பகவானை மிஞ்சும் ராம நாமம்



திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் – - ஸ்ரீவீரராகவபெருமாள் கோவில் வைகாசி தேர்த்திருவிழா கலை நிகழ்ச்சிகளின் முத்தாய்ப்பாக, ‘ஸ்ரீ சுந்தரகாண்டம்’ என்ற தலைப்பில் இன்னிசை சொற்பொழிவு நடந்தது. சுந்தர காண்டத்தின் நெஞ்சை உருக்கும் பாடல்களைக் குழுவினர் பாட, அதற்கிடையே ராம நாமத்தின் மகிமைகளைத் தனக்கே உரிய பாணியில் விவரித்தார் திருப்பூர் கம்பன் கழக செயலாளர் ராமகிருஷ்ணன்.

அவர் கூறியதாவது:

ராமன் நேரடியாக இறைவனாக வந்து சிம்மாசனத்தில் அமரவில்லை. தசரதனின் மகனாக, சாதாரண மனிதனாகப் பிறந்து, தன் துாய வாழ்க்கையால் இறைவனாக வளர்ந்து காட்டியவர். மனிதனாகப் பிறந்த ஒருவனும் கடவுளாக வாழ முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தவர். அறத்தின் வழி நின்று வாழ்வது, ஒழுக்கத்தைக் காப்பது, வாய்மைக்காகத் தன் இன்னுயிரையும் துச்சமாக மதிப்பதே மனிதனைத் தெய்வமாக்கும் ரகசியம்.

அகண்ட பிரபஞ்சத்தில் எத்தனையோ நாமங்கள் இருந்தாலும், ‘ராம’ என்ற இரண்டெழுத்து மந்திரத்திற்குத் தனித்துவமான மகிமை உண்டு. எல்லா நாமங்களும் நாம் கேட்பதைக் கொடுக்கும்; ஆனால், நாம் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களைச் சாம்பலாக்குவது ராம நாமம் மட்டுமே! மற்ற நாமங்களுக்குப் பாவத்தைப் போக்கும் வலிமை இருக்கலாம், ஆனால் ஒருவரின் சாபத்தையே போக்கும் பேராற்றல் கருணை நிறைந்த ராம நாமத்திற்கு மட்டுமே உண்டு. எனவே, அனுதினமும் ராம நாமம் ஜெபிப்பதே நற்கதிக்கான வழி.

இவ்வாறு அவர் பேசினார்.

பாடல்களுக்கு இடையே சொற்பொழிவு என்ற மாறுபட்ட முயற்சி குறித்து ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, வழக்கமான சொற்பொழிவுகளில் இருந்து விலகி புதுமையாகச் செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் சிந்தனையின் விளைவுதான் இது. பாடகியர் விசாலாட்சி, ஆனந்தி ஆகியோருடன் இணைந்து இதனை நடத்தினேன். இன்னிசை சொற்பொழிவு என்றால் ஏகப்பட்ட வாத்தியங்கள் இருக்க வேண்டும் என்பதில்லை; சுரேந்திரனின் ஒரேயொரு மிருதங்கத்தை வைத்தே இந்த முழுமையான இசை வடிவத்தைக் கொண்டு வந்துள்ளோம். இப்புதிய முயற்சிக்குக் கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களிலும் இதனைத் தொடரத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்