கலிங்கநாதேஸ்வரர் கோவில் குளம் செடிகள் சூழ்ந்து சீரழியும் அவலம்



கடம்பத்துார்: இருளஞ்சேரி ஊராட்சியில், செடிகள் சூழ்ந்து சீரழிந்து வரும் கலிங்கநாதேஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கடம்பத்துார் ஒன்றியம், இருளஞ்சேரி ஊராட்சியில், 1,500 ஆண்டுகள் பழமையான, சோழர் காலத்தில் கட்டப்பட்ட அன்னை தாயினும் நல்லாள் காமாட்சி சமேத கலிங்கநாதேஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் எதிரே, கோவிலுக்குச் சொந்தமான குளம் உள்ளது. இந்த குளத்து நீரை கொண்டு தான், சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் நடந்து வந்தது. நாளடைவில், இந்த குளத்தின் கரைகள் சேதமடைந்ததால், சுற்றிலும் முட்செடிகள் வளர்ந்து குளம் நாசமானது. தற்போது, கோவிலில் நடைபெறும் அபிஷேகத்திற்கு குளத்து நீரை பயன்படுத்துவதில்லை. கோவில் குளத்தை சீரமைப்பது குறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு பலமுறை புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த கோவில் குளம், எப்போதுமே வற்றாமல் நீர் நிறைந்து இருக்கும் என, இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், தற்போது செடிகள் வளர்ந்து சீரழிந்து இருப்பது, பக்தர்கள் மற்றும் பகுதி மக்களிடையே மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கலிங்கநாதேஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்கவும், குளத்தை சுற்றி வேலி அமைக்கவும், ஹிந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள், இருளஞ்சேரி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்