பாலக்காடு; குருவாயூர் தேவஸ்வத்தின் சார்பில் பக்தர்களின் வசதிக்காகப் புதுப்பிக்கப்பட்ட கவுஸ்துபம் ஓய்வு இல்லம், வரும் 28ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு நடைபெறும் விழாவில், தேவஸ்வம் துறை அமைச்சர் முரளீதரன் கலந்துகொண்டு ஓய்வு இல்லத்தைத் திறந்து வைக்கிறார். தேவஸ்வம் தலைவர் கோபிநாத் விழாவிற்குத் தலைமை தாங்குகிறார். பக்தர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் உயர்தரமான தங்கும் வசதிகளை வழங்கும் நோக்கில், 13.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஓய்வு இல்லம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளை ஊராளுங்கல் லேபர் கான்ட்ராக்ட் சொசைட்டி மேற்கொண்டது. தேவஸ்வத்தின் சிவில் மற்றும் மின்சாரப் பிரிவு அதிகாரிகள் இப்பணிகளை நேரடியாக மேற்பார்வையிட்டனர். மொத்தம் 50,300 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஓய்வு இல்லத்தில், கீழ்க்கண்டவாறு மொத்தம் 97 அறைகள் பக்தர்களின் பயன்பாட்டிற்காகத் தயார் செய்யப்பட்டுள்ளன: அறையின் வகை எண்ணிக்கை 2 படுக்கைகள் கொண்ட ஏசி அறை 23, 2 படுக்கைகள் கொண்ட ஏசி அல்லாத அறை 45, 3 படுக்கைகள் கொண்ட ஏசி அல்லாத அறை 8, 4 படுக்கைகள் கொண்ட ஏசி அல்லாத அறை 5, 6 படுக்கைகள் கொண்ட ஏசி அல்லாத அறை 16 என மொத்தம் 97 அறைகள் உள்ளது. இந்த புதிய வசதியை குருவாயூர் வரும் பக்தர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்று தேவஸ்வம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.