி, ராமனுக்காக பணிகளை மேற்கொண்டார். ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் இந்திரஜித் ஏவிய பிரம்மாஸ்திரத்தினால் இலக்குவன் மயக்கம் அடைகிறான். இலக்குவன் எங்கு தன்னை விட்டு போய் விடுவானோ என்ற அச்சத்தில் எப்போதுமே உணர்ச்சி வசப்படாத ராமன், சகோதரன் லட்சுமணனுக்காக, நீ எனக்கு அப்பா, அம்மா, தம்பி, குழந்தை, மற்றும் என்னுடைய தவமாக இருக்கிறாய், என்னை விட்டு போய் விடாதே என்று கதறி அழுவது இராமாயணத்தில் சகோதர பாசத்தின் உச்சகட்டமாக விளங்குகிறது" என்றார். ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் ராமநவமியான ஞாயிற்றுக்கிழமை காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை ஸ்ரீமத் வால்மீகி ராமாயண சொற்பொழிவும், மாலை, 6:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை ஸ்ரீராம நாம சங்கீர்த்தனமும், பஜனையும் நடக்கிறது.