1.60 லட்சம் டின் அரவணை வீண்; 16 ஆயிரம் பாக்கெட் நெய் மாயம்; சபரிமலையில் தொடரும் சர்ச்சைகள்

ஜனவரி 08,2026



சபரிமலை: சபரிமலை மண்டல மகர விளக்கு சீசனில் அரவணை பிரசாதம் தொடர்ந்து தட்டுப்பாடாகவே உள்ளது. தொடக்கத்தில் பக்தர்களின் தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்ட அரவணை தட்டுப்பாடால் 20 டின்களாகவும் அதன்பின் 10 டின்களாகவும் குறைக்கப்பட்டது. தற்போதும் இந்த கட்டுப்பாடு தொடர்கிறது.


இந்நிலையில் மகரவிளக்கு சீசனில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சத்து 60 ஆயிரம் டின் அரவணை கெட்டுப்போய் கெட்டியாகி விட்டது. சர்க்கரை அளவு கூடியதால் தண்ணீரின் அளவு குறைந்து கெட்டியாகி இருக்கலாம் என்று இதனை தயாரிக்கும் ஊழியர்கள் கூறுகின்றனர். இதை விற்பனை செய்யாமல் ஒதுக்கி வைக்கும்படி திருவிதாங்கூர் தேவசம்போர்டு உத்தரவிட்டுள்ளது. இதன் மதிப்பு 1.60 கோடி ரூபாய் ஆகும். தயாரிப்பில் ஏற்பட்ட மெத்தனத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சன்னிதானத்தின் கீழ் இடது பக்கத்தில் தேவசம்போர்டு கவுண்டரில் பக்தர்களுக்கு அபிஷேக நெய் விற்கப்படுகிறது. இங்கு பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் நெய்யை கொடுத்துவிட்டு அபிஷேக நெய் பிரசாதமாக வாங்கி செல்லும் வசதியும் உள்ளது. இதற்காக இங்கு வைக்கப்பட்டிருந்த 100 கிராம் நெய் அடங்கிய 16 ஆயிரம் பாக்கெட் மாயமாகியுள்ளது. இதன் மதிப்பு 16 லட்சம் ரூபாய் ஆகும். இது தொடர்பாக சபரிமலை செயல் அலுவலர் பிஜு கொடுத்த அறிக்கையின் பேரில் விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஒரு பூஜாரி மற்றும் சில ஊழியர்களுக்கு இதில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. சபரிமலையில் தங்கத் தகடுகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த சீசனில் பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. தற்போது அரவணை பிரச்னை, நெய் காணாமல் போன விவகாரம் போன்றவையும் விஸ்வரூபம் எடுத்துள்ளன.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்