ஜனவரி 08,2026
சபரிமலை; சபரிமலையில் மகரஜோதி நாளில் நடைபெறும் பிரசித்தி பெற்ற மகர சங்கரம பூஜை 14 - ம் தேதி மாலை 3.08 மணிக்கு நடைபெறுகிறது. மகரஜோதிக்கு முன்னதாக எருமேலில் நடைபெறும் பேட்டை துள்ளலுக்காக அம்பலப்புழாவிலிருந்து பக்தர்கள் குழுவினர் புறப்பட்டனர்.
சபரிமலையில் வரும் 14- ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான பூஜை மகர சங்கர ம பூஜை. சூரியன் தனு ராசியிலிருந்து மகர ராசிக்கு கடக்கும் முகூர்த்தத்தில் இந்த பூஜை நடைபெறும். இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொடுத்து விடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு நேரடியாக நெய் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். இந்த ஆண்டு இந்த பூஜை 14 - ம் தேதி மாலை 3.08 மணிக்கு நடைபெறும் என்று தந்திரி மகேஷ் மோகனரரு கூறியுள்ளார். இதற்காக மதியம் ஒரு மணிக்கு அடைக்கப்படும் நடை மீண்டும் 2:45 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3:08 மணிக்கு மகர சங்கரம அபிஷேகம் நடைபெறும் என்று அவர் கூறினார்.
இந்த நாளில் பகல் 1:00 மணிக்கு நடை அடைத்த பின்னர் பக்தர்களுக்கு தரிசன அனுமதி கிடையாது. மாலையில் திருவாபரணங்கள் அணிவித்து தீபாராதனைக்கு பின்னர் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகஜோதிக்கு முன்னதாக எருமேலி பேட்டை துள்ளல் 11-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கேரள மாநிலம் அம்பலப்புழாவிலிருந்து பக்தர்கள் குழுவினர் நேற்று முன்தினம் புறப்பட்டனர். பிரசித்தி பெற்ற அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் காலை சீவேலிக்கு பின்னர் 40 பெண் பக்தர்கள் உட்பட 250 பேர் அடங்கிய பக்தர்கள் குழுவினர் இருமுடி கட்டுடன் எருமேலிக்கு யாத்திரை புறப்பட்டனர். இந்த பேட்டை துள்ளலில் முன்வரும் யானை மீது எடுத்து செல்லும் திடம்பு மேல் சாந்தி கேசவன் நம்பூதிரியால் பூஜித்து குருசாமி கோபாலகிருஷ்ண பிள்ளையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் 49 நாட்கள் அன்னதானம் நடத்தியும், கோயில் மற்றும் பல்வேறு வீடுகளில் 19 ஆழி பூஜைகள் நடத்திய பின்னரும் எருமேலிக்கு புறப்பட்டுள்ளனர். 11-ல் பேட்டை துள்ளிவிட்டு 13-ல் பம்பையில் விருந்து நடத்திய பின்னர் நீலிமலை, அப்பாச்சி மேடு வழியாக சன்னிதானம் வந்தடைவர். 15 - ம் தேதி முதல் மாளிகைப்புறம் கோயில் பின்புறம் உள்ள மணிமண்டபத்தில் இருந்து சீவேலி எழுந்தருளிலும் இவர்கள் பங்கு கொள்வார்கள்.அம்பலப்புழா பக்தர்கள் இருமுடி கட்டில் கொண்டுவரும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு மகரஜோதி நாளில் அதிகாலையில் ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்படும்.