பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் இன்று காலை சுந்தரராஜ பெருமாள், யாக மூர்த்தி, மூலவர் பரமசுவாமிக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து தீர்த்த குடங்கள் யாகசாலையை அடைந்தது. பின்னர் பெருமாள் ஆடி வீதி வலம் வந்து யாகசாலை முன்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் 4 நாட்கள் யாக பூஜைகள் நடக்கும் நிலையில் மே 11 காலை யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி, மூலவர், உற்ஸவர் மற்றும் கருப்பணசாமிக்கு கும்ப திருமஞ்சனம் நடக்கிறது. அதிகாலை 2:00 மணிக்கு பெருமாள் பூப்பல்லக்கில் கோடாரி கொண்டையிட்டு, நெல் மணி தோரணங்கள் சூடி, ஈட்டி, வளரி, தடி ஏந்தி கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளுவார். தொடர்ந்து அஷ்டாதச வாத்தியங்கள் முழங்க, ஏராளமான தீவட்டிகள் வெளிச்சத்தில் பக்தர்கள் புடை சூழ கருப்பண்ண சாமியிடம் விடை பெற்று பெருமாள் மே 12 அதிகாலை 4:00 மணிக்கு வைகை ஆற்றில் இறங்க உள்ளார். தொடர்ந்து அன்று காலை குதிரை வாகனத்தில் அலங்காரமாகி தல்லாகுளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் துருத்தி மூலம் மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்து அழகரை வரவேற்க உள்ளனர். பின்னர் ஆயிரம் பொன் சப்பரத்தில் அமர்ந்து, இரவு வண்டியூர் பெருமாள் கோயிலை அடைகிறார். மறுநாள் மண்டுக மகரிஷி சாப விமோசனம் நிறைவடைந்து தசாவதார சேவையும், தொடர்ந்து வைகையாற்றில் பெருமாள் அருள்பாலிக்க உள்ளார். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.