சபரிமலையில் கற்பூர ஆழி பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு

டிசம்பர் 25,2025



சபரிமலை; சபரிமலையில் கடந்த இரண்டு நாட்களாக மாலையில் நடைபெற்ற கற்பூர ஆழி பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


சபரிமலையில் மண்டல பூஜைக்கு முன்னோடியாக நடைபெறும் முக்கிய சடங்குகளில் ஒன்று கற்பூர ஆழி பூஜை. மாலையில் தீபாராதனைக்கு பின்னர் மேளதாளம் முழங்க கற்பூர ஆழி பவனி புறப்படும். வட்ட வடிவமான பாத்திரத்தில் கற்பூரத்தை ஏற்றி அதை அங்கும் இங்குமாக அசைக்கும் போது கற்பூர ஜோதி ஆகாயத்தை நோக்கி எழுந்து செல்லும். இது கற்பூர ஆழிபவனி என்று அழைக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மாலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஊழியர்கள் சார்பிலும், நேற்று போலீஸ் துறை சார்பிலும் கற்பூர ஆழி பவனி நடைபெற்றது. நேற்று மாலை தீபாராதனைக்கு பின்னர் தந்திரி மகேஷ் மோகனரரு கற்பூரம் ஏற்றி பவனியை தொடங்கி வைத்தார். இதை இரண்டு ஊழியர்கள் முன்னும் பின்னுமாக அசைத்து செல்லும்போது கற்பூர தீபம் வானை நோக்கி எழுந்து சென்றது. சிவன், பார்வதி, விஷ்ணு, நாரதர், தேவி, கணபதி, முருகன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்தவர்கள் ஊர்வலத்தின் முன் வர , புலி மேல் அமர்ந்துள்ள ஐயப்பனை வாகனமாக பக்தர்கள் சுமந்து வந்தனர். சன்னிதானத்தில் தொடங்கிய இந்த பவனி மாளிகைப்புறம் கோயிலுக்கு சென்று பின்னர் கோயிலை வலம் வந்து 18 படிகள் முன்னால் நிறைவுபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சரண கோஷம் முழக்கியபடி கலந்து கொண்டனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்