திருச்சூர் பூரம் திருவிழா கோலாகலம்; 30 யானைகள் அணிவகுத்து ‘குடை மாற்றம்’



பாலக்காடு; கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. விழாவில், 70-க்கும் மேற்பட்ட கோவில் யானைகள் கலந்து கொண்டன. வடக்குநாதரை வணங்கி நெய்தலைக்காவு பகவதி அம்மன், எர்ணாகுளம் சிவகுமார் என்ற யானை மீது எழுந்தருளி, தெற்கு கோபுர நடை திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, அதிகாலை கணபதி ஹோமமும், காலை 7:30 மணிக்கு கணிமங்கலம் சாஸ்தா கோவில் உற்சவர் எழுந்தருளி, 9 யானைகளின் அணிவகுப்புடன் தெற்கு கோபுரம் நடை வழியாக, வடக்குநாதரை வணங்கி மேற்கு கோபுர நடை வழியாக வெளியில் வந்தார்.


இதேபோல், விழா கொண்டாடும் உபகோவில்களான, லாலூர் பகவதி அம்மன் கோவில், அய்யந்தோள் ஸ்ரீகிருஷ்ணர் கோவில், நெய்தலைக்காவு பகவதி அம்மன், செம்பூக்காவு பகவதி அம்மன், பனமுக்கும்பிள்ளி சாஸ்தா கோவில், சூரக் கோட்டுக்காவு பகவதி அம்மன், காரமொக்கு பகவதி அம்மன், கணிமங்கலம் சாஸ்தா உற்சவர்களும் யானைகளின் மீது எழுந்தருளி வடக்குநாதரை வணங்கி சென்றனர். இதில், செம்பூக்காவு பகவதி அம்மன், ஆசியாவின் மிக உயரமான யானையான தெச்சிக்கோட்டுக்காவு ராமச்சந்திரன் மீது எழுந்தருளினார். அதன்பின், வடக்குநாதர் சன்னிதி பிரஹ்மசுவம் மடத்தில் யானைகளின் அணிவகுப்பிற்கு கோங்காடு முதுவின் தலைமையிலான பஞ்சவாத்தியம் முழங்கின. இதைக் காண, திரை உலக நட்சத்திரங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கோவில் மைதானத்தில் திரண்டு வந்தனர். மதியம், 12:00 மணிக்கு, பாரமேக்காவு பகவதி அம்மன் ‘செம்படை மேளம்’ என்ற செண்டை மேளம் முழங்க, 15 யானைகள் அணிவகுப்புடன் எழுந்தருளி வடக்குநாதர் சன்னிதிக்கு வரும் வைபவம் நடந்தது.


அதன்பின் ‘இலஞ்சித்தறைமேளம் என்ற செண்டை மேளம் இசைக்கப்பட்டன. 250க்கு மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு, பிரபல செண்டை மேள வித்வான் கிழக்கூட்டு அனியன் மாரார் தலைமை வகித்தார். மூன்று மணி நேரத்துக்கு இடைவிடாமல் நடந்த செண்டை மேள இசை பக்தர்களை பரவசப்படுத்தியது. மாலை, 4:30 மணிக்கு திருவம்பாடி கோவிலுக்கு சொந்தமான, 15 யானைகள் ராஜஅலங்காரத்துடன் வடக்குநாதர் கோவில் முன் வந்தன. வடக்குநாதர் கோவில் தெற்கு கோபுர நடை வழியாக பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் யானைகள் வெளியே வந்து, சக்தன் தம்புரான் மன்னரின் உருவ சிலையை வலம் வந்து, வடக்குநாதர் கோவில் தெற்கு கோபுர நடை வாயிலை நோக்கி நின்றன. இதையடுத்து, மாலை, 5:30 மணிக்கு 30 கோவில் யானைகளின் மீதும் அமர்ந்திருந்தவர்கள் முத்துமணி மாலையுடன் கூடிய வண்ணக் குடையை மாற்றினர். இரு தரப்பினர் போட்டி போட்டு நடத்திய ‘குடை மாற்றும்’ நிகழ்ச்சியை கோவில் வளாகத்தில் திரண்டு இருந்த பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர். இரவு பாரமேக்காவு மற்றும் திருவம்பாடி கோவில் உற்சவ கமிட்டிகளின் பிரம்மாண்ட வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்