ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆக. 12ல் நடக்கிறது. இந்நாளில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆக. 8 முதல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இக்கோயிலில் ஆக. 10ல் பிரதோஷம், ஆக. 11ல் சிவராத்திரி, ஆக 12-ல் ஆடி அமாவாசை வழிபாடு நடக்கிறது இதனை முன்னிட்டு அன்று காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி என நான்கு கால பூஜைகளும், 18 வகை அபிஷேகமும் நடக்கிறது. தற்போது மாதாந்திர அமாவாசை, பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த பல ஆயிரம் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் ஆக. 8 முதல் 13 வரை 6 நாட்கள், அதிகாலை 4:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மலையேற அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் அமாவாசை அன்று ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்க முடியுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அக்னி நட்சத்திரத்தை விட மிகவும் அதிகமாக இருப்பதாலும், நீர்வரத்து ஓடைகள் வறண்டு காணப்படுவதாலும் போதிய அளவிற்கு குடிநீர், உணவு, உயிர் காக்கும் மருத்துவம், தீயணைப்பு உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளை போதிய அளவிற்கு செய்து தர கோவில் நிர்வாகமும், மதுரை, விருதுநகர் மாவட்ட அரசு நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.