டிசம்பர் 25,2025
சபரிமலை: பள்ளி அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் சபரிமலையில் கடந்த இரண்டு நாட்களாக பக்தர் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஒரு லட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் வருகின்றனர்.
சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. நவ., 17-ம் தேதி அதிகாலை தொடங்கிய மண்டல கால பூஜைகள் நாளை மறுநாள் நடைபெறும் மண்டல பூஜையுடன் நிறைவு பெறும். சீசன் தொடக்கத்தில் அதிகமான பக்தர்கள் வந்து சிரமம் ஏற்பட்டதால் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து ஐந்தாயிரமாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர் நிலைமை ஓரளவுக்கு சீராக இருந்தது. எந்த சீசனிலும் இல்லாத அளவு இந்த சீசனில் சனி, ஞாயிறு தினங்களில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. அரையாண்டு பள்ளி தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சபரிமலையில் பக்தர் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஒரு லட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். கூட்டம் அதிகமானதால் படியில் பக்தர்களை ஏற்றுவதும் வேகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சரங்குத்தி கியூ காம்ப்ளக்ஸில் பக்தர்கள் நீண்ட நேரம் தங்க வைத்த பின்னரே சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மரக்கூட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சந்திராங்கதன் ரோடு வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப் படவில்லை. மாளிகைப்புறத்தம்மன் கோயில் பின்புறம் உள்ள அன்னதான மண்டபத்தில் நேற்றுவரை ஏழரை லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் ஒரு கோடியே 97 லட்சம் ரூபாய் அன்னதான நன்கொடையாக கிடைத்துள்ளதாக தேவசம் செயல் அலுவலர் ஓ. ஜி. பிஜு கூறியுள்ளார். அன்னதான மண்டபத்தில் மூன்று ஷிப்டுகளாக 235 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தங்க அங்கி வருகை மற்றும் மண்டல பூஜை காரணமாக நாளை 30 ஆயிரம் பேருக்கும், நாளை மறுநாள் 35 ஆயிரம் பேருக்கும் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு வழங்கப்பட்டுள்ளது. ஸ்பாட் புக்கிங் இரண்டாயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.