வால்பாறை; வால்பாறை முருகன் நற்பணி மன்றத்தின் சார்பில், சுப்ரமணிய சுவாமிக்கு மயில்வாகனம் உபயமாக வழங்கப்பட்டது.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகிறது. குறிப்பாக, தைப்பூசத்திருவிழா, பங்குனி உத்திரத்திருவிழா, சூரஹம்சாரவிழா, முருக பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கும் விழாக்கள் நடக்கிறது. இது தவிர, கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்பசுவாமிக்கு மண்டல பூஜை திருவிழாவும், காசிவிஸ்வநாதருக்கு மாதம் தோறும் பிரதோஷ பூஜையும் நடக்கிறது. இந்நிலையில், வரும், 8ம் தேதி முருகன் நற்பணி மன்றத்தின் சார்பில் பங்குனி உத்திரத்திருவிழா நடக்கிறது. இதனையடுத்து, நற்பணி மன்ற நிர்வாகிகள், நேற்று சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு தங்கமுலாம் பூசப்பட்ட மயில் வாகனத்தை கோவில் தலைமை குருக்கள் கண்ணனிடம் உபயமாக வழங்கினர். கோவில் அதிகாரிகள் கூறுகையில், ‘சுப்ரமணிய சுவாமி கோவிலில், திருவிழாவின் போது, உற்சவர் திருவீதி உலா சென்று அருள்பாலிக்கிறார். அப்போது, இந்த மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா செல்வார். தற்போது, உபயம் பெற்ற மயில் வாகனம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது,’ என்றனர்.