சென்னை; நெதர்லாந்து நாட்டில் ஏலம் விட இருந்த, கண்ணப்ப நாயனார் உலோகச் சிலையை, தமிழக போலீசார் மீட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகழூரில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலில், தொன்மை வாய்ந்த கண்ணப்ப நாயனார் உலோகச்சிலை இருந்தது. இச்சிலையை, 15 ஆண்டுகளுக்கு முன், மர்ம நபர்கள் திருடி, வெளிநாட்டிற்கு கடத்திச் சென்று விட்டனர். இந்த சிலை திருட்டு தொடர்பாக, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். வடமேற்கு ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்து நாட்டின் நுண்கலை கண்காட்சியில், தமிழகத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட கண்ணப்ப நாயனார் உலோகச் சிலை ஏலம் விட இருப்பதை, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்தனர். கூடுதல் டி.ஜி.பி., கல்பனா நாயக் தலைமையில், ஐ.ஜி., பிரவேஷ் குமார் ஆகியோர், நெதர்லாந்து நாட்டு போலீஸ் மற்றும் இந்திய தொல்லியல் துறைக்கு, கண்ணப்ப நாயனார் சிலை தமிழக கோவிலுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை அனுப்பினார். அதன்படி, ஏலம் விடும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது; சிலையும் மீட்கப்பட்டது. தற்போது, நெதர்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் பராமரிப்பில் சிலை உள்ளது. இச்சிலையை தமிழகம் எடுத்து வர, சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். சிலையை மீட்க காரணமாக இருந்த பிரவேஷ்குமார், தற்போது சென்னை மாநகர போலீசில், வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார். சிலை மீட்பு பணியில் ஈடுபட்ட, கூடுதல் டி.ஜி.பி., உள்ளிட்டோருக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.