கல்பாத்தி தேர்த்திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்



பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு புகழ்பெற்ற கல்பாத்தி தேர்த்திருவிழா நவ. 7 முதல் 17ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கோவில் நிர்வாகிகள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரிடம் விரிவான கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.


நவ. 8ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான முதலாம் நாள் தேரோட்டம் நவ. 14-லும், இரண்டாம் நாள் தேரோட்டம் நவ. 15-லும் நடைபெறும். தேவ ரத சங்கமம் நவ. 16ம் தேதி நடைபெறவுள்ளது. திருவிழாக் காலங்களில் பாதுகாப்பு, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த முறையான கட்டமைப்பு, வாகன நிறுத்துமிட வசதி, ஆற்றுப்படுகை உள்ளிட்ட பகுதிகளில் போலீசாரின் தொடர் ரோந்துப் பணி, ஆற்றைத் தூய்மைப்படுத்துதல், பயோ-டாய்லெட் வசதிகள், சாலை சீரமைப்பு, தேர் வலம் வரும் பாதையில் தடையாக உள்ள கேபிள்களை அகற்றுதல், மின் கம்பங்களுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு விசாலாட்சி சமேத விஸ்வநாதசுவாமி கோவில் நிர்வாக அறங்காவலர் சுஜித் குமார் வர்மா தலைமை தாங்கினார். புதிய கல்பாத்தி மந்தக்கரை மகா கணபதி கோவில் தலைவர் கிருஷ்ணா, பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் கோவில் நிர்வாக அறங்காவலர் மகேஷ் கிருஷ்ணன், சாத்தபுரம் பிரசன்ன மகா கணபதி கோவில் செயலாளர் முரளி ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் நிர்வாகிகள் ராஜேந்திர வர்மா, பிரசோப், அஜித், சீனிவாசன், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


விழாவின் ஒரு பகுதியாக சதுர்வேத பாராயணம், சிறப்பு பூஜைகள், சுவாமி புறப்பாடு மற்றும் ஐந்தாம் திருநாள் பல்லக்கு-ரத சங்கம வைபவங்கள் நடைபெறவுள்ளன. திருவிழா அழைப்பிதழ் அக். 8ம் தேதி மாலை 6:30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டின் மாயவரம் மயூரநாதர் கோவில் வழிபாட்டு மரபின்படி இவ்விழா கொண்டாடப்படுவதால், அக். 24, 25 தேதிகளில் கல்பாத்தி கோவில் பிரதிநிதிகள் மாயவரம் சென்று வழிபாடுகளை மேற்கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்