உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
உத்திரமேரூரில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடப்பாண்டு சித்திரை மாத பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது. விழாவையொட்டி காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின், வேத மந்திரங்கள் முழங்க கோவில் கொடி மரத்தில் கருட கொடி ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தர வரதராஜ பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை 9:00 மணிக்கு உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே, கங்கைகொண்டான் மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதை தொடர்ந்து, பஜார் வீதி வழியாக வலம் வந்த சுவாமியை பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். வீதியுலா முடிந்து காலை 11:00 மணிக்கு கோவிலை அடைந்தார். விழாவின் தொடர்ச்சியாக வரும் 26ம் தேதி கருட சேவையும், 30ம் தேதி தேரோட்ட விழாவும் நடைபெறுகிறது.