திருப்போரூர்; திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், மூலவர் கந்த சுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். செவ்வாய்க்கிழமை கந்த பெருமானுக்கு உகந்த நாள் என்பதால், அன்று கந்த பெருமானை தரிசிக்க, ஏராளமானோர் திருப்போரூரில் திரள்கின்றனர். அந்த வகையில், இன்று செவ்வாய்க்கிழமை என்பதாலும், தமிழ் புத்தாண்டின் முதல் செவ்வாய் என்பதாலும், காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வர ஆரம்பித்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். மொட்டை அடித்தல், துலாபாரம் எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். குறிப்பாக, பெண்கள் வட்ட மண்டபத்தை சுற்றி அமர்ந்து விளக்கேற்றி, கூட்டு வழிபாடு செய்தனர்.